Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 29 February 2016
இன்றைய புனிதர் 2016-03-01 திருக்காட்சியாளர் யோஹான்னா மரியா போனோமோ Johanna Maria Bonomo OSB
இவர் கிளரிசியன் சபைச் சகோதரிகளால் வளர்க்கப்பட்டார். 1622 ஆம் ஆண்டு, புனித பெனடிக்டின் சபையில் சேர்ந்து தனது வார்த்தைப்பாடுகளைப் பெற்று துறவியானார். ஏறக்குறைய 50 வருடங்கள் மிகச் சாதாரணத் துறவியாக வாழ்ந்தார். அதன்பிறகு நவத்துறவகத்திற்கு பொறுப்பேற்று, நவத்துறவிகளை கவனித்து பராமரித்து வந்தார். 3 முறை இல்லத்தின் பொறுப்பாளர் துறவியாகவும் இருந்தார். இவர் தனது வாழ்நாளின் இறுதிவரை கடினமான நோயால் தாக்கப்பட்டு, உடல் அளவிலும், உள்ள அளவிலும் வேதனைகளை அனுபவித்தார். பொறுமையுடன் தன் உடல் வலிகளைத் தாங்கி இடைவிடாது செபித்தார். இவர் நோயுற்றிருந்தபோது நோய்களைத் தாங்கும் வல்லமையையும், சக்தியையும் திருக்காட்சியின் வழியாகப் பெற்றார். இவர் தான் கண்ட திருக்காட்சிகளை கைப்பட எழுதினார். இவைகள் அனைத்தும் அச்சிடப்பட்டு, இதன் வழியாக ஆண்டவரின் நற்செய்தி பரவியது என்று கூறப்படுகின்றது.
Saturday, 27 February 2016
இன்றைய புனிதர் 2016-02-28 குரு தானியேல் புரோட்டியர் Daniel Brottier CSSP

இன்றைய புனிதர் 2016-02-28
குரு தானியேல் புரோட்டியர் Daniel Brottier CSSP
பிறப்பு 7 செப்டம்பர் 1876,பிரான்சு
இறப்பு 28 பிப்ரவரி 1936, அவ்டேயுல் Auteuil, பிரான்சு
முத்திபேறுபட்டம் : 25 நவம்பர் 1984 திருத்தந்தை 2 ஆம் ஜான்பால்
இவர் அவ்டேயுஸ் என்ற நகரில் கைவிடப்பட்டவர்களுக்கென இல்லம் ஒன்றை நிறுவினார். உலகின் எப்பகுதியிலும் இருந்த ஆயிரக்கணக்கான கைவிடப்பட்ட இளைஞர்களை ஒன்று சேர்ந்து வாழ்விற்கு வழிகாட்டினார். பல்வேறு நிறுவனங்களில் வாழ்ந்த இளைஞர்களுக்கு தன் இரத்தத்தை ஈந்து வழிகாட்டி அவர்களின் ஆன்மீக குருவாகத் திகழ்ந்தார். இவர் கடுமையான நோயால் தாக்கப்பட்டதால் 1911 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டிற்குச் சென்று அங்கும் பல்வேறு இளைஞர்களின் குழுவை ஏற்படுத்தினார். இவர் தான் இறக்கும் வரை ஏழைக்குழந்தைகளுக்காகவும் இளைஞர்களுக்காகவுமே வாழ்ந்தார்.
செபம்:
நோயாளர்களின் ஆரோக்கியமே எம் தந்தாய்! இவ்வுலகில் பல்வேறு நோய்களினால் தாக்கப்படுகின்ற எம் சகோதர சகோதரிகளை குணமாக்கியருளும். அவர்கள் தங்களின் நோய்களைத் தாங்கும் உடல் வலிமையையும் உள்ள பலத்தையும் தந்து, வாழ்வில் நம்பிக்கையுடன் வாழ செய்தருள நீர் உதவிட வேண்டுமென்று அருள்தந்தை தானியேல் புரோட்டியர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்
இன்றைய புனிதர் 2016-02-27 துறவி பிரான்செஸ்கோ பொசெண்டி Francesco Possenti CP

இன்றைய புனிதர் 2016-02-27
துறவி பிரான்செஸ்கோ பொசெண்டி Francesco Possenti CP
பிறப்பு 1 மார்ச் 1838,அசிசி, இத்தாலி
இறப்பு 27 பிப்ரவரி 1862,
இஸோலா டெல் கிரான் சாசோ Isola del Gran Sasso, இத்தாலி
புனிதர்பட்டம்: 13 மே 1920 திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட்
இவர் ஸ்பொலேட்டோ Spoleto நகரில் வாழ்ந்த இயேசு சபை குருக்களால் வளர்க்கப்பட்டார். ஆனால் இவர் தன் சிறுவயதிலிருந்தே எளிமையான வாழ்வை வாழ்ந்தார். தனக்கென்று ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு வாழ்ந்தார். 1856 ஆம் ஆண்டு ஒரு நாள் திடீரென்று அன்னை மரி உருவம் கண்ட புகைப்படம் ஒன்றைக் கண்டார். அன்றே அவர் திருப்பாடுகளின் சபையில் Passionistenorden சேர்ந்தார். அச்சபையில் சேர்ந்த ஒரு வருடம் கழித்து துறவற வார்த்தைப்பாடுகளைப்பெற்று தன் பெயரை கபிரியேல் என்று மாற்றிக்கொண்டார்.
இவர் இறையியல் மற்றும் தத்துவ இயலைப்பற்றி படித்து அவற்றில் பட்டமும் பெற்றார். இவர் அன்னைமரியாவை பற்றி பெருமளவில் போதித்தார். இவர் அன்னைமரிக்காகவே தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தார். இவர் இறந்ததும் இவரின் உடல் வியாகுல் அன்னையின் பேராலயத்தில் புதைக்கப்பட்டது. இவ்வாலயம் இன்று புனிதத் தலமாக காட்சியளிக்கின்றது.
செபம்:
அரும்பெரும் செயல்கள் புரியும் வல்லவராம் எம் தந்தையே இறைவா! அன்னை மரியின் மீது அன்புகொண்டு வாழச் செய்தருளும். நாங்கள் வலுவற்றவர்களாயினும் வல்லமை மிக்க அவருடைய பரிந்துரையினால் பாவ நிலையைவிட்டு நாங்கள் எழச் செய்தருளும். அருள்மிகப்பெற்ற அன்னை எம்மோடு என்றும் இருந்து வழிநடத்திட அருள் தாரும்.
Friday, 26 February 2016
இன்றைய புனிதர் 2016-02-26 பூக் நகர் துறவி எடிக்னா, Edigna von Puch

இன்றைய புனிதர் 2016-02-26
பூக் நகர் துறவி எடிக்னா, Edigna von Puch
பிறப்பு 11 ஆம் நூற்றாண்டு,பிரான்ஸ்
இறப்பு 26 பிப்ரவரி 1109, பூக் Puch, பவேரியா
பாதுகாவல் : திருடர்கள் மற்றும் விஷபூச்சிக்கடியிலிருந்து
இவர் பவேரியாவிலுள்ள உள்ள பியூர்ஸ்டன்பெல்டுபூர்க் Fürstenfeldbruck என்ற ஊரில் எவராலும் வாழ முடியாத ஒரு வாழ்வை வாழ்ந்து வந்தார். இவர் அரசர் முதலாம் ஹென்றி என்பவரின் மகள் என்று கூறப்படுகின்றது. இவர் தனது இளம் பருவ வயதில் பிரான்சு நாட்டிலிருந்து பயணம் ஒன்றை மேற்கொண்டார். எனவும், அப்பயணத்தின் போதுதான் பவேரியா வந்து சேர்ந்தார் என்றும் இவரின் வரலாறு கூறுகின்றது, அப்போது அங்கு இவர் மிக கடினமான ஓர் சூழ்நிலையில் உதவி செய்ய யாருமற்றவராய் வாழ்ந்துள்ளார். அப்போதுதான் கையில் ஒரு பெரிய மணியுடன் கடவுள் உருவத்துடன் ஒளி ஒன்று தென்பட்டதை கண்டுள்ளார்.
அப்போது அம்மணியானது சப்தமாக தானாகவே ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அத்துடன் எடிக்னாவை எங்கும் நகர்ந்து செல்லாமல் அவ்விடத்திலேயே நிற்கக் கூறியுள்ளது. இவற்றைக் கண்ட எடிக்னா அது கடவுள்தான் என்பது என்பதை முழுமையாக நம்பினார். அன்றிலிருந்து இவர் எளிமையான வாழ்ந்து கடுந்தவ வாழ்வை மேற்கொண்டு தனிமையாகவே வாழ்ந்து வந்துள்ளார். ஏறக்குறைய 35 ஆண்டுகள் மிகச் சிறியதோர் இடத்தில் வாழ்ந்துள்ளார்.
