Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 30 October 2015

இன்றைய புனிதர் 2015-10-31 ரேகன்ஸ்பூர்க் ஆயர் வோல்ஃப்காங்க் Wolfgang von Regensburg


பிறப்பு924,புல்லிங்கன் Pfullingen, ஜெர்மனி


இறப்பு31 அக்டோபர் 994,புப்பிங் Pupping, ஆஸ்திரியா

பாதுகாவல்: ரேகன்ஸ்பூர்க் மறைமாவட்டம், வீட்டு வேலை செய்பவர்கள், கப்பலோட்டிகள், வலிப்பு நோயிலிருந்து

இவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். துறவற மடத்திற்கு சொந்தமான ஒரு பள்ளியில் தனது கல்வியை கற்றார். இவர் தான் படிக்கும்போது ஹென்றி என்பவரின் நண்பரானார். இவரே 956 ஆம் ஆண்டில் டிரியரில் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதனால் அவரின் அழைப்பை ஏற்று டிரியரிலுள்ள பேராலயப்பள்ளிக்கு 964 ல் பேராசிரியராக பணியாற்றும் பொறுப்பை ஏற்றார். அச்சமயத்தில்தான், தானும் ஓர் குருவாக வேண்டுமென்று ஆசைகொண்டு, ஸ்விட்சர்லாந்தில் உள்ள பெனடிக்டின் துறவற இல்லம் நோக்கி சென்றார். அங்கு தனது விருப்பத்தை தெரிவித்து வார்த்தைப்பாடுகளை பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து ஆக்ஸ்பூர்க் ஆயர் உல்ரிஷ்(Ulrich) அவர்களால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

பின்னர் இவர் ஆஸ்திரியா சென்று நற்செய்தியை பறைசாற்றினார். இவரின் மகத்துவமிக்க மறைப்பணி பாசாவ் ஆயராக (Passau) இருந்தவரை கவரவே, அவரை ரேகன்ஸ்பூர்கில் ஆயரில் பொறுப்பை ஏற்கும்படி கூறினார். இச்செய்தியை கேட்டவுடன் வோல்ஃப்காங்க் மிக அதிகமாக பயமுற்று, நோய்வாய்பட்டார். ஆனால் இறையருளால் மீண்டும் நலம்பெற்றார். இவ்வற்புதத்தை அறிந்த அப்போதைய அரசர் 2 ஆம் ஓட்டோ (Otto II)வோல்ஃப்காங்க் 972 ஆம் ஆண்டு ரேகன்ஸ்பூர்க் ஆயராக அறிவித்தார். இவர் ஏறக்குறைய 22 ஆண்டுகள் ரேகன்ஸ்பூர்க் மறைமாவட்டத்தில் ஆயராக இருந்தார். தன்னுடைய பதவி காலத்தில் மறைமாவட்டத்திற்கு ஏராளமான பணிகளை செய்தார். பல துறவற இல்லங்களை கட்டினார். பெண்துறவிகள் கற்பதற்கென்று சில துறவற மடப்பள்ளிகளையும் கட்டினார். ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் தேவையான வீடுகளையும், மருத்துவமனைகளையும் கட்டினார். இவர் வாழும்போதே மக்கள் இவரை புனிதர் என்று அழைத்தனர். இவர் ரேகன்ஸ்பூர்கிலிருந்து ஆஸ்திரியாவிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டபோது இறந்தார்.

இவரின் உடல் ரேகன்ஸ்பூர்க்கில் எம்மராம் (St.Emmeram) என்றழைக்கப்படும் துறவற மடத்தில் புதைக்கப்பட்டது. பிறகு இவரின் கல்லறைமேல் கெபி ஒன்றும் கட்டப்பட்டது. இக்கெபி இன்று மக்களால் புனிதத்தலமாக கருதப்பட்டு வணக்கம் செலுத்தப்படுகின்றது.


செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! இன்றைய நாளில் தங்களின் நாம விழாவை சிறப்பிக்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். நல்ல உடல் உள்ள சுகம் தந்து காத்தருளும். உமது ஆவியின் அருள்கொடைகளால் நிரப்பி, உமது கண்ணின் கருவிழிக்குள் வைத்து காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

Thursday, 29 October 2015

இன்றைய புனிதர் 2015-10-30 திருக்காட்சியாளர் அல்போன்ஸ் ரோட்ரீக்கஸ் Alfons Rodriquez


பிறப்பு25 ஜூலை 1531,செகோவியா Segovia, ஸ்பெயின்


இறப்பு31 அக்டோபர் 1617, மலோர்கா Mallorca, ஸ்பெயின்

முத்திபேறுபட்டம்: 1825 புனிதர்பட்டம்: 15 ஜனவரி 1888

அன்பர்களே புனிதர்கள் என்றவுடன் குருமார்,கன்னியர்கள்,பாப்பாண்டவர்கள் இவர்கள் தான் தகுதியானவர்கள் என்பது பெரும்பாலோரின் எண்ணம். அது தவறு. திருமணம் செய்தவரும் குருவாகாலம்! ஏன் புனிதராகவும் மாறலாம் என்பதற்கு இந்த புனிதர் ஒரு சாட்சி!
இவர் ஓர் திருமணமானவர். இவரின் மனைவியும், பிள்ளைகளும் இறந்தபின்னர், இயேசு சபையில் சேர்ந்தார். அதன்பிறகு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் மறைப்பணியாற்றினார். பின்னர் இவர், தான் தங்கியிருந்த துறவற இல்லத்தில், வாயில்காப்பாளராக பணியாற்றினார். அச்சமயத்தில் பலமுறை திருக்காட்சியைக் கண்டார். இவர் மிக ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார். எப்போதும் கீழ்படிதலுடன் இருந்தார். இவர் தான் பெற்ற திருக்காட்சிகளில் சிலவற்றை கடிதமாகவும் எழுதியுள்ளார்.

செபம்:
சமாதானம் அருள்பவரே எம் கடவுளே! திருமணமான ஒவ்வொரு தம்பதியினரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். தங்களின் குடும்ப வாழ்வில் வரும் ஒவ்வொரு துன்பங்களையும், பொறுமையுடன் ஏற்று கொள்ளத் திடமான மனதைத் தாரும். தங்கள் பிள்ளைகளின் நலனை கருதி வாழ, நல் உள்ளம் தாரும். ஒவ்வொரு குடும்பமும், திருக்குடும்பத்தைப்போல வாழ உம் அருள் தந்து, வழிநடத்திட வேண்டுமென்று தந்தையே உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2015-10-29 மறைசாட்சி ஃபெருடியஸ் Ferrutius


பிறப்பு 3 ஆம் நூற்றாண்டு


இறப்பு 4 ஆம் நூற்றாண்டு, மைன்ஸ் Mainz, ஜெர்மனி

இவர் உரோம் படைவீரராக பணியாற்றியவர். கிறிஸ்துவைப்பற்றி அறிவித்தவர். நற்செய்தியை பறைசாற்றிய காரணத்திற்காக அரசன் தியோக்ளேசியன் (Diokletian) ஃபெருடியசை பிடித்து சிறையிலடைத்தான். கிறிஸ்துவ மதத்தை விட்டு விலகும்படி கட்டாயப்படுத்தினான். அவனின் சொற்களுக்கு பணியாததால், ஃபெருடியசை கொலை செய்யக் கூறினான். கடவுளின் விசுவாசத்திலிருந்து இறுதி வரை விலகாததால் கொலை செய்யப்பட்டார். பின்னர் மைன்ஸ் நகர் பேராயர் லூலூஸ் (Lullus) ஃபெருடியஸின் உடலை கொண்டு வந்து 778 ஆம் ஆண்டு புனித பெனடிக்ட் துறவறச் சபையில் வைத்தார். ஜெர்மனியிலுள்ள வீஸ்பாடனில் (Wiesbaden)இவரின் பெயரில் ஆலயம் ஒன்றும் உள்ளது.


