Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 21 May 2016

இன்றைய புனிதர் 2016-05-21 புனித ஹெர்மான் ஜோசப் (St.Hermann Joseph) குரு


இன்றைய புனிதர்
2016-05-21

புனித ஹெர்மான் ஜோசப் (St.Hermann Joseph)
குரு

பிறப்பு: 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில்

இறப்பு: 7 ஏப்ரல் 1241ஹோப்பன்(Hopen), ஐப்பல்(Eifel), ஜெர்மனி

இவர் ஓர் ஏழையின் குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறுபிள்ளை யாக இருக்கும்போதே கொலோனில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அப்போது செபிக்க சென்றபோது ஒருநாள் கொலோன் ஊரில் இருந்த ஓர் ஆலயத்தில், அன்னை மரியாள், கையில் குழந்தை இயேசுவை வைத்திருக்கும் ஒரு படத்தை பார்த்து, அப்படத்தின் முன் மண்டியிட்டு செபித்தார். அப்போது ஹெர்மான் தன் கையில் ஆப்பிள் பழம் வைத்திரு ந்தார். அதை எடுத்து அன்னைமரியிடம் கொடுக்க, குழந்தை இயேசு தன் கையை நீட்டி சிறுவன் ஹெர்மான் கொடுத்த அப்பழத்தை வாங்கிக் கொண்டார். இதைப் பார்த்து திகைத்துப் போன அவர், தான் ஓர் குருவாக வேண்டுமென்று முடிவு செய்தார். அதன்பிறகு அவர் குருமடத்தில் சேர்ந்து குருவானார். எப்போதும் செபிக்க வேண்டும், விவிலியம் வாசிக்கவேண்டும். திருப்பலியில் பங்கெடுக்கவேண்டும் என்று நினைத்து, இதுதான் துறவற வாழ்வு என்றுணர்ந்து அவ்வாழ்வை தேர்வை செய்தார். ஆனால் அங்கு அனைத்தும் அவருக்கு எதிர்மறையாக இருந்தது. அவரை அந்த துறவற மடத்தில், உணவு சமைப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை ஏற்றுகொள்ள சொன்னார்கள். அவரும் அப்பொறுப்பை ஏற்று தினமும் கடைக்குச் சென்று, தன்னிடம் ஒப்படைத்த வேலைகளை செய்து வந்தார். இதனால் கோவிலில் அமர்ந்து செபிப்பதற்கென தனியாக அவருக்கு நேரம் கிடைக்காததால், ஒருநாள் அன்னைமரியிடமும், தந்தை சூசையிடமும், தனது கவலைகளை செபத்தில் கூறிக்கொண்டிருந்தார். அப்போது அன்னையானவள், அவரிடம் உன் உடனுள்ள சகோதர, சகோதரிகளுக்கு நீ புரியும் உன் வேலைகளே உன்னிடமிருந்து வருகின்ற உண்மையான ஜெபம் என்றுணர்த்தினார்.
அதன்பிறகு ஹெர்மான் தனது எண்ணங்களை மாற்றிக்கொண்டு தனக்கு குறிக்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் மகிழ்வோடு செய்து வந்தார். அவ்வேலைகள் அனைத்தையும் ஜெபமாக மாற்றினார். அதன்வழியாக உடனிருந்த அனைவரின் அன்பையும் பெற்றார். அதிலிருந்து ஹெர்மான் அன்னைமரியின் பாடல் ஒன்றை எப்போதும் பாடிக் கொண்டே இருந்தார். அவர் தொடர்ந்து நீண்ட நாட்களாக நோன்பிருந்து ஜெபித்தார். இதனால் கடுமையான நோய்க்கு ஆளாக்கப்பட்டார். அப்போது சுல்பிக் (Zulpich) என்ற ஊரில் இருந்த சிஸ்டர்சீசியன்(Zisterzienserinn) துறவற இல்லத்திற்கு சென்றார். அங்கு அவர் ஆன்மீக குருவாக பணியாற்றினார். அவரை சந்திக்க வந்த அனைவருக்கும் ஆசீரை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினார். ஹெர்மான் அத்துறவற இல்லத்திற்குள் நுழைந்தவுடனே, "இங்குள்ள கல்லறையில்தான் என்னை அடக்கம் செய்யவேண்டும், நான் இங்குதான் இறப்பேன்" என்று கூறினார். அவர் கூறியபடியே, ஒருநாள் ஆலயத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே, கண்களைமூடி அமைதியாக இறைவனிடம் சேர்ந்தார்.


செபம்:

எல்லாம் வல்ல இறைவா! புனித ஹெர்மான் அன்னைமரியிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அவரது அன்பையும், பாசத்தையும் பெற்று நாங்கள் என்றும், அன்னைமரியின் பிள்ளைகளாக வாழ உம் அருளை எமக்கு பொழிந்தருளும். ஆமென்

No comments:

Post a Comment