இவர் மேலும் தான் வாழ்ந்த வீட்டின் அருகில் இருந்த வீடுகளுக்கும் ஊர்களுக்கும் சென்று விசுவாசத்தைப் பற்றி போதித்து வந்துள்ளார். பிறகு எழுதவும், படிக்கவும் தெரிந்துக்கொண்டு விலங்குகளை பராமரிப்பது எப்படி? என்பதை பற்றி மற்றவர்களுக்க்கு கற்றுக்கொடுக்கும் கல்வியைக் கற்றுள்ளார்.
செபம்:
தூயவரானத் தந்தையே! நீர் ஒவ்வொருவரின் வாழ்வையும் மாற்றி அமைக்கின்றீர். அரசர் குடும்பத்தில் பிறந்தவரென்பதால் கால் போன போக்கில் சென்றடைந்த எடிக்னாவின் வாழ்வை மாற்றியுள்ளீர். இன்றைய உலகில் தாறுமாறான ஒழுக்கமின்றி வாழும் இளைஞர்களை நீர் தடுத்தாட்கொள்ளும். அவர்களின் தவறான வாழ்வை திசை திருப்பி உம்மை பின்செல்ல வழிகாட்டியருள் வேண்டுமென்று எடிக்னா வழியாக உம்மை மன்றாடுகின்றோம்
Thursday, 25 February 2016
இன்றைய புனிதர் 2016-02-25 துறவி வால்பூர்கா Walburga OSB
b
இன்றைய புனிதர் 2016-02-25
துறவி வால்பூர்கா Walburga OSB
பிறப்பு 710, இங்கிலாந்து
இறப்பு 25 பிப்ரவரி 779, ஹைடன்ஹைம் Heidenheim, பவேரியா
பாதுகாவலர்: ஐஷ்டேட் மறைமாவட்டம் Eichstatt, விவசாயிகள், வீட்டு விலங்குகள், நாய்கடி, விஷபூச்சிக்கடியிலிருந்து
இவர் வேசெக்ஸ் ரிச்சர்ட் Richard von Wessex என்பவரின் மகள். புனித உன்னா Wunna, வில்லிபால்டுWillibald, உன்னிபால்டு Wunnibald என்பவர்களின் உடன் பிறந்த சகோதரி, இவர் விம்போர்னே Wimborneஎன்றழைக்கப்பட்ட துறவற இல்லத்தில் லியோபா Lioba என்பவருடன் சேர்த்து வளர்க்கப்பட்டார். வால்பூர்களின் தாயின் சகோதரரின் விருப்பப்படி இங்கிலாந்திலிருந்து ஜெர்மனி நாட்டிற்கு வரவழைக்கப்பட்டு, 750 ஆம் ஆண்டு துறவற இல்லத்தில் சேர்ந்தார். இவர் டவ்பர்பிஷோவ்ஸ்ஹைம் Tauberbischofsheim என்ற துறவற இல்லத்தில் இருக்கும்போது துறவியானார்.
இவரின் அண்ணன் உன்னிபால்டு 761 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதனால் அவர் தொடங்கிய இரு துறவற சபைகளையும் வால்பூர்கா பொறுப்பேற்று நடத்தினார். இவர் தனது பக்தி நிறைந்த ஞானம் மிகுந்த தன் பணியாலும் சொல்வன்மையாலும் ஹைடன்ஹைம் நகர் மக்களின் மனங்களில் பதிந்தார். இவர் இறந்த பிறகும் ஐரோப்பா கண்டத்தில் பல நாடுகளில் இவரின் பணியைப்பற்றி பெருமளவில் பேசப்பட்டது. இவர் கண்காணித்து வழிநடத்திய சபைகள், தீப்போல ஐரோப்பாவில் பரவியது. இன்றும் இவருக்கு ஐரோப்பாவில் சிறப்பான வணக்கம் செலுத்தப்படுகின்றது.
செபம்:
உறவின் ஊற்றே எம் இறைவா! புனித வால்பூர்க்காவின் பெரும் முயற்சியினாலும் சிறப்பான ஜெப வாழ்வாலும் அவரின் வாழ்வில் பல அரிய செயல்களை செய்து வழிநடத்தினீர். இப்புனிதரின் துணையாலும் வேண்டுதலாலும் அவர் வழிநடத்திய சபைகளை காலத்தின் சூழ்நிலைக்கேற்ப தொடர்ந்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Wednesday, 24 February 2016
இன்றைய புனிதர் 2016-02-24 அரசி ஏத்தல்பெர்ட் Ethelbert

இன்றைய புனிதர் 2016-02-24
அரசி ஏத்தல்பெர்ட் Ethelbert
பிறப்பு 6 ஆம் நூற்றாண்டு, கெண்ட் Kent, இங்கிலாந்து
இறப்பு 616, இங்கிலாந்து
இவர் பிரான்சிஸ்கன் அரசி குளோட்விக் Chlodwig என்பவரால் வளர்க்கப்பட்டார். அரசி குளோட்விக் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். ஏத்தல்பெர்ட்டையும் சிறு வயதிலிருந்தே ஆலயங்களுக்கு அனுப்பியும் அனுதின செபத்தின் வழியாகவும், இறைபக்தி கொண்டவராக வளர்த்தெடுத்தார். எதிலும் இறைபக்தியுடன் செயல்பட்ட ஏத்தல்பெர்ட் 596 ஆம் ஆண்டு திருத்தந்தை பெரிய கிரேகோரிடம் தன் நகருக்கு பல மறைபரப்பு பணியாளர்களை தருமாறு கேட்டுக்கொண்டார்.
இவர் தன் நகர் முழுவதிலும் வாழ்ந்த மக்கள் அனைவரையும் விசுவாச வாழ்வில் வளர தூண்டினார். அத்துடன் இங்கிலாந்து நாடு முழுவதிலும் மறைப்பணியாளர்களை நிரப்பி கடவுள் விசுவாசத்தை வளர்த்தெடுத்தார். 601ஆம் ஆண்டு ஏத்தல்பெர்ட் மறைப்பணியாளர்களிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார். இவர் திருமுழுக்கு பெற்றபின் இறக்கும் வரை ஏறக்குறைய 16 ஆண்டுகள் தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து தன் நாட்டு மக்களுக்கு பணிவிடைச் செய்தார்.
செபம்:
இரக்கம் நிறைந்த ஆண்டவரே! சில மறைப்பணியாளர்களின் வாயிலாக இங்கிலாந்து நாடு முழுவதிலும் நற்செய்தியின் ஒளியை பரவச் செய்தீர். அம்மக்களின் உள்ளங்களில் உமது வார்த்தையை ஏற்றுக்கொள்ளவும், உண்மையான நம்பிக்கையைப் பறைசாற்றவும், ஒன்றுபட்டு வாழவும் வரம் தந்தீர். அரசி ஏத்தல்பெர்ட்டைப்போல அடுத்தவர்களை விசுவாச வாழ்வில் வளரச் செய்ய எம்மையும் தயாரித்து, உமது கருவியாய் மாற்றி, சான்று பகிர்ந்திடச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
Tuesday, 23 February 2016
இன்றைய புனிதர் 2016-02-23 மைன்ஸ் பேராயர் வில்லிஜிஸ் Willigis von Mainz
இன்றைய புனிதர் 2016-02-23
மைன்ஸ் பேராயர் வில்லிஜிஸ் Willigis von Mainz
பிறப்பு 10 ஆம் நூற்றாண்டு, நீடர்சாக்சன், ஜெர்மனி
இறப்பு 23 பிப்ரவரி 1011, மைன்ஸ் Mainz, ஜெர்மனி
இவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இளம் பருவத்தைப் பற்றி குறிப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. 970 ஆம் ஆண்டு அரசர் 2 ஆம் ஓட்டோ என்பவர் இவரை மைசன் Meißen நகருக்கு ஆயராகத் தேர்ந்தெடுத்தார். அதன்பிறகு ஆயர் அரசரின் ஆலோசகராகவும் இருந்தார். பிறகு 975 ஆம் ஆண்டு மைன்ஸ் நகரின் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் ஜெர்மனி ஆயர் என்றழைத்த திருத்தந்தை 5 ஆம் கிரகோர் வில்லிஜிஸை உரோமிற்கு மாற்றினார்.
வில்லிஜிஸ் உரோமையில் 1002 ஆம் ஆண்டு அரசர் 2 ஆம் ஹென்றிக்கு அரசராக முடிசூட்டும் பட்டத்தை முன்னின்று வழிநடத்தினார். அதன்பிறகு அரசர் ஜெர்மனியிலுள்ள பாம்பெர்க்கிற்கு தன் இருப்பிடத்தை மாற்ற தேவையான உதவிகளை வில்லிஜிஸ் செய்துக் கொடுத்தார். பின்னர் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக அரசரிடம் பெரிதும் பரிந்து பேசினார். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 30 ஏழைகள் தேவையான அளவு உணவு உட்கொள்ள ஏற்பாடு செய்து உதவினார். இவர் ஏழைகளின் தந்தை என்றழைக்கப்பட்டார்.