செபம்:
உயிரளிக்கும் ஊற்றே! உம்மை பின்பற்றியதற்காக தன் உயிரை ஈந்த மறைசாட்சி ஃபெருடியசைப்போல, இம்மண்ணில் உயிர்நீத்த மறைசாட்சியாளர்களை கண்ணோக்கியருளும். அவர்கள் அனைவரையும் உம் வான்வீட்டில் சேர்த்து, உம்மை முகமுகமாய் தரிசிக்கும் பேற்றைத் தந்தருளும். எமக்காக இவர்கள் பரிந்து பேசிடவும், அதன் வழியாக நாங்கள் உமக்கு சாட்சியம் பகரவும் எம்மை தயாரித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Tuesday, 27 October 2015

பிறப்பு திருத்தூதர் சீமோன்: 1 ஆம் நூற்றாண்டு, கானாவூர் திருத்தூதர் யூதா ததேயு: 1 ஆம் நூற்றாண்டு,(?)


பிறப்பு
திருத்தூதர் சீமோன்: 1 ஆம் நூற்றாண்டு, கானாவூர்
திருத்தூதர் யூதா ததேயு: 1 ஆம் நூற்றாண்டு,(?)


இறப்பு
திருத்தூதர் சீமோன்: 1 ஆம் நூற்றாண்டு, பெர்சியன்
திருத்தூதர் யூதா ததேயு: 1 ஆம் நூற்றாண்டு, பெர்சியன்

திருத்தூதர் சீமோன்: பாதுகாவல்: சாயத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், மரம் வெட்டுபவர்கள்

திருத்தூதர் யூதா ததேயு: பாதுகாவல்: ஆபத்தில் உள்ளவர்கள்

திருத்தூதர் சீமோன்: திருத்தூதர் பட்டியலில் சீமோனின் பெயர் 11 ஆம் இடத்தில் இடம் பெறுகின்றது. இவர் தீவிரவாதி என்றழைக்கப்பட்டார். மெசபத்தோமியா, சிரியா போன்ற நாடுகளில் திருத்தூதுரைப்பணியை செய்தார். என்று கூறப்படுகின்றது. நற்செய்திப்பணியாற்றும்போது கொலை செய்யப்பட்டார்.

திருத்தூதர் யூதா ததேயு: ததேயு என்று அழைக்கப்பெற்ற யூதா, கடைசி இராவுணவின்போது, ஆண்டவர் தம்மை உலகிற்கு வெளிப்படுத்தாது தன் திருத்தூதருக்கு மட்டும் வெளிப்படுத்துவது ஏன் என்று அவரைக் கேட்ட திருத்தூதர் ஆவார். இவைகளை தவிர வேறு எதுவும் இவர்கள் இருவரைப்பற்றியும் அதிகம் கொடுக்கப்படவில்லை.


செபம்:
ஆதிமுதல் அந்தம்வரை படைத்து பராமரித்தாளும் பரம பொருளை எம் இறைவா! புனித திருத்தூதர்களின் போதனை வழியாக நாங்கள் உம்மை அறிந்து, ஏற்றுக்கொள்ள செய்தீர். இவர்களின் இறைவேண்டலால் மக்களை உம்மில் நம்பிக்கை கொள்ள செய்தருளும். உம்மீதுள்ள விசுவாசம் நாளுக்கு நாள் வளர்ந்து இதன் வழியாக உம் திருச்சபையை மேன்மேலும் வளரச் செய்யும்

இன்றைய புனிதர் 2015-10-27 வோல்ஃப்ஹார்டு Wolfhard


பிறப்பு 1070,அவுக்ஸ்பூர்க் Augsburg, Germany


இறப்பு30 ஏப்ரல் 1127,வெரோனா Verona, இத்தாலி

பாதுகாவல்: ஊர்க்காவலர்கள், கூர்க்கா

இவர் ஊர்களில் பொதுப்பணி செய்யும் கலையைக் கற்றார். பிறகு பவேரியாவிலிருந்து, வெரோனா சென்று, அங்கு பணியாற்றினார். அங்கு ஊர்ப்பொதுப்பணிகள் அனைத்தையும் மிக சிறப்பாக ஆற்றினார். இவர் தான் செய்த பணியின் வழியாக பெற்ற பணத்தை கொண்டு, வெரோனா முழுவதிலும் இருந்த ஏழைகளுக்கு உதவினார். மிகக் குறுகிய நாட்களில் வெரோனா மக்களில் இனங்கண்டுக்கொள்ளப்பட்டார். ஏராளமான ஏழைகளின் வாழ்வை உயர்த்தினார். வெரோனா முழுவதிலும் வாழ்ந்த மக்களால் பெரிதும் புகழப்பட்டார். ஆனால் வோல்ஃப்ஹார்டு அப்புகழை விரும்பவில்லை. இவருக்கு வெரோனா மக்கள் உயர்பதவியை அளிக்க விரும்பினர்.

வொல்ஃப்ஹார்டு பெயரையும், புகழையும், பணத்தையும் சிறுதும் விரும்பாமல், காட்டிற்குச் சென்று தனிமையாக வாழ்ந்து தியானத்தில் ஈடுபட்டார். தன் செப வாழ்வில் திருப்தி அடைந்த வோல்ஃப்ஹார்டு மீண்டும் 1117 ல் வெரோனா திரும்பினார். பிறகு ஒரு துறவற மடத்திற்கு சென்று, அங்கும் தனிமையில் வாழ்ந்தார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் துறவி போலவே வாழ்ந்தார். இவர் அத்துறவற மடத்தில் இருந்த துறவிகளுடன் இவர் இறந்த உடன் உடலை தெருவிலிருக்கும் சாலையோரத்தில் புதைக்கும்படி கூறியிருந்தார். அவர் இறந்தபோது அம்மடத்துறவிகள் அவ்வாறே செய்தனர். சில ஆண்டுகள் கழித்து இவரின் உடல் வெரோனாவில் உள்ள பேராலயத்தில் வைக்கப்பட்டது.


