பிறப்பு 1204, போர்டெல்லா(Potella), ஸ்பெயின்
இறப்பு 31 ஆகஸ்டு 1240 கார்டோனா Cardona, ஸ்பெயின்
புனிதர்பட்டம்: 1657, திருத்தந்தை 7 ஆம் அலெக்சாண்டர்
பாதுகாவல்: கர்ப்பிணிகள்,தாதியர்
புனித ரேமண்ட் தன் தாயின் கருவில் இருக்கும்போதே, இவரின் தாய் இறந்துவிட்டார். அதனால் அறுவை சிகிச்சை செய்து ரேமண்ட் வெளியில் கொணரப்பட்டார். சிறுவயதிலிருந்தே இயேசுவின் மீது அன்பும், பக்தியும் கொண்டு வளர்க்கப்பட்டார். அயலாரிடம் அன்பு காட்டுவதிலும் சிறந்தவராய் திகழ்ந்தார். தான் குருவாகி பணிபுரிய வேண்டுமென்று ஆசைக் கொண்டார். இவ்வாசை நிறைவேற "மெர்சேடாரியன்ஸ்" (Mercedarians) என்ற சபையில் சேர்ந்து குருவானார். இவர் 1222 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். பின்னர் வாலென்சியா(Valencia) என்ற நாட்டிற்கு மறைபரப்பு பணியை செய்ய, அவரின் சபை தலைவரால் அனுப்பப்பட்டார். மிகச் சிறப்பான முறையில் மறைப்பணியை ஆற்றினார். அப்போது அந்நாட்டில் ஏறக்குறைய 140 கிறிஸ்துவர்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டிருந்தனர். ரேமண்ட்தான் அம்மக்களை அடிமைத்தனத்தினின்று மீட்டார். அதன்பிறகு அவர் வட ஆப்ரிக்காவில் மறைப்பணியை செய்ய அனுப்பப்பட்டார். அங்கும் 250 பேர் அடிமைகளாக இருந்தவர்களை மீட்டார். அதன்பிறகு இவரின் பணி தூனிஸ்(Tunis) என்ற நகரில் தேவைப்படவே, மீண்டும் தூனிஸ் நகருக்கு அனுப்பப்பட்டார். மிகச் சிறந்த முறையில் மறைபரப்புப் பணியை ஆற்றிய இவரை, அந்நாட்டு மக்களால் சிறைபிடித்து வைக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டார். சிறையில் இருக்கும்போது அவரின் உதடுகள் இரண்டையும் இழுத்து பிடித்து, உதடுகளின் நடுவே, துளைப்போட்டு, இரும்பு பூட்டைக்கொண்டு, இவரின் வாயை பூட்டினர். அப்போது அக்கொடியவர்கள் ரேமண்ட்டை மறைபரப்பு பணியை ஆற்ற முடியாமல் செய்து வதைத்தனர். அங்கு அவர் பல துன்பங்களை அனுபவித்து இறந்தார்.
No comments:
Post a Comment