இவர் இறந்தபிறகு, மைன்சில் உள்ள புனித ஸ்டீபன் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. செயின் ஸ்டீபன் ஆலயமானது வில்லிஜிஸ் அவர்கள்தான் ஆயராக இருக்கும் எழுப்பினார் என்று கூறப்படுகின்றது.
செபம்:
சில அப்பங்களையும், மீன்களை கொண்டு, பலரின் பசியை போக்கிய எம் தந்தையே! இன்று உணவில்லாமல் வாடும் ஒவ்வொரு மனிதர்களையும் உணவில்லாமல் இறக்கும் குழந்தைகளையும் நீர் நினைவுகூரும். உமது அற்புதத்தாலும், அதிசயத்தாலும் ஏழைகள் ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது வயிராற உண்ண நீர்தாமே உதவிபுரிந்திட வேண்டுமென்று தந்தையே உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.
Monday, 22 February 2016
இன்றைய புனிதர் 2016-02-22 கொர்டோனா நகர் திருக்காட்சியாளர் மர்கரேட்டா Margareta von Cortona OFM

இன்றைய புனிதர் 2016-02-22
கொர்டோனா நகர் திருக்காட்சியாளர் மர்கரேட்டா Margareta von Cortona OFM
பிறப்பு 1247, லவியானோ Laviano, இத்தாலி
இறப்பு 22 பிப்ரவரி 1297,கொர்டோனா Cortona, இத்தாலி
புனிதர்பட்டம்: 1728 திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்
இவர் தனது 16 வயதிலேயே தன் பெற்றோரின் இல்லத்தை விட்டு வெளியேறி ஒரு செல்வந்தர் இளைஞருடன் வாழ்ந்தார். ஒரு நாள் திருடர்கள் அவ்விளைஞனின் வீட்டில் கொள்ளையடித்து சென்றதுடன், அவரையும் கொன்றனர். தன் கண்முன்னால் அக்கொலையைப் பார்த்த மர்கரேட்டா தன் வாழ்வை மாற்றினார். அன்றிலிருந்து தன் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணிக்க எண்ணினார். கொர்டோனா என்ற ஊருக்குச் சென்று புனித பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். அங்கு அவர் மிக கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
இவர் பல சோதனைகளிலிருந்தும் வெற்றி பெற்றபின், ஒருநாள் ஒரு பெரிய கல் இவரின் காலில் மோதியது. அன்றிலிருந்து மீளாத் துயரை அடைந்தார். இதனால் இவர் தனது வார்த்தைப்பாட்டை பெறமுடியாமல் போனது. அதன்பிறகு மர்கரேட்டா, கொர்டோனாவில் ஏழைகளுக்கென்று ஒரு மருத்துவமனையை கட்டினார். அதன்பிறகு3 ஆம் சபை என்ற பெயரில் துறவற இல்லம் ஒன்றை நிறுவினார். அதன்பிறகு பலமுறை திருக்காட்சிகளைப் பெற்றார். இவர் தனது 50 ஆம் வயதிலேயே இறந்தார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல தந்தையே! உம்மீது அன்புக்கொண்டு உமக்காக வாழ்ந்த திருக்காட்சியாளர் மர்கரேட்டாவை இவ்வுலகிற்கு கொடையாக தந்தீர். அவரின் வழியாக ஒரு துறவற சபையை ஏற்படுத்தினீர். அச்சபைத் துறவிகளை ஒவ்வொரு நாளும் காத்து வழிநடத்தும் தூய ஆவியின் வழிகாட்டுதலில் அருட்சகோதரிகள் செயல்பட துணைபுரியும். அச்சபையானது தொடங்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து, பணிபுரிய உதவிட வேண்டுமென்று மர்கரேடா வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Saturday, 20 February 2016
இன்றைய புனிதர் 2016-02-20 துறவி ஜோர்டன் மாய் Jordan Mai OFM

இன்றைய புனிதர் 2016-02-20
துறவி ஜோர்டன் மாய் Jordan Mai OFM
பிறப்பு 1 செப் 1866, பவர், ஜெர்மனி
இறப்பு 20 பிப்ரவரி 1922, டோர்முண்ட் Dortmund, ஜெர்மனி
இவர் 1894 ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து குருவானார். பின்னர் 1904 ஆம் ஆண்டு தனது இறுதி வார்த்தைப்பாட்டைப் பெற்றார். அதன்பிறகு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கும் பொறுப்பை ஏற்றார். 1922 ஆம் ஆண்டு பங்கு ஒன்றில் பணிபுரிய டோர்ட்முண்டிற்கு அனுப்பப்பட்டார். அப்போது ஜனவரி மாதம் 22 ஆம் நாள் அவர் பங்கிலிருந்த துறவற இல்ல ஆலயத்திலிருந்த பலிப்பீடத்தை திருடர்கள் திருடி சென்றனர். அப்போது அவர் கடவுளை நோக்கி கண்ணீர் விட்டு மன்றாடினார். பின்னர் தன்னுடன் இருந்த மற்ற சகோதரர்களிடம் இன்னும் ஒரு மாதத்தில் நான் இறந்துவிட நேரிடும் என்று கூறினார், அவர் உரைத்தப்படியே அடுத்த ஒரு மாதத்தில் உயிர் துறந்தார். இவரின் உடல் துறவற இல்லத்திலிருந்த கல்லறையிலேயே புதைக்கப்பட்டது. பிறகு 1950 ஆம் ஆண்டு டோர்ட்முண்டில் முத்திபேறுபட்ட தயாரிப்பு விழா தொடங்கப்பட்டது. அப்போது அவ்விழாவில் ஏறக்குறைய 1,00,000 மக்கள் கலந்துகொண்டு ஆடம்பர் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இவரின் நினைவுநாளில் ஏராளமான மக்கள் டோர்ட்முண்டிலுள்ள பிரான்சிஸ்கன் துறவற இல்லத்திற்கு வந்து திருப்பலியில் கலந்து கொண்டு பல அதிசயங்களைக் காண்கின்றனர்.
செபம்:
அதிசயங்களை செய்பவரே! தனது ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும் பணியால் உம்மோடு இணைந்து உமதன்பை சுவைக்க நீர் ஜோர்டன் மாய்க்கு வாய்ப்பை வழங்கியுள்ளீர். நாங்கள் ஒப்புரவு என்னும் திருவருட்சாதனத்தை தவறாமல் பெற்று தொடர்ந்து உமதன்பின் பிள்ளைகளாக வாழும் பேற்றை எமக்கருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சு மன்றாடுகின்றோம்.
Friday, 19 February 2016
இன்றைய புனிதர் 2016-02-19 பெனவெண்ட்டோ நகர் ஆயர் பார்பாட்டூஸ் Barbatus of Benevento
இன்றைய புனிதர் 2016-02-19
பெனவெண்ட்டோ நகர் ஆயர் பார்பாட்டூஸ் Barbatus of Benevento
பிறப்பு 610
இறப்பு 19 பிப்ரவரி 682, பெனவெண்ட், இத்தாலி
இவர் இத்தாலி நாட்டிலுள்ள பெனவெண்ட்டோ என்ற நகரில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு பெனவெண்ட்டோ Marcona என்ற நகருக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் மறைப்பணியாற்றி பலரை மனந்திருப்பினார். அச்சமயம் 663 ஆம் ஆண்டு பெனவெண்ட்டோ நகரானது அரசன் 2 ஆம் கொன்ஸ்டான்ஸ் என்பவரின் கீழ் கொண்டுவரப்பட்டது, இதனால் பார்பாட்டூஸ் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது. இருப்பினும் இவர் அரசருடன் இணைந்து சுமுகமான முறையில் பணியாற்றி தன் மறைமாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்தினார். இவர் 680 ஆம் ஆண்டு கொன்ஸ்டாண்டினோபிளில் நடந்த பேரவையில் பங்குபெற்று தன் மறைமாவட்டத்திற்காக பரிந்து பேசியுள்ளார்.
செபம்:
அமைதியையும் அருளையும் வழங்கும் எம் தந்தையே இறைவா! தன் மறைமாவட்ட மக்களை என்றும் அமைதியான வாழ்வை வாழ செய்த புனித பார்பாட்டூஸ்சின் வழிகாட்டுதலை எம் மறைமாவட்ட மக்களை என்றும் அமைதியான வாழ்வை வாழ செய்த புனித பார்பாட்டூஸ்சின் வழிகாட்டுதலை எம் மறைமாவட்ட ஆயர்கள் கடைபிடித்து தன்னுடன் இணைந்து பணியாற்றும் அனைவருடனும் சுமூகமான உறவுகொள்ளச் செய்தருள நீர் வழிகாட்டி வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Thursday, 18 February 2016
இன்றைய புனிதர் 2016-02-18 புனித ஆன்கெல்பெர்ட் Angelbert

இன்றைய புனிதர் 2016-02-18
புனித ஆன்கெல்பெர்ட் Angelbert
பிறப்பு 750
இறப்பு 18 பிப்ரவரி 814, ரிக்குயர் Riquier, பிரான்சு
இவர் பிரெஞ்சு நாட்டை பாதுகாக்கும் போர்படையில் பணிபுரிந்தவர். அப்போது டெனிஸ் Danes என்பவன் பிரெஞ்சு நாட்டின் ஆற்றங்கரை ஒன்றில் தங்கி, அந்நாட்டிற்கு எதிராகப் போர் புரிந்தான். அவனை எதிர்த்து ஆன்கெல்பெர்ட் போரிட வேண்டியிருந்தது. அச்சமயத்தில் அவர் புனித ரிக்குயர் என்ற புனிதரின் கல்லறைக்குச் சென்று இப்போரில்தான் டெனிஸ்சிற்கு எதிராக வெற்றிபெற்றால் தான் ஓர் துறவியாகிறேன் என்று செபித்தார். பிறகு இடி, மின்னல் புயல் என்று பாராமல் திடீரென்று டெனிஸ் படையெடுத்தான். ஆன்கெல்பெர்ட் அவனை எதிர்த்து போரிட்டு தன் படையுடன் வெற்றி பெற்றார்.