செபம்:
அன்புத் தந்தையே எம் இறைவா! தான் ஈன்ற பணம் பொருட்களைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்து, எளியோரில் உம்மைக்கண்ட வோல்ஃப்ஹார்டின் வாழ்வை, நாங்களும் வாழ, எமக்கு நல்ல உள்ளம் தாரும். தன்னலமின்றி பிறர் நலம் காண நாங்கள் முன்வர தூய ஆவியின் வழிநடத்துதலில் வழிநடக்க நீர் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Monday, 26 October 2015

இன்றைய புனிதர் 2015-10-26 ஸ்ட்ராஸ்பூர்க் ஆயர் அமாண்டூஸ் Amandus von Straßburg


பிறப்பு 290


இறப்பு355,ஸ்ட்ராஸ்பூர்க், பிரான்ஸ்

இவர் ஸ்ட்ராஸ்பூர்க் மறைமாவட்டத்தின் முதல் ஆயர். இவர் 343 ல் சார்டிகா(Sardika) நகரில் நடந்த பொதுச்சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 346 ஆம் ஆண்டு கொலோன் நகரில் நடந்த பொதுச்சங்கத்தையும் தலைமையேற்று நடத்தினார். இவர் இறந்தபிறகு, ஸ்ட்ராஸ்பூர்க் பேராலயத்தில் இவரது உடல் வைக்கப்பட்டது. இவர் எப்போதும் ஆயருக்குரிய உடையுடனே வாழ்ந்தார் என்று கூறப்படுகின்றது. இவரைப்பற்றிய மற்ற குறிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை

செபம்:
ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! சிறந்த அறிவாளியான் ஆயர் ஆமாண்டூசை எம் திருச்சபைக்கு தந்தமைக்காக நாங்கள் உமக்கு நன்றி நவில்கின்றோம். எம் திருச்சபையில் உள்ள ஆயர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், அறிவையும் தந்து, உம் மந்தையின் ஆடுகளை பேணி வளர்க்க, தேவையான அருளை தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

Saturday, 24 October 2015

இன்றைய புனிதர் 2015-10-25 மறைசாட்சி கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பினியன் Krispin und Krispinian

பிறப்பு3 ஆம் நூற்றாண்டு,உரோம், இத்தாலி

இறப்பு287,சோயிசோன்ஸ் Soissons, பிரான்சு

பாதுகாவல்: ஒஸ்னாபூருக் Osnabrück, சோயிசோன்ஸ், காலணி தயாரிப்பவர்கள், தையல் தொழிலாளர்கள்

இவர்கள் இருவரும் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள். இவர்கள் வட பிரான்ஸில் நற்செய்தியை போதித்தவர்கள். செருப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து ஏழை மக்களுக்கு உதவி செய்தார்கள். இடைவிடாமல் ஏழைகளுக்காக உழைத்தார்கள். இவர்கள் கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க மாக்சிமியான் (Maximian) என்பவன் தடைவிதித்தான். அதைமீறி இருவரும் கிறிஸ்துவை அறிவித்தனர். கிறிஸ்துவ நெறியில் வாழ அனைவரையும் தூண்டினர். இதனால் கோபவெறிக்கொண்ட மாக்சிமியான் இருவரையும் எரியும் மெழுகில் இறக்கினான். மிகக் குளிர்ந்த நீரில் நாள் கணக்கில் நிற்க வைத்தான். அப்போதும் இருவரும் சிறிதும் மனந்தளராமல் நற்செய்தியை அறிவித்தனர். இவர்களின் செயல்களை கண்ட மாக்சிமியான் இன்னும் வெறிக்கொண்டு தவறாக தீர்ப்பிட்டு கொன்றான்

செபம்:
உண்மையின் பரம்பொருளே எம் இறைவா! நீர் இவ்வுலக மக்களின் மத்தியில் வாழ்கின்றீர் என்பதை தன் வாழ்வின் வழியாக பறைசாற்றிய இன்றைய புனிதர்களை எமக்கு முன்மாதிரியாக தந்தீர். இவர்களின் வேண்டுதலால், நாங்கள் உமது வார்த்தைக்கு செவிமடுத்து நீர் காட்டும் உம் வார்த்தையின் பாதையில் நடக்க எமக்கு உம் அருள் தாரும்.

இன்றைய புனிதர் 2015-10-24 பேராயர் அந்தோனி மரிய கிளாரெட் Antonius Maria Claret


பிறப்பு23 டிசம்பர் 1807,சாலெண்ட் Sallent, ஸ்பெயின்


இறப்பு24 அக்டோபர் 1870,ஃபோண்ட்ஃப்ரோய்ட் Fontfroide, பிரான்ஸ்

முத்திபேறுபட்டம்: 1934 புனிதர்பட்டம்: 7 மே 1950, திருத்தந்தை 12 ஆம் பயஸ்

இவர் தனது 28 ஆம் வயதில் குருவாக திருநிலைப்படுத்தப்ப ட்டார். பல ஆண்டுகள் கத்லோனியாப் பகுதி(Cathlonia) எங்கும் சென்று மறைப்பணியாளராக பணியாற்றினார். 1843 ஆம் ஆண்டிலிருந்து முழு நேர மறைப்பணியாளராக பணியாற்றினார். 1849 ஆம் ஆண்டு கிளரீசியன் (Clarentiner) என்ற துறவற சபையை உருவாக்கினார். 1850-1857 ஆம் ஆண்டுவரை கியூபாவில் (Cuba) ஆர்ச்பிஷப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1857 ஆம் ஆண்டு அரசி 2 ஆம் இசபெல்லா (Königin Isabella II) அவர்களின் ஒப்புரவு அருட்சாதன குருவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மக்களின் மீட்புக்காக மிக திறம்பட உழைத்தவர் என்னும் பாராட்டுக்கு உரியவரானார். ஸ்பெயின் நாட்டிற்கு திரும்பவந்தபோது, தொடர்ந்து திருச்சபைக்காக பல துன்பங்களை பொறுமையுடன் ஏற்றார். இவர் முதலாம் வத்திக்கான் பொதுச்சங்க கூட்டத்திற்கு செல்லும்போது இறந்தார். இவரின் உடல் ஸ்பெயின் நாட்டில் உள்ள விச் (Vich) என்ற ஊரிலுள்ள பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

செபம்:
அன்பே உருவான இறைவா! புனித அந்தோனி மரிய கிளாரட் மக்கள் நடுவில் நற்செய்தியை அறிவிப்பதில் அவருக்கு வியப்புக்குரிய அன்பையும், பொறுமையையும் அளித்து திடப்படுத்தினீர். நாங்கள் உமது விருப்பத்தையே அனைத்திலும் தேடவும், சகோதரர்களை கிறிஸ்துவிடம் கொண்டுவருவதில் ஊக்கமுடன் ஈடுபடவும், அவருடைய வேண்டுதலால் எங்களுக்கு அருள்புரிவீராக

Friday, 23 October 2015

இன்றைய புனிதர் 2015-10-23 கப்பெஸ்ட்ரானோ நகர் துறவி ஜான் Johannes von Capestrano


பிறப்பு24 ஜூன் 1386,கப்பெஸ்ட்ரானோ, இத்தாலி


இறப்பு23 அக்டோபர் 1456,இலோக் Ilok, ஹங்கேரி

இவர் அக்குயிலா (Aquila) என்பவரின் மகன். இவர் பெருஜியாவில்(Perugia) தன் கல்வியை பயின்றார். தன்னுடைய 26 ஆம் வயதிலேயே, அந்நகரின் மேயர் பதவியை ஏற்றார். அப்போது இந்நகரை கைப்பற்ற போர் ஏற்பட்டது. இப்போருக்குப்பின் இவர் மனமாறினார். திருமணம் செய்த இவர், தன் இல்லற வாழ்வை துறந்து, 1415 ல் புனித பிரான்சிஸ்குவின் சபையில் சேர்ந்தார். பின்னர் இவர் சியென்னா நகர் பெர்னார்டின் Bernhardinஎன்பவரின் நண்பரானார். இவர் தன்னுடைய குருப்பட்டம் பெற்றபின் தானாகவே முன்வந்து பல்வேறு மறையுரைகளை ஆற்றினார்.

