Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 4 July 2016

இன்றைய புனிதர் 2016-07-05 புனித அந்தோனி மரிய சக்கரியா குரு

                      

                இன்றைய புனிதர்           2016-07-05

                     புனித அந்தோனி மரிய சக்கரியா      குரு

பிறப்பு 1503                இறப்பு 1539

மார்ட்டின் லூத்தர் ஓர் கத்தோலிக்க, துறவற சபை குருவாக இருக்கும்போது திருச்சபையில் நிலவிய பலவித தீமைகளை சுட்டிக்காட்டி திருச்சபையை விட்டு வெளியேறினார். புனித அந்தோனி மரிய சக்கரியா, திருச்சபைக்குள் இருந்துகொண்டே தம் ஈகை இரக்க செயல்களாலும், தமது புனித வாழ்க்கையாலும் பலரை மனந்திருப்பினார். அத்தோடு ஆண்களுக்கும், பெண்களுக்கும் துறவற சபைகளை நிறுவினார். அப்போது அச்சபையின் அவலங்களை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு மாபெரும் வெற்றியும் கண்டார்.

இவரின் தாய் இவருக்கு 18 வயது நடக்கும்போது விதவையானார். அதிலிருந்து அவர், மகனின் ஆன்மீக வாழ்வில் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தார். நோயினால் தாக்கப்பட்ட ஏழை எளியோரை குணப்படுத்தும் நோக்குடன் சக்கரியா, பதுவை பல்கலைகழகத்தில் மருத்துவக்கலை பயின்று பட்டம்பெற்றார். மக்களின் உடல்நிலையை மட்டுமல்லாது, உள்ளத்து நோய்களையும் குணமாக்க வேண்டுமென எண்ணி, வேத கலையையும் கற்றார். இவர் 1530 ஆம் ஆண்டில் குருப்பட்டம் பெற்றார். பிறகு "பர்ணபைட்ஸ்" (Barnabites)என்ற பெயர் கொண்ட ஒரு துறவற சபையை நிறுவினார். மிலான் நகரில் புனித பர்னபாஸ் ஆலயத்தில் இவர் தமது அலுவலகத்தை அமைத்துக் கொண்டதால் அப்பெயரை தமது சபைக்கு கொடுத்தார். இவரது தூண்டுதலின் பேரில், லூயிசா டொரெல்லா என்ற ஒரு செல்வந்தர் "ஏஞ்சலிக்கல்ஸ்"(Engelicals) என்ற பெயர் கொண்ட பெண்களுக்கான துறவற சபையை நிறுவினார். இச்சபையின் சிறப்பு நோக்கம், தவறிச் சென்று, பள்ளத்தில் விழுந்து கிடக்கும் பெண்களை மீட்பதும், அவர்களுக்கு புதிய சிந்தனைகளையும் உயரிய கண்ணோட்டங்களை கொடுப்பதுமாக இருந்தது. இத்தகைய அரும்பணி மக்களிடையே, நல்ல வரவேற்பை பெற்றபின், சக்கரியா தமது36 ஆம் வயதில் விண்ணக வாழ்வை அடைந்தார். அடிக்கடி திவ்விய நன்மை வாங்குவது, 40 மணி நேரம் திவ்விய நற்கருணை திருமணி ஆராதனை போன்ற ஆன்மீக முயற்சிகளையும் முதலில் இவரே தோற்றுவித்தார்.

"நமக்கு கிடைத்த தேவ அழைத்தலின் வழியாக இறைவன் எவ்வளவு நம்மிடம் எதிர்பார்க்கின்றார் பாருங்கள்; திருத்தூதர்களையும், மறைசாட்சிகளையும் பின்பற்ற நாம் முன்வந்துள்ளோம்; ஆனால் அவர்களுக்கும், நமக்கும் உள்ள இடைவெளியை பாருங்கள்; அவர்களடைந்த வேதனைகளை நாம் ஒதுக்கிவிட கூடாது" என்பதை இப்புனிதர் தம் சபையினருக்கு அறிவுரையாக தந்தார்.


செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! இன்று மருத்துவ துறையில் இருக்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். உடல் அளவில் மட்டுமில்லாமல், மனதளவிலும் பங்குபெற்று, நோயாளிக்கு பணிபுரிய உம் ஆசீர் தாரும். நோய்களை குணமாக்கக்கூடிய வல்லமையை நீர் தந்து, எம் பணிகளின் வழியாக உம்மை பறைசாற்றிட வரம் தாரும்.

No comments:

Post a Comment