அவர் பெற்ற வெற்றியானது, அந்நாட்டை எவ்விதத்திலும் பாதிக்காமல் காப்பாற்றப்பட்டது. இதன் விளைவாக கடவுள் இவரின் மன்றாட்டை ஏற்று வெற்றிப் பெறச் செய்ததால் செயிண்ட் ரிக்குயிர் அவர்களின் துறவற இல்லத்திற்குச் சென்று துறவியானார். பின்னர் அச்சபையின் மடாதிபதி பொறுப்பையும் ஏற்று மிகச் சிறப்பாக அச்சபையை வழிநடத்தினார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் இடைவிடாது இரவும் பகலும் செபம் செய்து திருப்பாடல்களைப்பாடி இறைவனை போற்றி புகழ்ந்து இறைவழியில் தன் சபையை வழிநடத்தினார்.
அதன்பிறகு இவர் 24 மணிநேரமும் துறவிகள் கட்டாயமாக செபம் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தினார். கடுமையான விதிமுறை கடைப்பிடிக்கச் செய்தார். புனித கன்னிமரியாள், சூசையப்பர் இவர்களின் செப வாழ்வை வாழ தன் சபைத் துறவிகளிடத்தில் வலியுறுத்தினார். இவர் இறந்தபிறகு ஏறக்குறைய 100ஆண்டுகள் கழித்தும் இவரின் உடல் அழியாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
செபம்:
உலகம் முழுவதையும் படைத்து பராமரித்தாளும் எம் இறைவா! தான் செய்த பணியின் வழியாக தன்னை முழுவதும் உமக்கு அர்ப்பணமாக்கிய புனித ஆன்கெல்பெர்ட்டை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர் வாழ்ந்த ஆன்மீக வாழ்வை நாங்கள் பின்பற்றி சொல் செயல் சிந்தனைகளில் என்றும் உம்மோடு இணைந்து வாழ வரம் தாரும்.
Wednesday, 17 February 2016
இன்றைய புனிதர் 2016-02-17 சபை மாநிலத்தலைவர் லூக்காஸ் பெலூடி Lukas Belludi OFM

இன்றைய புனிதர் 2016-02-17
சபை மாநிலத்தலைவர் லூக்காஸ் பெலூடி Lukas Belludi OFM
பிறப்பு 1200, பதுவை இத்தாலி
இறப்பு 17 பிப்ரவரி 1285, பதுவை இத்தாலி
இவர் ஓர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். 1220 ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் அசிசியாரின் சபையில் சேர்ந்தார். பின்னர் பதுவை நகர் புனித அந்தோனியாரிடம் கல்வி பயின்றார். பெலூடி புனித பிரான்சிஸ்கன் சபையில் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார். இவர் தான் வாழும் போதே கடவுளின் அருளால் பல நோய்களை குணமாக்கினார். சிறப்பாக "புண்களை" குணமாக்குவதில் சிறப்பான வல்லமையைப் பெற்றிருந்தார். இவர் புனித அந்தோனியாரிடம் மிகுந்த நட்பு கொண்டிருந்தார். இதன் விளைவாக அந்தோனியார் இறந்தபிறகு அவரின் பெயரில் 1232 ஆம் ஆண்டு பதுவை நகரில் பேராலயம் ஒன்றை எழுப்பினார். அவர் இவ்வாலயத்தை கட்டிக்கொண்டிருக்கும் போதே கப்புச்சின் சபையின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதுவை நகர் லூக்காஸ் என்று அழைக்கப்பட்டார்.
இவர் இறந்து 100 ஆண்டுகள் கழித்து 1382 ஆம் ஆண்டு பதுவை நகர் லூக்கா என்ற பெயரில் புனித அந்தோனியாரின் பேராலயத்திற்குள்ளேயே ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. 1927 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் திருத்தந்தை 11 ஆம் பயஸ் திருநிலைப்படுத்தி பிரான்சிஸ்கன் சபையின் மறைப்போதகர் என்ற பெயரை அளித்தார்.
செபம்:
எல்லாம் வல்ல கடவுளே! சிறந்த மறைப்போதகரும் நோய்களை குணமாக்குபவரான லூக்காஸ் பெலூடி, உம் பணியை திறம்பட ஆற்ற அருளை வழங்கியுள்ளீர். அவர் எழுப்பிய புனித அந்தோனியாரின் பேராலயத்திற்கு வருகின்ற ஒவ்வொரு மக்களையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உம்மை அண்டி வரும் மக்களுக்கு அருளைப் பொழிந்து வாழ்வை வளமாக்கிட வரம் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Tuesday, 16 February 2016
இன்றைய புனிதர் 2016-02-16 மறைசாட்சி நிக்கேமேடியன் நகர் ஜூலியானா Juliana von Nikomedien,Turkey
இன்றைய புனிதர் 2016-02-16
மறைசாட்சி நிக்கேமேடியன் நகர் ஜூலியானா Juliana von Nikomedien,Turkey
பிறப்பு 285, நிக்கோமேடியன், துருக்கி
இறப்பு 304, நிக்கோமேடியன், துருக்கி
இவர் ஓர் மதிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை மிகுந்த பக்தி கொண்டவர். ஆனால் இவரின் தாய் கடவுள் பக்தியே கடுகளவும் இல்லாதவர். ஜூலியானா தனது சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தியில் வளர்ந்தார். தன் தாய்க்கு தெரியாமல் மறைவாகச் சென்று செபவாழ்வில் ஈடுபட்டார். பல முறை தன் தாயிடம் பொய் கூறிவிட்டு தன் ஊரில் நடக்கும் கிறிஸ்தவ செபக்கூட்டங்களில் பங்கெடுத்தார். இவர் தனது 9 ஆம் வயதிலேயே தான் எலாய்சியுஸ் Eleusius என்றழைக்கப்படும் இளைஞனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கண்ட திருக்காட்சியை தன் தந்தையிடம் எடுத்துரைத்தார்.
ஜூலியானா தனது 18 ஆம் வயதை அடைந்தார். திருமணம் செய்யப்போகும் நாள் வந்தபோது எலாய்சியஸ் என்ற பெயர்கொண்ட ஓர் இளைஞன். இவர் திருமணம் செய்து கொள்ள பெண்கேட்டு வந்தான். ஆனால் அவன் வேறு மதத்தை சார்ந்தவனாக இருந்ததால் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவனாக வாழ்ந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்ற ஜூலியானா அவனை மதம்மாற்றினார். இதனால் மற்ற மதத்தினரால் ஜூலியானா வதைக்கப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு மிகக் கொடுமையான வேதனைகளை அனுபவித்தார். எரியும் இரும்பு ஆலையில் இறக்கப்பட்டார். பிறகு கொதிக்கும் தாரினால் உடல் முழுவதும் ஊற்றப்பட்டு மறைசாட்சியாக மரித்தார். மரித்த பல நூற்றாண்டுகள் கழித்து 1207 ல் இவரின் உடல் நேயாப்பல் Neapelஎன்ற நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
செபம்:
மரித்தோர்க்கெல்லாம் மீண்டும் உயிர்ப்பளிக்கும் எல்லாம் வல்லவரே, உம்மீது கொண்ட அளவில்லா அன்பினால் தன் தாயையும் எதிர்த்து உம்மைப் பின் தொடர்ந்த புனித ஜூலியானாவின் செப வாழ்வின் கண்டு வியப்படைந்து உமக்கு நன்றி கூறுகின்றோம். உமக்கெதிராக செயல்படும் மக்களை நீர் கண்ணோக்கியருளும். அவர்களும் உம்மை அறிந்துக் கொண்டு உமது சாட்சியாகத் திகழ்ந்திட உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Monday, 15 February 2016
இன்றைய புனிதர் 2016-02-15 சபைநிறுவுநர் தெயோடோசியுஸ் புளோரெண்டினி Theodosius Florentini OFM cap

இன்றைய புனிதர் 2016-02-15
சபைநிறுவுநர் தெயோடோசியுஸ் புளோரெண்டினி Theodosius Florentini OFM cap
பிறப்பு 23 மே 1808, முன்ஸ்ரர் Münster, சுவிஸ்
இறப்பு 15 பிப்ரவரி 1865, ஹைடன் Heiden, சுவிஸ்
இவர் அண்டோன் கிறிஸ்பின் Anton Crispin என்ற மற்றொரு பெயரால் அழைக்கப்பட்டார். இவர் சுவிட்சர்லாந்தில் மென்சிங்கர் Menzinger அருள்சகோதரிகள் மற்றும் பார்ம்ஹெர்சிகன் Barmherzigenஅருள்சகோதரிகள் என்ற இரு சபைகளை நிறுவினார். இவர் 1825 ஆம் ஆண்டு தனது 17 வய திலேயே கப்புச்சின் சபையில் சேர்ந்து குருவானார். பின்னர் பலரின் வாழ்வில் ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். அத்து டன் பல குடும்பங்களில் அப்போஸ்தல வாழ்வை அறிமுகப்படு த்தினார். அத்துடன் பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் பல தொழிற்சாலைகளிலும் ஆன்மீக வழிகாட்டியாகப் பணியா ற்றினார்.