பிறகு பெர்னார்டினுடன் சேர்ந்து ஐரோப்பா முழுவதும் சென்று மறைபரப்புப் பணியை ஆற்றினார். சென்ற இடமெல்லாம் ஆடம்பர திருப்பலி நிறைவேற்றி, மக்களை கவரும் விதத்தில் மறையுரையாற்றி, விசுவாசத்தைப் பரப்பினார். தன்னுடைய 40 வயதிற்குள்ளே ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து மறைபரப்பு பணியாற்றி கிறிஸ்துவ மதத்தை வளர்த்தார். பிறகு சிலுவைப்போர் புரிய போர் வீரர்கலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். போர் வீரர்களுடன், தானே போர்புரிய செல்லும்போது, உடல் நலக்குறைவால் உயிர்துறந்தார். இவர் ஐரோப்பாவின் தந்தை என்றழைக்கப்படுகின்றார்


செபம்:
நலமளிக்கும் வல்லவரே எம் இறைவா! உமது இறைஊழியத்தில் நிலைத்து நிற்க புனித யோவானை வலுப்படுத்தினீர். ஐரோப்பாவில் உம்மை பறைசாற்றிட அவரை தேர்ந்தெடுத்தீர். தொடர்ந்து இறைவிசுவாசம் நிலைத்திட உம்மருள் தாரும். உமது பாதுகாவலில் நாங்கள் நலமுடன் வாழவும், உமது திருச்சபை நிலையான அமைதியை பெறவும் செய்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்

Thursday, 22 October 2015

இன்றைய புனிதர் 2015-10-22 கலிலேயா நகர் சலோமி Salome von Galiläa



சலோமி செபதேயுவின் மனைவி. அப்போஸ்தலர் அருளப்பர் மற்றும் யாக்கோபின் தாய். இவர் பெயர் லூக்கா, மத்தேயு, மார்க் ஆகிய மூன்று நற்செய்தியிலும் இடம்பெறுகின்றது. எருசலேமில் சிலுவையின் அடியில் நின்ற பெண்களில் இவரும் ஒருவராவார். இயேசுவின் உயிர்ப்பு திங்களன்று, இயேசுவின் காலியான கல்லறையை சென்று பார்த்தவர்களில் இவரும் உடன் இருந்தார்.

செபம்:
புதுமைகளை செய்பவரே எம் தந்தையே! சலோமியின் வழியாக, அவரின் பிள்ளைகள் இருவரை உம் சீடர்களாக தேர்ந்தீர். உமது சிலுவைப்பாடுகளை உடனிருந்து கண்டு வேதனை அனுபவித்ததின் வழியாக, அவரை நீர் உயர்த்தினீர். அவரை மாதிரியாக கொண்டு, தன் பிள்ளைகளை உம் பணிக்கு அர்ப்பணிக்க, நல்ல உள்ளம் தந்து எம் தாய்மார்களைக் காத்திட வேண்டுமாய் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

Tuesday, 20 October 2015

இன்றைய புனிதர் 2015-10-21 மறைசாட்சி ஊர்சுலா Ursula


பிறப்பு3 ஆம் நூற்றாண்டு(?), இங்கிலாந்து (?)


இறப்பு 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு,கொலோன்

பாதுகாவல்: கொலோன் மறைமாவட்டம், இளைஞர்கள், ஆசிரியர்கள், அமைதியான மரணம்

இவர் ஆங்கிலேயர் அரசர் குடும்பத்தில் பிறந்தவர். சிறுபிள்ளையாக இருக்கும்போதே, துறவிகளுக்குரிய வார்த்தைப்பாடுகளை எடுத்தார். ஆனால் இவரின் தந்தை, செல்வந்தர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தார். ஆனால் ஊர்சுலாவின் இதயம் இறைவனையே நாடியது. இவர் ஒருமுறை கடலில் பயணம் செய்யும்போது, பலத்த காற்று ஏற்பட்டது. அப்போதுதான் சென்ற கப்பலை, கொலோன் நகரை நோக்கி செல்ல ஊர்சுலா கூறவே கப்பலானது கொலோன் நகரை வந்தடைந்தது. அப்போது அழகு வாய்ந்த ஊர்சுலா ஹீனன்கொனிஷ் (Hunnenkönig) என்பவரால் கவரப்பட்டார். ஆனால் அவ்வரசனின் விருப்பத்திற்கிணங்க ஊர்சுலா மறுத்தார். இதனால் அவனால் கொலை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. 1106 ஆம் ஆண்டில் இவரின் புனிதப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இவரின் பெயரில் உள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! ஊர்சுலா என்ற பெயரை தாங்கியுள்ள அனைவரையும் ஆசீர்வதியும். நல்ல உடல் உள்ள நலன்களை கொடுத்து, வாழ்வை ஆசீர்வதித்து இப்புனிதரின் வழியாக உம் ஆசீர்வாதங்களை நீர் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

இன்றைய புனிதர் 2015-10-20 சால்ஸ்பூர்க் ஆயர் விட்டாலிஸ் Vitalis von Salzburg


பிறப்பு7 ஆம் நூற்றாண்டு


இறப்பு 20 அக்டோபர் 730, சால்ஸ்பூர்க் Salzburg, ஆஸ்திரியா

பாதுகாவல்: குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள்

இவர் தனது இளம்வயதிலிருந்தே மறைப்பணியாளராக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். இவர் சால்ஸ்பூர்க் ஆயர் ரூபர்ட் (Rubert) என்பவரிடம் கல்வி கற்றார். பிறகு ஆயர் ரூபர்ட் 27 ஆம் நாள் மார்ச் 718 ஆம் ஆண்டு இறந்துவிடவே, அவருக்கு பிறகு, அவரின் ஆசிரியர் பதவியை விட்டாலிஸ்(Vitalis) ஏற்றார். 12 ஆண்டுகள் தொடர்ந்து அப்பணியை செய்தார். அதன்பிறகு விட்டாலிஸ் சால்ஸ்பூர்க்கில் ஆயர் பதவியை ஏற்றார். ஆயர் ரூபர்ட் பெரிய மறைபரப்பு பணியாளராக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். ஆனால் விட்டாலிஸ் அவ்விருப்பத்தை தன் பணியின் வழியாக நிறைவேற்றினார். இவர் சால்ஸ்பூர்க்கில் புகழ் வாய்ந்த மறைபரப்பு பணியாளராக திகழ்ந்தார்.



செபம்:
ஆற்றல் மிக்க இறைவா! குழந்தை பருவத்திலிருந்தே உம்மீது ஆர்வம் கொண்டு வாழ புனித விட்டாலிசை தூண்டினீர். உமது இறைத்திட்டத்தை அவரில் நிறைவேற்றினீர் இன்று எம்மை நீர் தயையுடன் கண்ணோக்கியருளும். உமது அன்பால் நாங்கள் தூண்டப்பட்டு என்றும் உம்பணியில் ஆர்வம் கொண்டு செயல்பட நீர் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

Sunday, 18 October 2015

இன்றைய புனிதர் 2015-10-19 19 புனித சிலுவை சின்னப்பர் Paul of the Cross, Confessor


பிறப்பு3 ஜனவரி 1694,ஒவாடா ovada, இத்தாலி



இறப்பு18 அக்டோபர் 1775, உரோம், இத்தாலி

இவர் ஓர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை ஓர் வணிக வியாபாரி. இவர் தன் சிறுவயதிலிருந்தே வணிகம் செய்ய தந்தைக்கு உதவினார். ஞான உபதேச வகுப்பின் வழியாக ஆன்ம வாழ்வில் வளர்ந்து வந்தார். தனது 22 ஆம் வயதில் தன்னை ஒடுக்கி, செப, தவ வாழ்வில் ஈடுபட்டார். தான் பிறந்த ஊரிலிருந்து அனைத்து ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிவிடைபுரிந்தார். பின்னர் தன்னுடன் சில நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு, மறைபரப்புப் பணியை ஆற்றினார்.

