Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 2 July 2016

இன்றைய புனிதர் 2016-07-03 புனித தோமையார் (Apostle Thomas) இந்தியாவின் திருத்தூதர், மறைசாட்சி

          
                இன்றைய புனிதர் 2016-07-03

புனித தோமையார் (Apostle Thomas)

இந்தியாவின் திருத்தூதர், மறைசாட்சி


பாவம் தோமா! உயிர்த்த ஆண்டவரைக் காண்பதற்கு அவர் போட்ட நிபந்தனை அவருக்கு ஒரு பட்டப் பெயர் சூட்டப்படக் காரணமாயிற்று. "ஐயப் பேர்வழி" என்றே இன்றுவரை உலகம் அழைக்கின்றது. ஆனால், " அவர் நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்" என்று விசுவாச அறிக்கை வெளியிட்டதுபோல வேறு யாரும் அவ்வளவு மனம் விட்டு அறிக்கையிடவில்லை. இவர் நமக்கு ஓர் உருக்கமான, விசுவாசம் நிறைந்த செபத்தை அமைத்து கொடுத்து, இச்செபத்தை நாம் பொருள் உணர்ந்து சொல்லும் போதெல்லாம் நமது பற்றுறுதி மெருகேற்ற ப்படுகிறது. "காணாமல் நம்புவோர் பேறுபெற்றோர்" என்று கூறிய உயிர்த்த ஆண்டவர், உலகமுடியும் வரை தம்மில் விசுவாசம் கொள்வோர் பேறு பெற்றோர் என்று தெளிவுபடுத்துகிறார். நாம் இந்த விசுவாசக் குடும்ப  த்தை சேர்ந்தவர்கள் என்பது ஆறுதல் அளிக்க வேண்டும்.

தோமா ஆண்டவரிடம் ஒரு தனிப்பற்றுதல் கொண்டி ருந்தார். நாமும் ஆண்டவருடன் சென்று அவரோடு சாக வேண்டியிருந்தாலும் தயாராய் இருப்போம் என்று கூறியவர். தோமா ஆண்டவரின் விண்ணேற்பிற்கு பிறகு சென்று போதியுங்கள் என்ற அவரின் கட்ட ளையை நிறைவேற்ற புறப்படுகிறார். யுசிபியுஸ் என்ற புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். "அப்போஸ்தலர் யூதா ததேயுவை எடெஸ்ஸாவிலிருந்த அப்கர் என்ற அரசனுக்கு திருமுழுக்கு கொடுக்க அனுப்பியபின் தமக்கென பார்த்தியா மீட்ஸ், பெர்ஷியா இன்னும் பல அண்டை நாடுகளை தெரிந்துகொண்டு மறைபரப்பு பணியாற்றினார். தோமா. அப்போதுதான் இந்தியா வந்தார். "தோமாவின் பணிகள்" என்ற ஒரு நூல் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியிலேயே மக்களிடம் இருந்ததாக ஆதாரம் இருக்கிறது.

கொண்டோபெர்னஸ்(Condoberns) அல்லது குடுப்பாரா(Cudupara) என்ற மன்னரது ஆட்சி 46 ல் பெஷாவர் வரை பரவிக்கிடந்தது. பஞ்சாபிலிருந்து கொச்சின், திருவிதாங்கூர் சிற்றரசு வரைக்கும் பரவியிருந்தது. அதிலிருந்து " புனித தோமாவின் கிறிஸ்தவர்கள்" என்றே இப்பகுதியினர் அழைக்கப்பட்டு வந்தனர். தங்களுடைய திருவழிபாட்டுக்கு "சீரியக்" என்ற மொழியையே அன்று முதல் இன்றுவரை பயன்படுத்தியதோடல்லாமல் இன்று வரை "சீரியன் கிறிஸ்தவர்கள்" என்றும் அழைக்கப்படுகிறார்கள். சீரியக் மொழி உறுதியாக பெர்ஷியா, மெசப்பொத்தேமியா பகுதிகளிலுருந்து இறக்குமதியானது. தோமா முதன் முதலில் கிராங்கனூர் கடற்கரையை வந்தடைந்தார் எனவும், மலபாரில் மட்டும் 7 ஆலயங்கள் எழுப்பினார் எனவும், பின்னர் குமரி கடற்கரை வழியாக சென்னை வந்தடைந்தார் எனவும், அங்கே பலரையும் மனந்திருப்பிய பின் "சிறிய மலை" என்ற பெயர் கொண்ட இடத்தில் குத்திக் கொல்லப்பட்டார் எனவும் வரலாறு கூறுகின்றது. அவர் மைலாப்பூரில் அடக்கம் பண்ணப்பட்டதற்கு கல்லறை ஆதாரங்களும் உள்ளது.

1522 ஆம் ஆண்டு போர்த்துகீசியர் சென்னை வந்தபோது, அவரது கல்லறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்த பொருட்கள் மைலாப்பூரில் சாந்தோம் பேராலயத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இவரின் திருப்பண்டங்கள் பலவும் 4 ஆம் நூற்றாண்டில் எடெஸ்ஸாவுக்கு(Edesta) கொண்டு செல்லப்பட்டதாக "தோமாவின் பணிகள்" என்ற நூலில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மெசப்பொட்டேமியாவுக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் எடெஸ்ஸாவிலிருந்து பின்னர் அப்ரூஸ்ஸியில் உள்ள ஓர்டோனாவிற்கு(Ordon) எடுத்து செல்லப்பட்டு இன்றுவரை புனிதமாக காப்பாற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! புனித தோமா நீரே என் ஆண்டவர் என்று ஏற்றுக்கொண்டதுபோல, நாங்களும் உம்மை எம் வாழ்வில் ஏற்று, பாதுகாவலாக கொண்டு, உம்மில் எம் வாழ்வை பயணமாக்க வரம் தாரும்.

No comments:

Post a Comment