இவர் கைவிடப்பட்டவர்களுக்கென்று பல இல்லங்களை நிறுவினார். அதன்பிறகு ஆண்களுக்கென சில மருத்துவப் பயிற்சி பெறும் இல்லங்களை நிறுவினார். இடைவிடாமல் பணியாற்றி பல அச்சிடும் நிறுவனங்களையும், நூலகங்களையும், தொழிற்சாலைகளையும் நிறுவினார். இவர் பல பள்ளிகளை ஒருங்கிணைக்கும் பணியை சிறப்பாக ஆற்றினார். இவர் "மக்களின் மறைப்பரப்பு பணியாளர்" என்றழைக்கப்பட்டார். இவரின் உடல் ஓர் "அப்போஸ்தலிக்க பள்ளியில்" அடக்கம் செய்யப்பட்டது. 1906 ஆம் ஆண்டு அவரின் கல்லறையின் மேல் பார்ம்ஹெர்சியின் சிஸ்டர்ஸ் பேராலயம் ஒன்றை எழுப்பினர்.
செபம்:
எங்களின் அன்பான தந்தையே! தனது பல்வேறு விதமான பணிகளின் வழியாகவும், பல புதிய முயற்சிகளின் வழியாகவும் உம் பணியை திறம்பட ஆற்றிய தெயோடோசியுஸ் அவர்களை எம் முன்னோர்களுக்கு கொடையாக தந்தமைக்காக நாங்கள் உம்மை போற்றிப் புகழ்கின்றோம். அவர் நிறுவிய அனைத்து நிறுவனங்களையும் நீர் தொடர்ந்து வழிநடத்தும். இதன்வழியாக பல ஏழைகள் பயனடைய வழிகாட்டும். அவர் நிறுவிய துறவற சபைகளை உமது சீடத்துவவாழ்வை வாழ, வழிகாட்டிட வேண்டுமாய் தந்தையே உம்மை இறைஞ்சு வேண்டுகின்றோம்.
Saturday, 13 February 2016
இன்றைய புனிதர் 2016-02-14 மறைப்பணியாளர் சிரில் மற்றும் மெத்தோடியுஸ் Cyrillus und Methodius

இன்றைய புனிதர் 2016-02-14
மறைப்பணியாளர் சிரில் மற்றும் மெத்தோடியுஸ் Cyrillus und Methodius
பிறப்பு 9 ஆம் நூற்றாண்டு,தெசலோனிக்கா, கிரேக்க நாடு
இறப்பு சிரில் : 14 பிப்ரவரி 869 உரோம்
மெத்தோடியஸ் : 6 ஏப்ரல் 885 உரோம்
பாதுகாவல் : ஐரோப்பா கண்டம், இடி, மழையிலிருந்து
அரசர் 3 ஆம் மைக்கேல் என்பவர் இவ்விரு குருக்களையும் தன் நாட்டிற்கு மறைபரப்பு பணிக்காக அழைத்தான். இவர்கள் இருவரும் ஸ்லேவிஸ் மொழியை முதன் முதலாகக் கற்றுக்கொண்டு சிறப்பாக மறைப்பணியாற்றினார். பின்னர் ஸ்லேவிஸா மொழியில் சில இலக்கிய நூல்களை எழுதினர். பிறகு சில கிறிஸ்தவ புனித நூல்களையும் ஸ்லேவிஸா மொழியில் மொழிபெயர்த்தனர்.
பலவிதமான மறைப்பரப்பு பணிகளை ஆற்றிய இவர்கள் இருவரும் மேரன் (Mähren) என்ற நகரிலிருந்து உரோம் நகரை நோக்கி பயணம் செய்தனர். அங்கு திருத்தந்தை 2 ஆம் அத்திரியான் Hadrian II, திருத்தந்தை கிளமென்ஸ் அவர்களின் இறந்த உடலை பாதுகாக்கும் பொறுப்பை அளித்தார். பின்னர் அவரைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை இலக்கியமாக வடிவமைக்கும் பணியையும் அளித்தார். இப்பணியை ஆற்ற சிரில் உரோம் நகரிலிருந்து ஒரு துறவற இல்லத்தை தன் இருப்பிடமாகக் கொண்டார். அங்கு 50 நாட்கள் மட்டுமே இலக்கியப் பணியை ஆற்றிய சிரில், கடினமான நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.
பிறகு திருத்தந்தை 2 ஆம் அத்திரியான் மெத்தோடியஸை பனோனியன் Pannonien நகருக்கு பேராயராக தேர்வு செய்தார். அந்நகரில் சிறந்த முறையில் தனது பேராயர் பணியை தொடர்ந்த மெத்தோடியஸ், சால்ஸ்பூர்க்கில்Salzburg, கைதியாக பிடித்துக்கொண்டு போகப்பட்டார். பிறகு திருத்தந்தை 8 ஆம் யோஹானஸ் அவர்களால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு 873 ஆம் ஆண்டு மீண்டும் பேராயர் பணியை தொடர அனுமதிக்கப்பட்டார். இவர் ஸ்லேவிஸ் மொழியில் தனது மறைப்பணியை தொடர்ந்தாற்றினார். இதனால் சிலரின் எதிரியாகவும் மாறினார். இதனால் திருச்சபையில் பல குழப்பங்கள் ஏற்பட்டது, இவரின் இறப்பிற்கு பிறகு ஆலயங்களில் ஸ்லேவிஸ் மொழியில் போதிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது
செபம்:
வரங்களை வாரி வழங்குபவரே எம் இறைவா! பல மொழி பேசும் திறனை இன்றைய புனிதர்களுக்கு கொடையாக அளித்தீர். உமது அருளால் அவர்களின் மறைப்பரப்பு பணிகளில் உடனிருந்து வழிநடத்தினீர். இன்று பல மொழி இலக்கியங்களில் நூல்களை எழுதியும், அவற்றைப் பற்றி எடுத்துரைக்கும் நண்பர்களை நீர் ஆசிர்வதியும், உமது அருளால் அவர்களை நிரப்பியருளும். தங்களின் பணிகளின் வழியாக உம்மை இவ்வுலகில் பறைசாற்ற அவர்களை உமது கருவியாய் பயன்படுத்தி வாழ்ந்திட வரமருளூம்
இன்றைய புனிதர் 2016-02-13 சபைத்தலைவர் சாக்சன் நகர் ஜோர்டன் Jordan von Sachsen

இன்றைய புனிதர் 2016-02-13
சபைத்தலைவர் சாக்சன் நகர் ஜோர்டன் Jordan von Sachsen
பிறப்பு 1200, போர்க்பெர்கே Borgberge, ஜெர்மனி
இறப்பு 13 பிப்ரவரி 1237, சிரியா
இவர் தான் பிறந்த ஊரின் அருகிலிருந்த பாடர்போன் (Paderborn) என்ற நகரில் கல்வி பயின்றார். இவர் தன் கல்வி படிப்பை முடித்தப்பின், புனித தொமினிக்கன் துறவற சபையில் சேர்ந்து குருவானார். 1221 ஆம் ஆண்டு அச்சபைத்தலைவர் இறந்துவிடவே, அச்சபையின் இரண்டாவது சபைத்தலைவர் பொறுப்பை புனித ஜோர்டன் ஏற்றார். இவர் தன் சபையை உலகெங்கும் பரவ அயராது உழைத்து நற்செய்தியை போதித்தார். தன் சபை குருக்கள் பலரை பாரிஸ் நகரில் இருந்த கல்லூரிகளில் படிக்கவைத்தார். இவர் பல வித்தியாசமான முறைகளில் தன் சபையை வளர்த்தெடுத்தார்.