இவர் 1725 ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் பெனடிக்டின் ஆசியுடன் துறவற குழுமம் ஒன்றை நிறுவினார். பின்னர் நாடெங்கும் சென்று போதனைப்புரிந்து மறைப்பணியாற்றினார். 1769 ஆம் ஆண்டு இவர் தொடங்கிய அத்துறவற இல்லம் "பசியோனிஸ்ட்" Passionist என்ற பெயர் கொண்டு, துறவற சபையாக திகழ்ந்தது. இவர் "சிறந்த மறைப்பணியாளர்" என்ற பட்டம் பெற்று, மக்களின் மீட்புக்காக பெரிதும் பாடுபட்டார். இவர் போதிப்பதில் சிறந்த ஆர்வம் கொண்டு பணியாற்றினார். கடுந்தவ, செபத்தினால் இறுதிவரை தன் சபைக்காக உழைத்தார். இவர் தான் இறக்கும் வரை, திருச்சிலுவையின் மீது பக்திக்கொண்டு வாழ்ந்தார்.


செபம்:
எல்லாம் வல்லவரே எம் தந்தையே! சிலுவைமீது மட்டுமே அன்பு கொண்டிருந்த உமது மறைப்பணியாளராம் புனித பவுல், தம் வேண்டுதலால் உமதருளை எங்களுக்குப் பெற்றுத்தருவாராக. நாங்கள் அவருடைய முன்மாதிரியான தூண்டுதலைப் பெற்று, மனவுறுதியுடன் எங்கள் சிலுவையை அரவணைத்துக் கொள்ள செய்தருளும்.

Saturday, 17 October 2015

இன்றைய புனிதர் 2015-10-18 நற்செய்தியாளர் லூக்கா Aposle & Evangelist Lucas


பிறப்புஅந்தியோக்கியா, சிரியா


இறப்பு1 ஆம் நூற்றாண்டு,கிரேக்கம்

பாதுகாவல்: பொலோனியா நகர், பதுவை நகர், மருத்துவர்கள், ஓவியர்கள், வக்கீல், புத்தகம் வெளியிடுவோர்

இவர் ஒரு புறவின இனத்தைச் சார்ந்தவர். இருப்பினும் திருமுறைக்கு மனந்திரும்பினார். புனித பவுலுடன் சேர்ந்து திருத்தூதுரைப் பயணம் மேற்கொண்டார். புனித பவுலின் போதனைக்கு ஏற்ப நற்செய்தி ஒன்றை எழுதியுள்ளார். பின்னர் திருத்தூதர்பணி என்னும் விவிலிய நூலையும் எழுதியுள்ளார். அதில் பவுல் முதன்முறையாக உரோமையில் தங்கிருந்ததுவரை நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை குறிப்பிட்டுள்ளார். புனித பவுல் லூக்காவை மருத்துவர் என்று குறிப்பிட்டார். லூக்கா தான் எழுதிய நற்செய்தியில், ஏழை மக்களுக்கு மிக முக்கியத்துவம் தந்துள்ளார்.

செபம்:
ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! ஏழைகள் மீது உமக்குள்ள அன்பின் மறைப்பொருளை தமது மறையுரையாலும், எழுத்தாலும் வெளிப்படுத்த, புனித லூக்காவைத் தேர்ந்தெடுத்தீர். கிறிஸ்துவர்களாகிய நாங்கள் ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டு, உம்மீது அன்புகொண்டு, ஏழைகளை என்றும் ஏற்று வாழ, வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

இன்றைய புனிதர் 2015-10-17 அந்தியோக்கியா நகர் ஆயர் இக்னேசியஸ் St. Ignatius of Antioch


பிறப்பு35,சிரியா









இறப்பு107 அல்லது 117,உரோம்

பாதுகாவல்: மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் வட ஆப்ரிக்க பகுதி ஆலயங்கள்இக்னேசியஸ் திருத்தூதர் ஜானின் மாணவர். அந்தியோக்கிய நகரின் மூன்றாவது ஆயர். இவர் கத்தோலிக்க திருச்சபையின் தந்தை என்றழைக்கப்பட்டார். காட்டு மிருகங்களால் கடித்துக் கொல்லப்பட்ட மறைசாட்சியர்களைப் பற்றி கடிதங்கள் எழுதியுள்ளார். இவர் ஆதிகால திருச்சபையின் இறையியலாளர் என்று அழைக்கப்பட்டார். திருச்சபையில் ஆயர்கள் எப்படி வாழ வேண்டுமென்பதைப் பற்றியும் திவ்விய நற்கருணையைப்பற்றியும் முக்கிய கடிதங்களை எழுதியுள்ளார். இவர் அந்தியோக்கியாவின் மூன்றாவது ஆயராக பொறுப்பேற்றார்.


இவர் கிறிஸ்துவத்தை பரப்ப அரும்பாடுபட்டார். இதனால் தற்போது உரோம் நகரில் உள்ள கொலோசேயத்தில்(Kolosseum) சிறைபிடித்து வைக்கப்பட்டு பல கொடிய மிருகங்களால் கடிக்கப்பட்டு மறைசாட்சியாக கிறிஸ்துவின் பொருட்டு தன் உயிரை ஈந்தார்.


செபம்:
அன்பு தந்தையே எம் இறைவா! உம் பொருட்டு தன் உயிரை ஈந்து, உம்மை இவ்வுலகில் பறைசாற்ற பாடுபட்ட ஆயரான அந்தியோக்கிய நகர் இக்னேசியஸை எமக்கு நீர் பரிசாக தந்தமைக்காக, உமக்கு நன்றி கூறுகின்றோம். இவரின் வேண்டுதலால் இன்னும் சிறப்பாக உம் திருச்சபையை வளர்த்தெடுத்து நீர் அருள்புரிய வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்

Friday, 16 October 2015

இன்றைய புனிதர் 2015-10-16 துறவி எட்விக் Hedwig


பிறப்பு1174,பவேரியா Bayern, ஜெர்மனி


இறப்பு15 அக்டோபர் 1243,சிலேசியா Silesia

புனிதர்பட்டம்: 26 மார்ச் 1267, திருத்தந்தை 4 ஆம் கிளமெண்ட்
பாதுகாவல்: பெர்லின், போலந்து, சிலேசியா

இவர் சிலேசியா நாட்டை சேர்ந்த ஹென்றி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்தார். எட்விக் ஏழு குழந்தைகளுக்கு தாயானார். இவர் தனது குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். ஹென்றி டிரேப்னிட்ஸ்(Trebnitz) என்ற ஊரில் சிஸ்டர்சியன் Cistersien துறவற மடத்திற்கென்று, துறவற இல்லம் ஒன்றை கட்டினார். அம்மடத்தில் துறவற இல்லத்திற்கான, மருத்துவமனை ஒன்றையும் கட்டினார். ஹென்றி 1238 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதனால் அதே ஆண்டு, எட்விக் டிரேப்னிட்சில் தன் கணவர் கட்டிய துறவற மடத்தில் சேர்ந்து செபதவ வாழ்வில் ஈடுபட்டார். அப்போது தன் பிள்ளைகளிடையே பிரச்சனைகள் எழுந்தது. இவரின் ஒரு பிள்ளை மங்கோலியர்களால் கொல்லப்பட்டார். எட்விக் தன் பிள்ளைகளுக்காக இடைவிடாமல் செபித்து செபத்தினாலேயே மங்கோலியர்களை வென்றார்.