இவர் தன் உள்மனதிலிருந்து மற்றவர்களை அன்புச் செய்தார். அனைவரும் இவரை எளிதில் நெருக்கக்கூடிய அளவிற்கு சாதாரண மனிதராகத் திகழ்ந்தார். இவர் தனது அழகிய மறையுரையினால் பல இளைஞர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தினார். இவரின் வாழ்வால் பலர் ஈர்க்கப்பட்டு இவரின் சபைக்கு வந்து சேர்ந்தனர். இவர் அச்சபையில் மிகச் சிறந்த பேராசிரியராக திகழ்ந்தார். இவர் ஏராளமான பயணங்களை மேற்கொண்டு தன் சபையைப் பரப்பினார். அவர் சிரியாவிற்கு பயணம் செய்யும்போதுதான் இறந்தார். இறந்தபிறகு இவரின் உடல் இஸ்ரயேல் நாட்டில் தொமினிக்கன் ஆலயம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உமது நற்செய்தியை இம்மண்ணில் பரப்பிட தன்னை முழுவதுமாக காணிக்கையாக்கி, அயராது உழைத்து தன் சபையின் வளர்ச்சிக்காக பாடுபட்ட புனித ஜோர்டன் எங்களுக்காக உம்மிடம் பரிந்து மன்றாட செபிக்கின்றோம். அவரின் ஆசீரால் அச்சபை குருக்கள் மற்றும் துறவியர் அனைவரும் சிறப்பாக செயல்பட அருள்தாரும். அமைதியின்றி இருக்கும் சிரியா நாட்டில், புனித ஜோர்டனின் அருளால் அமைதி நிலவ வழிகாட்டியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Friday, 12 February 2016
இன்றைய புனிதர் 2016-02-12 துறவி ஹீம்பலீனா Humbelina OSB

இன்றைய புனிதர் 2016-02-12
துறவி ஹீம்பலீனா Humbelina OSB
பிறப்பு 11 ஆம் நூற்றாண்டு, பிரான்சு
இறப்பு 1130, ஜூலி-சுர்-சார்சே Jully-sur-Sarce
இவர் கிளேர்வாக்ஸ் Clairvaux நகரைச் சேர்ந்த்த புனித பெர்னார்டு Bernhard அவர்களின் சகோதரி. இவர் தன் இளம் வயதிலேயே தன் குடும்பத்தை விட்டு வெளியேறி, துறவற மடத்தில் வாழ்ந்து வந்தார். பின்னர் தன்னை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து துறவியானார். மேலும் இவரைப்பற்றிய வரலாறு, அதிகம் கொடுக்கப்படவில்லை. இவர் தனது இறுதிவரை துறவியாகவே வாழ்ந்து இறந்தார் என்று சொல்லப்படுகின்றது. இவர் புனித பெனடிக்ட் துறவற சபையில் தலைமை பொறுப்பில் ஈடுபட்டார் என்றும் கூறப்படுகின்றது. இவரது கல்லறையின் மேல் சிறிய கெபி ஒன்று கட்டப்பட்டு வணக்கம் செலுத்தப்படுகின்றது. இவர் துறவிகளின் முன்மாதிரி என்று சொல்லப்பட்டார்
செபம்:
அன்புத் தந்தையே! வாழ்வது நானல்ல, என்னில் வாழ்வது கிறிஸ்துவே என்று தன்னை இறுதிவரை உமக்காக அர்ப்பணித்து வாழ்ந்த புனித ஹிம்பலீனாவை எமக்குக் கொடையாகக் கொடுத்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவரின் வேண்டுதலால் துறவிகள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டான வாழ்வை வாழ உதவி செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Thursday, 11 February 2016
இன்றைய புனிதர் 2016-02-11 அனியானே நகர் துறவி பெனடிக்ட் Benedikt von Aninae

இன்றைய புனிதர் 2016-02-11
அனியானே நகர் துறவி பெனடிக்ட் Benedikt von Aninae
பிறப்பு 750, பிரான்சு
இறப்பு 11 பிப்ரவரி 821, ஜெர்மனி
புனித பெனடிக்ட் விட்டிசா Witiza என்ற மற்றொரு பெயரால் அழைக்கப்பட்டார். இவர் ஓர் அரசர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பிப்பின் Pippin என்பவரிடமிருந்து வளர்ந்தார். இவர் தன் இளம் வயதிலேயே போர் புரிவதற்கென போர் படையில் சேர்ந்தார். பின்னர் 773 ஆம் ஆண்டு டிஜோன் Dijon என்ற ஊரின் அருகிலிருந்த புனித பெனடிக்ட் துறவறச் சபையில் சேர்ந்தார். இவர் 779 ஆம் ஆண்டு மிகக் கடுமையான விதிகளைக் கொண்டு துறவற இல்லம் ஒன்றைக் கட்டினார். பின்னர் நூர்சிய நகர் Nursia பெனடிக்ட்டின் சபையிலிருந்த ஒழுங்களை தான் நிறுவிய சபையிலும் கடைப்பிடிக்கச் செய்தார். பிரான்சு நாட்டிலிருந்த துறவற சபைகளிலேயே கடைப்பிடிக்கப்பட்ட அனைத்து ஒழுக்குகளைவிட இவர் நிறுவிய சபைதான் மிகக் கடுமையான சபை என்று கூறப்பட்டது. 814 ஆம் ஆண்டு அரசர் லூட்விக் Ludwig, பெனடிக்டின் செப வாழ்வைக் கண்டு, எல்சாஸ் Elsaß என்ற ஊரிலும் சபை நிறுவ அனுமதியளித்தார். பின்னர் ஜெர்மனி நாட்டில் ஆஹன் Aachenஎன்ற இடத்திலும் சபையை நிறுவினார். அங்குதான் அவர் தனது இறுதிநாட்களைக் கழித்தார்.
செபம்:
அடைக்கலம் தருபவரே எம் இறைவா! புனித பெனடிக்டின் வழியாக நீர் உமது பணியை பரவச் செய்தீர், நீர் என்றும் அவருடன் இருந்து வழிநடத்தினீர். இன்றைய துறவறச் சபைகளில் கொடுக்கப்பட்டுள்ள ஒழுங்குகளை ஒவ்வொரு துறவிகளும் பிரமாணிக்கமாய் கடைப்பிடித்து முழுமையாய் தங்களை உமக்காய் அர்ப்பணிக்க உம் அருள்தந்து காத்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Wednesday, 10 February 2016
இன்றைய புனிதர் 2016-02-10 ஸ்கொலாஸ்திக்கா Scholastica , கன்னி OSB
பிறப்பு 480, நோர்சியா Norcia, இத்தாலி
இறப்பு 542, மோண்டேகசினோ Monte Cassino, இத்தாலி
பாதுகாவல் : பெனடிக்ட் துறவற சபை, மழை, இடி, மின்னலிலிருந்து
புனித ஸ்கொலாஸ்திக்கா, பெனடிக்ட் சபையில் பிறந்தார். இவர் தன் இளம் வயதிலேயே புனித பெனடிக்ட் துறவற சபை யில் சேர்ந்தார். இவரின் உடன் பிறந்த சகோதரரும், ஸ்கொலா ஸ்திக்காவுடன் இணைந்து துறவற சபையில் தன்னை அர்ப் பணித்துக்கொண்டார். பின்னர் இருவரும் மோண்டேகசினோ சென்று அங்குத் துறவற மடம் ஒன்றை நிறுவினர். தனது சகோ தரனுக்கு பல உதவிகளைச் செய்த இவர், திடீரென்று சில கார ணங்களால் கடும் மழையில் நனைந்தார். அதன்பிறகு மூன்று நாட்கள் கழைத்து தன் ஆன்மாவை இறைவனிடம் ஒப்படைத்து விண்ணகம் சென்றார். இவரின் உயிர், இம்மண்ணுலகை விட் டுப்பிரி யும்போது வெண்புறாப்போல, இவர் தன் ஆவியை இறைவனிடம் கையளித்தார் என்று இவரின் சகோதரர் பெனடிக்ட் கூறியுள்ளார். மோனே கசினோவில் இவருக்கென்று பேராலயம் ஒன்று கட்டப்பட்டது. இவ்வாலயம் இன்று ஓர் திரு த்தலப் பேராலயமாக உள்ளது.