எட்விக் தனக்கு சொந்தமான நிலங்கலை திருச்சபைக்கு வழங்கினார். தனது கணவர் உதவியுடன் ஏழைகளுக்கு ஏராளமான் உதவிகளை செய்தார். இவர் குளிர்காலத்தில் கூட பனிகட்டிகள் கொட்டியபோதும், காலணி அணியாமலே பனியில் நடந்து சென்று செபம் செய்து, மறைபணியாற்றி ஏழைகளுக்கு உதவியுள்ளார். இவர் இறந்த உடன் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள பேராலயத்தில் இவரின் உடல் வைக்கப்பட்டது.


செபம்:
எல்லாம் வல்லத் தந்தையே! அனைவர்க்கும் தாழ்ச்சியின் எடுத்துக்காட்டாக விளங்கிய புனித எட்விக்கின் புனிதமிகு வாழ்வினால் நீர் எங்களுக்கு துணை புரியும்படியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Thursday, 15 October 2015

இன்றைய புனிதர் 2015-10-15 மறைவல்லுநர் அவிலா தெரசா Theresa von Avila


பிறப்பு28 மார்ச் 1515,அவிலா, ஸ்பெயின்


இறப்பு 4 அக்டோபர் 1582, ஸ்பெயின்

முத்திபேறுபட்டம்: 24 ஏப்ரல் 1614, திருத்தந்தை 5 ஆம் பவுல்
புனிதர்பட்டம்: 12 மார்ச் 1622, திருத்தந்தை 15 ஆம் கிரகோரி
பாதுகாவல்: ஸ்பெயின் நாடு, உடல் நோய்களிலிருந்து

தெரசா அல்போன்சோ சான்சேஸ் டீ சேப்பேடா ( Alfonso Sanchez de Cepeda) மற்றும் பெயாட்ரிஸ் டீ அகுமதா (Beatrix de Ahumada) என்பவரின் மகளாக பிறந்தார். சான் ஜூவான் (San Juan) என்ற ஆலயத்தில் ஞானஸ்நானத்தையும், புதுநன்மையையும் பெற்றார். இவரின் உடன் பிறந்தவர்கள் 11 பேர்கள் இவர்களில் தெரசாவே பெற்றோரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இவர் சிறுபிள்ளையாக இருந்தபோதே, திருக்காட்சியின் வழியாக, தான் துன்பப்பட்டுதான் இறப்பேன் என்பதை அறிந்து, அதை மற்றவர்களிடமும் கூறினார். இவர் தனது 7 ஆம் வயதிலேயே, தன் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி கடவுளுக்காக வாழ வேண்டுமென்று முடிவுசெய்தார். பின்னர் அவர் விரும்பியவாறே 1527 ல் அவரின் 12 ஆம் வயதில் விட்டு வெளியேறினார். இதையறிந்த அவரின் தந்தை மீண்டும் தெரசாவை கண்டுபிடித்து, இல்லத்திற்கு அழைத்து வந்தார். தெரசாவின் செயலால் கோபம் கொண்ட தந்தை, அவரை வன்மையாக கண்டித்தார். இதனால் அவர் மனமுடைந்து, மிகுந்த வேதனையை அனுபவித்தார். இவைகளை கண்ட அவரின் தந்தை 1531 ல் தெரசாவை, அவிலாவில் இருந்த அகுஸ்தீன் சபையில் கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் 1535 ஆம் ஆண்டில் துறவியாக முடிவு செய்து கார்மேல் துறவற மடத்திற்கு சென்றார்.

அப்போது தெரசா நோய்வாய்பட்டு 4 நாட்கள் சுயநினைவை இழந்து, கோமாவில் இருந்தார். அதன்பிறகு பக்கவாத நோயால் தாக்கப்பட்டார். அச்சமயத்தில் 1539 ஆம் ஆண்டு, இயேசு சிலுவையில் துன்பப்படுவதை திருக்காட்சியாகக் கண்டார். இவைகளை உடனிருந்த அருட்சகோதரிகல் நம்பிக்கை கொள்ளாமல், அவருக்கு எதிராக செயல்பட்டனர். அவரை மிகவும் வேதனைக்குள்ளாக்கினர். 1560 ல் தனது 45 ஆம் வயதில் மீண்டும் தான் மிக துன்பப்பட்டு உயிர்விடப்போவதாக மீண்டும் திருக்காட்சியை கண்டார். இதனால் 1562 ல் தெரசா அம்மடத்தை விட்டு வெளியேறி, தனியாக மற்றொரு மடத்தில் வாழ அனுமதிக்கப்பட்டார். இவர் அம்மடத்தில் மிக கடுமையான ஒழுங்குகளோடு தன் வாழ்வை வாழ்ந்தார். செபம் ஒன்றையே தன் மூச்சாகக் கொண்டார். இவரின் செப வாழ்வால் 1568 ல் மற்றொரு துறவற மடத்தையும் நிறுவினார். பின்னர் 1577 ஆம் ஆண்டில் 17 பெண்கள் துறவற இல்லமும், 15 ஆண்டுகளுக்கான துறவற இல்லமும் காணப்பட்டது. இவ்வில்லங்கள் அனைத்துமே மௌனத்தையும் கடுமையான எளிமையையும், காலணிகள் அணியாமலும், மிக எளிமையான உணவையும் உண்டு, செபவாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தும் வாழ்ந்தனர்.

தெரசா பல முறை திருக்காட்சியைக் கண்டார். இவைகளை 400 க்கும் மேற்பட்ட கடிதங்களில் எழுதினார். இவர் ஸ்பெயின் நாட்டு மக்களால் திருக்காட்சியின் மறைவல்லுநர் என்றழைக்கப்பட்டார். தனது திருக்காட்சிகளின் வழியாக திருச்சபைக்கு பலவிதங்களில் உதவி செய்த தெரசா தனது 65 ஆம் வயதில் உடல்நிலை குன்றி இறைவனடி சேர்ந்தார்.


செபம்:
அனைத்தையும் கடந்து, அருஞ்செயல் ஆற்றும் எம் இறைவா! புனித அவிலா தெரசாவை எம் திருச்சபைக்கு நீர் கொடுமையாக தந்தமைக்காக நன்றி கூறுகின்றோம். அவரின் ஆன்மீக போதனைகளின்படி நாங்கள் வாழ்ந்து, அவரின் உதவியால், உம்மீது பற்றுக்கொண்டு வாழ வரம் அருள, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

Tuesday, 13 October 2015

இன்றைய புனிதர் 2015-10-14 புனித முதலாம் கலிஸ்துஸ் St.Callistus I



பிறப்பு2 ஆம் நூற்றாண்டு,உரோம், இத்தாலி

பாதுகாவல்: கல்லறையில் பணிபுரிவோர்

இவர் ஓர் அடிமையாக இருந்தவர். ஹிப்போலிடஸ் அரசன் (Hippolytus) மக்களை கொடுமைப்படுத்தி, கடுமையான விதிகளை விதித்து, கொலை செய்தான். மக்களை தன் விருப்பப்படி அடக்கி, ஆண்டுவந்ததுடன், அவர்களை தன்னிடம் அடிமையாகவும் வைத்தான். கலிஸ்துஸ்சையும் அவன் பிடியில் வைத்திருந்தான். அவன் செய்த அனைத்து அட்டூழியங்களையும் கலிஸ்துஸ் பொறுமையோடு ஏற்று, கிறிஸ்துவை தன் நெஞ்சில் சுமந்தார். கிறிஸ்துவ மக்களுக்காக போராடினார். அநீதிகளை தைரியத்துடன் தட்டிக்கேட்டார். இதனால் இவருக்கு கடுமையான தண்டனை அளிக்க ஹிப்போலிட்டஸ், கலிஸ்துசை கப்பலில் ஏற்றிச் சென்றான். அப்போது கலிஸ்துஸ் கப்பலிலிருந்து தப்பிக்க முயன்று கடலில் குதித்தார். ஆனால் ஹிப்போலிடஸ் அவரைப் பிடித்து உரோம் நகர் கொண்டு சென்று, கொடுமையான தண்டனையை விதித்தான். 10 ஆண்டுகள் கழித்து விடுதலையானார்.

கலிஸ்துஸ் அடிமையாக இருந்தபோதும், அவரின் விசுவாசத்தையும் இறையியல் பண்பையும் கண்ட திருத்தந்தை செப்ரினுஸ் என்பவரால் திருத்தொண்டராக்கப்பட்டார். 219 ஆம் ஆண்டு செப்ரினுஸ் இறக்கவே அவருக்குப்பின் இவர் பேதுருவின் அரியணையில் திருத்தந்தையானார். அதோப்சியானிஸ்தர்கள் என்றழைக்கப்பட்ட, திருச்சபைக்கு முரணான கோட்பாடுடையவர்களுக்கு எதிராக போராடினார். கடவுளின் இரக்கமும், பராமரிப்பும் தொடர்ந்து திருச்சபையை காத்து வழிநடத்துமாறு, எந்நேரமும் இறைவேண்டல் செய்து, எதிர்வந்த துன்பங்களை வென்றார்.


செபம்:
விடுதலை வழங்குபவரே! அடிமைகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, உமது தைரியத்தைத் தாரும். நீதிக்கெதிராக குரல் கொடுத்து விடுதலை வாழ்வு வாழ வரம் தாரும். அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்று சுதந்திர வாழ்வை சுவைத்து வாழ, வாழ்வில் நிம்மதியடைய, உணர்வுகளை வெளிப்படுத்தி வாழ உமதருள் தாரும்.

இன்றைய புனிதர் 2015-10-13 புனித ஆரிலேக் ஜெரால்டு St. Gerald of Aurillac


பிறப்பு855,அரிலேக், பிரான்ஸ்

இறப்பு 13 அக்டோபர் 909, செனெசாக் Cenezac, பிரான்ஸ்

பாதுகாவல்: ஊனமுற்றோர், தனிமையில் வாழ்வோர்

இவர் ஓர் செல்வந்தராக வாழ்ந்துள்ளார் என்றும், துறவியாகாமலே, துறவியைப் போலவே தன் வாழ்நாள் முழுதும் வாழ்ந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. இவரது முகத்தில் பெரிய முகப்பரு ஒன்று காணப்பட்டது. நாளடைவில் அம்முகப்பருவால் அவர் பார்வையை இழந்தார். இவர் ஏழைகளின் மேல் இரக்கமும், கருணையும் கொண்டு வாழ்ந்தார். குருவாக வேண்டுமென்று மிகவும் ஆசைக்கொண்டார். ஆனால் தன் உடல்குறை காரணமாக அவ்வாசை நிறைவேறாமல் போனது. ஜெரால்டு தனது நில புலன்களை விற்று, அவற்றை திருத்தந்தையிடம் கொடுத்து, ஏழை மக்களுக்கு உதவும்படியாக கூறினார். விசுவாசம் ஒன்றே போதுமென்று இறை நம்பிக்கையில் தன் வாழ்வை வாழ்ந்தார். தனிப்பட்ட முறையில் இறைப்பணியை செய்தார். சிறப்பான முறையில் மறைப்பணியை ஆற்றினார். கற்பு என்ற வார்த்தைப்பாட்டை தானாகவே எடுத்துக்கொண்டார். திருமண வாழ்வில் ஈடுபடாமல், துறவி போலவே வாழ்ந்து மடங்களை நிறுவினார். அம்மடங்களில் இடைவிடாமல் வழிபாடு வைத்தும், ஆராதனை வைத்தும் செபித்தார். நாளடைவில் இவரின் மடமானது யாத்திரை தளமாக மாறியது. அதில் பெற்ற பணங்களைக் கொண்டு உரோம் நகர திருச்சபைக்கு உதவினார். பிறகு திருத்தந்தையின் ஒப்புதல் பெற்று தனது மடத்தை மதச்சார்பற்ற சபையாக (Secular) மாற்றினார். பலர் இம்மடத்தில் சேரவே, பல நாடுகளுக்கு சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் வாழ்நாள் முழுவதுமே பக்தியையும், நேர்மையையும் தன்னகத்தே கொண்டு வாழ்ந்தார்.



செபம்:
என்றும் வாழ்பவரே! சாதி மதம் இனம் கடந்து பணிபுரியும் மதச்சார்பற்ற துறவற சபையினரை வழிநடத்தும். இவர்களை காணும் மக்கள் அத்துறவிகள் உம்மைக் காண வரம் அருளும். உம்மீது நம்பிக்கையின்றி வாழும் மக்களை உம்பால் ஈர்ந்து, நம்பிக்கையில் வளரவும், வாழவும் உறுதிப்படுத்தியருளும்.

Sunday, 11 October 2015

இன்றைய புனிதர் 2015-10-12 புனித வில்பிரிட் St. Wilfrid



இறப்பு710

இறப்பு 710

பாதுகாவல்: ரிப்பன் மறைமாவட்டம் Ripon

இவர் லிண்டஸ்பார்னே (Lindesfarne) என்ற ஊரில் கல்வி கற்றார். பிறகு பிரான்ஸ் நாட்டிலுள்ள லியோன்ஸ் நகரிலும் (Lyons), உரோம் நகரிலும் தனது நேரத்தை கழித்தார். அங்கிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு திரும்பி, 658 ஆம் ஆண்டு ரிப்பனில் (Ripon) மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது உரோம் நகர விதிகளை இங்கிலாந்து நாட்டில் அறிமுகப்படுத்தி, அவற்றை நடைமுறைப்படுத்த பயிற்சி கொடுத்தார். 669 ல் யார்க்கிற்கு(York) ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அப்பணியை ஆர்வத்துடன் ஆற்றினார். தனது மறைமாநிலத்தில் புனித ஆசீர்வாதப்பர் சபைக்கென்று பல மடங்களை நிறுவினார். 686 ஆம் ஆண்டு கடினமாக உழைத்து, சாக்சனில்(Saxon) தீவிரமாக நற்செய்திப் பணியை ஆற்றினார். 691 ஆம் ஆண்டு உரோம் நகரிலிருந்து வந்த செய்தியின்படி, ஆயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பிறகு 703 ஆம் ஆண்டு தனது மடாதிபதி பதவியையும் விட்டு விலகினார். பின்னர் ரிப்பன் மடத்திலேயே தங்கி, செப வாழ்வை ஆழமாக்கி, இறைவனோடு ஒன்றிணைந்திருந்தார். தான் இறக்கும் வரை, மிக திறமையாக செயல்பட்டார். தனது துறவற மடத்திற்கு, உள்நாட்டு அரசால் தொந்தரவு ஏற்பட்ட போது, அவர்களை அன்போடு அணுகி ரிப்பன் மடத்திற்கு வந்த தொல்லைகளை நீக்கினார்.