செபம்:
தூய்மைக்கெல்லாம் ஊற்றாம் எம் இறைவா! கன்னியான புனித ஸ்கொலாஸ்திக்காவைப்போல் கள்ளமற்ற அன்பினால் உமக்கு நாங்கள் பணிபுரிய உதவியருளும். இவ்வாறு நாங்கள் விரும்புவதையும் கேட்பதையும் உமது அன்பின் கரங்களிலி ருந்து பெற்றுக் கொள்வதன் வழியாக எங்கள் மகிழ்ச்சியை நிறைவடையச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்
Tuesday, 9 February 2016
இன்றைய புனிதர் 2016-02-09 திருக்காட்சியாளர் அன்னா கத்தரீனா எம்மேரிக் Anna Katharina Emmerick
பிறப்பு 8 செப் 1774, கோயஸ்பீல்டு Coesfeld, ஜெர்மனி
இறப்பு 9 பிப்ரவரி 1824,டூல்மென் Dülmen, ஜெர்மனி
முத்திபேறுபட்டம்: 1892
இவர் சிறுவயதிலிருந்தே மிகுந்த பக்தியுள்ளவராக திகழ்ந்தார். தேவையிலிருப்போரை குறிப்பறிந்து தானாகவே முன்வந்து உதவி செய்து எதையும் எதிர்பாராமல் அன்பு செய்தார். இவர் துறவியாக வேண்டுமென்று அளவில்லா ஆசை கொண்டார். ஆனால் அவரின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். சில ஆண்டுகள் கழித்து தன் கணவர் இறக்கவே, 1802 ஆம் ஆண்டு மீண்டும் தன் மனத்திற்குள் நீண்ட நாட்களாக இருந்த துறவற ஆசையை நிறைவேற்றிக்கொள்ள ஒரு துறவற மடத்திற்குச் சென்றார். புனித அகஸ்டின் துறவற மடத்தில் சேர்ந்த இவர் இரவும் பகலும் இடைவிடாமல் செபத்தில் ஈடுபட்டார். 1813 ஆம் ஆண்டு இவர் இயேசுவின் காயங்களை பெற்றார். இதனால் மக்கள் இவரை தீர்க்கதரிசியாகக் கண்டு வணக்கம் செலுத்தினர். அதன்பிறகு இவர் 1818 லிருந்து 1824 ஆம் ஆண்டு வரை பலமுறை ஆண்டவரிடமிருந்து திருக்காட்சிகளைப் பெற்றார். இவர் இறந்த பிறகு மக்களுக்கென்றிருந்த பொது கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். 1975 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாள் இவரின் கல்லறை மேல் சிறிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டது.
செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! உம்மீது கொண்ட அளவில்லா அன்பினால் உமது திருக்காயங்களைக் கொடையாக பெற்றார். உமது இரக்கத்தினால் நாங்கள் உம்மை இறுகப்பற்றிக்கொண்டு உமது பாதையில் எம்மை பயணிக்க செய்தருளும்
Monday, 8 February 2016
இன்றைய புனிதர் 2016-02-08 புனித ஏரோணிமு எமிலியானி Hieronymus Ämiliani
பிறப்பு1486,வெனிஸ், இத்தாலி
இறப்பு 8 பிப்ரவரி 1537,சோமாஸ்கா Somasca, இத்தாலி
புனிதர்பட்டம்: 1767 திருத்தந்தை 13 ஆம் கிளமென்ஸ்
பாதுகாவல் : வெனிஸ், கைவிடப்பட்டவர்கள், பள்ளிகள்.
இவர் ஓர் பக்தியான குடும்பத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த முறையில் கல்வி கற்றார். இவர் தனது 15 ஆம் வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். நாளடைவில் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவர் 1508 ஆம் ஆண்டு தன் படைப்போர் வீரர்களுடன் போரிட சென்றப்போது சிறைப்பிடித்து செல்லப்பட்டார். அப்போதுதான் இவர் தனது வாழ்வில் சில மாற்றங்களைக் கண்டார். அச்சமயத்திலிருந்து தன் வாழ்வை மாற்றிக்கொண்டார்.
இவர் 1518 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் இவர் கணவரை இழந்து தனிமையில் வாடும் பெண்களை ஒன்று திரட்டி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார். ஏழை எளிய மக்களின் வாழ்வுக்கென்று தம்மை அர்ப்பணித்தார். தம் உடைமைகளை எல்லாம் அவர்களுக்கு பகிர்ந்தளித்தார். இவர் கைவிடப்பட்ட குழந்தைகளின் மறு வாழ்வுக்கென்று 1537 ஆம் ஆண்டு சொமாஸ்கா என்னுமிடத்தில் துறவற குருக்களுக்கான ஒரு சபையை நிறுவினார்.
செபம்:
இரக்கம் நிறைந்த இறைவா! கைவிடப்பட்டவர்களின் தேவைகளில் ஒரு தந்தையாக விளங்க புனித ஏரோணிமு எமிலியானியை நீர் தேர்ந்து கொண்டீர். நாங்கள் உமது ஆவியாரால் உம்முடைய மக்களென அழைக்கப்படுகிறோம். எப்போதும் உமது மக்களாக வாழ்ந்து உமது போதனையை பின்பற்றி எம் வாழ்வை என்றும் உமக்காக வாழ வழி காட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Saturday, 6 February 2016
இன்றைய புனிதர் 2016-02-07 திருத்தந்தை 9 ஆம் பயஸ் Pope Pius IX

இன்றைய புனிதர் 2016-02-07
திருத்தந்தை 9 ஆம் பயஸ் Pope Pius IX
பிறப்பு 13 மே 1792,செனிகாலியா Senigallia, இத்தாலி
இறப்பு 7 பிப்ரவரி 1878, உரோம்
முத்திபேறுபட்டம் : 1907, திருத்தந்தை 10 ஆம் பயஸ்
புனிதர்பட்டம் : திருத்தந்தை 12 ஆம் பயஸ்
இவர் தனது 26 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். பிறகு இவர் "மக்களின் பணியாளர்" என்றழைக்கப்பட்டு, மறைப்பணியா ற்றினார். பின்னர் இவர் மக்களின் தூதுவராக சிலே Chile நாட்டிற்கு அனுப்பப்பட்டார். அங்குச் சென்ற சில ஆண்டுகளிலே ஸ்போலேட்டோ என்ற மறைமாவட்டத்திற்கு பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1833 ஆம் ஆண்டு இமோலாவிற்கு Imola பேராயராக அனுப்பப்பட்டார். 1840 ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பின்னர் 16 ஜூன் 1846 ஆம் ஆண்டு 9 ஆம் பயஸ் என்ற பெயருடன் திருத்தந்தையாக உயர்த்தப்பட்டார். இவர் தனது பதவிக்காலத்தில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தார்.
இவர் மிகப் பொறுமையுடன் அனைத்துப் பிரச்சனைகளையும் மேற்கொண்டார். இவர் வாழும்போதே, புனிதராகப் புகழப்பட் டார். இவர் வாழ்ந்தபோது பல நோயாளிகளை குணமாக்கியுள் ளார். ஏறக்குறைய 32 ஆண்டுகள் திருத்தந்தையாக பணியாற் றிய இவர் இறைவாக்கினராகக் கருதப்பட்டார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! நீர் உமது சக் தியை எமது திருத்தந்தை 9 ஆம் பயஸிற்கு வழங்கி உம்மை மேன்மைபடுத்த வழிகாட்டினீர். நீர் அவருக்களித்த அவ்வல் லமையை எம் திருத்தந்தைக்கும் வழங்கி ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள நலன்களை தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Friday, 5 February 2016
இன்றைய புனிதர் 2016-02-06 மறைசாட்சியாளர் பவுல் மீகி மற்றும் தோழர்கள் Paul Miki und Gefährten SJ
பிறப்பு1565,சியோட்டோ Kyoto, ஜப்பான்
இறப்பு 5 பிப்ரவரி, 1597 நாகசாகி, ஜப்பான்
புனிதர்பட்டம்: 8 ஜூன் 1862, திருத்தந்தை 9 ஆம் பயஸ்
இவர் ஜப்பான் நாட்டில் வாழ்ந்த ஓர் கிறிஸ்தவ பெற்றோரின் மகனாகப் பிறந்தார். இவர் தனது 22 ஆம் வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். மிகச் சிறந்த மறையுரையாளரான இவர், ஜப்பான் நாட்டில் சிறப்பாக மறைப்பணியாற்றினார். 1587 ஆம் ஆண்டு சோகுண்டோயோடோமி ஹிடேயோஷி Shogun Toyotomi Hideyoshi என்பவர் இட்ட கட்டளையின் பேரில் இப்புனிதர் பிடிக்கப்பட்டு தனித்தீவிற்கு கொண்டுச் செல்லப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இருப்பினும் இவர் ஆற்றியப் பணி மக்களிடையே தீப்போல பரவியது. இவரின் தோழர்களும் மறைப்பணியை சிறப்பாக ஆற்றினர். கிறிஸ்தவ மக்கள் பெருகினர். இதனால் சோகுன் டோயோடோமி ஆத்திரமடைந்து 25 தோழர்களையும் பிடித்து சிறையிலடைத்தான். பின்னர் நாகசாகி நகருக்கு இழுத்துச் செல்லப்பட்டு சிலுவையில் அடித்து கொல்லப்பட்டார்கள்
செபம்:
ஆற்றல் வழங்கும் எம் தந்தையே! இன்றைய நாளில் நினைவுகூரும் இப்புனிதர்களுக்கு நீர் சிலுவையின் வழியாக உமது எல்லையில்லா பேரின்ப வாழ்வை அளித்தீர். நாங்கள் உமது விசுவாசத்தில் நிலையாக நிலைத்திருந்து, இறை நம்பிக்கையை எங்களின் இறுதி மூச்சுவரை பற்றிக்கொள்ள உம் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.
Thursday, 4 February 2016
இன்றைய புனிதர் 2016-02-05 மறைசாட்சி ஆகத்தா Agatha
பிறப்பு225,கத்தானியா Catania, இத்தாலி
இறப்பு250,செசிலி, Sizilien
பாதுகாவல் : கத்தானியா, தங்கம் தயாரிப்பாளர், நெசவாளர், நெருப்பு, நிலநடுக்கத்திலிருந்து
இவர் ஓர் சிறந்த பக்தியுள்ள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந் தவர். இவரின் பெற்றோர் இவரை, ஞானத்திலும் அறிவிலும் சிறந்தவராக வளர்த்தனர். பிறப்பிலிருந்தே மிக அழகுவாய்ந்த பெண்ணாக இருந்தார். இவர் இறைவனின் மேல் அளவுகடந்த பக்தி கொண்டவராக இருந்ததால் 30 நாட்கள் பகைவர்களால் மறைத்து வைக்கப்பட்டு வதைக்கப்பட்டார். தனது விசுவாச வாழ்வில், பல கொடுமைகளின் மத்தியிலும் சிறந்தவராக திகழ்ந்தார். இதனால் இன்னும் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.
இவர் இன்னும் அதிகமாக இறைவனைப் பற்றிக்கொண்டதால் வெடிகள் வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். பின்னர் மார்பு அறுக்கப்பட்டு வேதனைக்குள்ளாக்கப்பட்டார். அத்துடன் நெருப்பினால் சுடப்பட்டார். கொதிக்கும் எண்ணெயில் தள்ளப்பட்டார். பல உடைந்த பொருட்களால் உடல் முழுவதும் அகோரமாக கிழிக்கப்பட்டார். இவர் அனைத்துத் துன்பங்களையும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் ஏராளமான வேண்டல்களோடும் தன் துன்பங்களைக் கடவுளுக்காக அர்ப்பணித்தார்.
செபம்:
தூய்மைக்கெல்லாம் ஊற்றாம் எம் இறைவா! கன்னியும் மறைசாட்சியுமான புனித ஆகத்தா, தனது தூய வாழ்வாலும் வீரமுள்ள மறைசாட்சியத்தாலும், உமது பார்வையில் மிக மதிப்புக்குரியவரானார். அவரின் பரிந்துரையால் எங்களின் பாவங்களை மன்னித்து, எம்மை உம்மோடு இணைத்துக்கொள்ள வரமருளும்.
இன்றைய புனிதர் 2016-02-04 மறைப்பணியாளர் மறைசாட்சி புனித ஜான் தெ பிரிட்டோ John de Britto SJ
பிறப்பு1 மார்ச் 1647,லிசாபோன் Lissabon, போர்த்துக்கல்
இறப்பு 4 பிப்ரவரி 1693,இந்தியா
புனிதர்பட்டம்: 22 ஜூன் 1947 திருத்தந்தை 12 ஆம் பயஸ் Pope Pius XII
பாதுகாவல் : சிவகங்கை, மதுரை மறைமாவட்டம்
இவர் புனித சவேரியாரைப் பின்பற்றி இயேசு சபையில் சேர்ந் தார். பின்னர் மறைப்பரப்பு பணிக்காக இந்திய நாட்டிற்குச் சென்றார். அங்கு பல சமயங்களின் மத்தியில் பலதரப்பட்ட மக்களிடையே மறைப்பணியை ஆற்றினார். சிறப்பாக 1692 ஆம் ஆண்டு ஏறக்குறைய 4000 இந்து மதத்தைச் சார்ந்தவர்களை மனந்திருப்பினார். அந்நாட்டில் வாழும், இந்தியத் துறவிகளைப் போலவே தன் வாழ்வையும் மாற்றிக்கொண்டு, கடுந்தவ வாழ்வை மேற்கொண்டார். ஏழை எளிய மக்களுக்காக அநீதிகளை எதிர்த்துப் போரிட்டார். மக்கள் நெறி தவறா கிறிஸ்தவ வாழ்வை அறிவுறுத்தினார். ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல்லற ஒருமைப்பாட்டுக் கற்பொழுக்கத்தை வலியுறுத்திப் போதித்தார். இதன் விளைவாக எதிரிகளால் பிடிக்கப்பட்டு, தனது 45 ஆம் வயதில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.
செபம்:
திடம் அளிப்பவரே எம் இறைவா! புனித ஜான் தெ பிரிட்டோவிற்கு தளரா மனதையும், திடத்தையும் அளித்து உமது திருமறையை எம் பாரத நாட்டில் பரவச் செய்தீர். அவரது விழாவை சிறப்பிக்கும் நாங்கள் அவருடைய பேறுபலன்களையும் பரிந்துரைகளையும் பெற்று, அவரின் விசுவாசத்தை பின்பற்றி வாழ உமது வரம் தாரும்.
Wednesday, 3 February 2016
இன்றைய புனிதர் 2016-02-03 பேராயர் ஆன்ஸ்கர் Archbishop Ansgar OSB
பிறப்பு 801,கோர்ப் Corbie, பிரான்சு
இறப்பு 3 பிப்ரவரி,865 பிரேமன் Bremen, ஜெர்மனி
பாதுகாவல் : ஹம்பூர்க் Hamburg மற்றும் பிரேமன் Bremen மறைமாவட்டம்
இவர் 9 ஆம் நூற்றாண்டு ஹம்பூர்க் மற்றும் பிரேமன் மறை மாவட்டங்களுக்கு பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு திருத்தந்தையின் தூதுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஹம்பூர்க்கிலும் பிரேமன் மறைமாவட்டங்களில் மிகச் சிறப்பாக பணியாற்றினார். இதன் பயனாக ஏராளமான பெனடிக்ட் துறவற சபைகளை அம்மாவட்டங்களின் நிறுவினார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் கண் தெரியாத சகோதர சகோதரிகளுக்கும், ஊனமுற்றவர்களுக்கும், ஏழை எளியவர்க்ளுக்கும் தாய்க்குத் தாயாகவும், தந்தையாகவும் இருந்து வழிகாட்டினார். இவர் நற்செய்திப் பணியாற்றுவதற்காக பல இன்னல்களுக்கு ஆளானார். இருப்பினும் இறுதிவரை தனது அழைத்தலில் மனந்தளராமல் இருந்து, நம்பிக்கை இழக்காமல் ஆர்வமுடன் பணியாற்றினார்.
செபம்:
அனைத்தையும் பராமரித்தாளும் ஆண்டவரே! திரளான மக்களினத்தார் நற்செய்தியின் ஒளி பெற, துறவியும் ஆயருடன் புனித ஆன்ஸ்கரை நீர் அனுப்பத் திருவுளமானீர். நாங்கள் உமது உண்மையின் ஒளியில் இடையறாது நடக்க அவருடைய வேண்டுதலால் எங்களுக்கு அருள்புரியும்
Monday, 1 February 2016
இன்றைய புனிதர் 2016-02-02 வூர்ட்ஸ்பூர்க் ஆயர் பூர்க்ஹார்டு Burkhard von Würzburg
பிறப்பு 700 (?),இங்கிலாந்து
இறப்பு 2 பிப்ரவரி, 753 (அ) 754, பவேரியா, Germany
பாதுகாவல் : எலும்பு நோய், மூட்டு வலி
இவர் 741 ஆம் ஆண்டு வூர்ட்ஸ்பூர்கின் முதல் ஆயராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். இவர் 750 ஆம் ஆண்டு வூர்ட்ஸ்பூர்கில் அந்திரேயா Andreas என்ற பெயரில் துறவற இல்லம் ஒன்றை நிறுவினார். அதன்பிறகு சால்வாடோர் Salvatordom என்ற பேரால யம் ஒன்றை எழுப்பினார். 855 ஆம் ஆண்டு இப்பேராலயமானது எரிக்கப்பட்டது. இவர் ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆயராக இருந்தார் என்று இவரின் வரலாறு கூறுகின்றது. இவர் ஆயராக இருந்தபோது விசுவாசத்தைப் பரப்ப பெரிதும் உழைத்தார் என்று சொல்லப்படுகின்றது. நற்செய்திப் பணிக்காக பயணம் செய்யும்போது இறந்தார் என்று கூறப்பட்டுள்ளது. வூர்ட்ஸ்பூர்கில் அக்டோபர் 14ஆம் நாள் இவருக்கு விழா எடுக்கப்பட்டு வருகின்றது. இவர் எழுப்பிய அந்திரேயா துறவற இல்லம் இன்று புனித பூர்க்கார்டு St. Burkhard துறவற இல்லம் என்றழைக்கப்படுகின்றது
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! இன்று வூர்ட்ஸ்பூர்க் மறைமாவட்டத்தை வழிநடத்தும் ஆயர்களை நீர் ஆசீர்வதியும். கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் வைத்து காப்பதுபோல, அம்மறைமாவட்ட மக்களை உமது அரவணைப்பில் வைத்துக் காத்து, வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Subscribe to:
Posts (Atom)