திருச்சபையின் ஒழுங்குகளை நிறைவேற்றி, மக்கள் அவற்றில் நிலையாக வாழவேண்டுமென்பதற்காக, இங்கிலாந்தில் பல துன்பங்களை அனுபவித்தார். ஆனால் அவை அனைத்தையும் மிக பொறுமையோடு ஏற்று, சிறந்த மறைப்போதகராக பணியாற்றினார். இவர் பல திறமையான மறைப்பணியாளர்களை உருவாக்கி அவர்களை ஜெர்மனி நாட்டில் மறைபரப்பு பணியை ஆற்ற அனுப்பினார்.


செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! தீவிரமாக நற்செய்திப் பணியை ஆற்றி, திருச்சபை ஒழுங்குகளை தானும் கடைபிடித்து, மற்றவர்களையும் அதன்பிடி வாழச் செய்த மனித வில்பிரட்டைப் போல திருச்சபையின் சட்டங்களை நாங்கள் கடைபிடித்து வாழ உம்மை இறைஞ்சுகின்றோம்.

Saturday, 10 October 2015

இன்றைய புனிதர் 2015-10-10 புனித பிரான்சிஸ் போர்ஜியா St. Francis Borgia, Confessor & Priest



பிறப்பு1510,வாலென்சியா Valencia, ஸ்பெயின்

இறப்பு1573,உரோம்

முத்திபேறுபட்டம்: 23 நவம்பர் 1624, திருத்தந்தை 8 ஆம் ஊர்பான்
புனிதர்பட்டம்: 20 ஜூன் 1670, திருத்தந்தை 10 கிளமெண்ட்
பாதுகாவல்: போர்த்துக்கல் நாடு, பூகம்பத்திலிருந்து

பிரான்சிஸ் ஸ்பெயின் நாட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்தார். இவர் திருமணமானவர். இவரின் மனைவி எலியானோர் (Eleanor) என்பவர். இவருக்கு எட்டு குழந்தைகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தனர். இவர் தனது குடும்பத்துடன் இணைந்து, தவறாமல் திருப்பலிக்கு சென்றார். ஒவ்வொரு முறையும் திவ்விய நற்கருணையை மிக பக்தியோடு பெற்றார். இவர் அடக்கமான, அன்பான வாழ்வை வாழ்ந்தார். ஸ்பெயின் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியடையும் விதமாக தனது சொத்துக்களையும், பதவியையும், தன் மகன் சார்லஸ்சிடம் ஒப்படைத்துவிட்டு, இயேசு சபையில் சேர்ந்து குருவானார்.


இவர் குருப்பட்டம் பெற்றபின், முதல் திருப்பலியை மிக ஆடம்பரமாக சிறப்பித்தார். இவரின் இயேசு சபை தலைவர். பிரான்சிசை சோதிக்கும் நோக்குடனும் அவரின் ஆன்மீக வாழ்வை அறியவும், சபை தலைவர் இவ்வாறு சிறப்பித்தார். ஆனால் பிரான்சிசின் எளிமையையும், தாழ்ச்சியையும் கண்டு, சபைத் தலைவரே தனது செயலை நினைத்து தலைக்குனிந்தார். பிரான்சிஸ் குருவாக இருந்தபோதும், காடுகளுக்குச் சென்று, விறகு பொறுக்கி கொண்டுவந்து, கொடுத்து, சமைப்பதற்கு எப்போதும் உதவினார். உணவு பந்தியில் தாழ்ச்சியோடு தன் கையால் அனைவருக்கும் உணவு பரிமாறினார். அதன்பின்னர் மண்டியிட்டு மற்ற குருக்களிடம் உணவு தருமாறு கெஞ்சிகேட்டு வாங்கி உண்டார்.

இவருடன் இருந்த குருக்கள், பல வழிகளில் இவரை கோபமூட்டினர். ஆனால் பிரான்சிஸ் கோபம் கொள்ளாமல், அனைவரிடத்திலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் அன்பாகவே நடந்துக்கொண்டார். அவர் தனது குருத்து வாழ்வில் ஒரு முறை மட்டும் பிறர் தனக்கு மரியாதை கொடுத்த காரணத்திற்காக கோபப்பட்டுள்ளார். இவர் தனது வாழ்வு முறையால் இயேசு சபை ஸ்பெயின், மற்றும் போர்த்துக்கல் நாடு முழுவதிலும் பரப்பியது. இவரின் அற்புதமான, அழகான வேலையைக் கண்டு, அந்நாட்டு இளைஞர்கள் பலபேர். அச்சபையில் சேர்ந்து குருவாகி பிரான்சிசைப் போலவே வாழ்ந்தனர். இவரின் எளிமையான வாழ்வால், பலருக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். இவரின் வழிகாட்டுதலில், இயேசு சபை உலகம் முழுவதிலும் பரவியது. இயேசுவின் இறைப்பணியை இக்குருக்கள் திருச்சபையில் சிறப்பாக ஆற்றினர். இவ்வெற்றியனைத்தும் அருள்தந்தை பிரான்சிசைச் சார்ந்தது.


செபம்:
விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் ஒருபோதும், பெற்றுக் கொள்ளாதவரே தெய்வமே! இவ்வுலகச் செல்வங்கள் அனைத்தையும் துறந்து, தாழ்ச்சியோடும், எளிமையோடும் வாழ்ந்த புனித பிரான்சிஸ் போர்ஜியாவின், முன்மாதிரியான வாழ்வை, நாங்களும் பின்பற்றி ஏழ்மையை ஆடையாக உடுத்தி வாழ, வரம் தர இறைவா உம்மை வேண்டுகின்றோம்.

Thursday, 8 October 2015

இன்றைய புனிதர் 2015-10-09 புனித ஜான் லியோனார்டி, சபை நிறுவுனர் St. John Leonardi SP



பிறப்பு1541, டஸ்கனி Tuscany, இத்தாலி

இறப்பு 9 அக்டோபர் 1609, உரோம்

இவர் மருந்து தயாரித்து விற்கும் கலையை கற்றார். ஆனால் அப்பணியை செய்ய விருப்பமில்லாமல் இருந்தார். இவரின் மனம் குருவாக வேண்டுமென்று ஆசைக்கொண்டது. எனவே அப்பணியை விட்டுவிட்டு, 1572 ஆம் ஆண்டு குருவானார். பிறகு மறைப்பணியை ஆற்றினார். முக்கியமாக இவர் தானாகவே முன்வந்து சிறுவர்களுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுத்தார். இவர் 1574 ஆம் ஆண்டில் இறையன்னையின் பெயரால், துறவற சபை ஒன்றை நிறுவினார். இதனால் பல இன்னல்களை மேற்கொண்டார். இடையூறுகளால் மிகவும் பாதிக்கப்பட்டார். இருப்பினும், திருமறையை பரப்புவதற்கென்று, மீண்டும் மறைப்பணியாளர்களின் குழு ஒன்றை ஏற்படுத்தினார். உரோம் நகரிலுள்ள "திருமுறைப் பரப்புதலின் பேராயம்" என்ற நிறுவனத்திற்கும் அடித்தளம் இட்டார். திருத்தந்தையர்கள் பலரின் முயற்சியால் இச்சபைகள் அனைத்தும், இன்று சிறப்பாக செயல்படுகின்றது. திருச்சபையில் உள்ள பல சபைகள் மீண்டும் தங்களின் ஒழுங்குமுறைப்படி செயல்பட, இவர் பரிவன்புடனும், முன்மதியுடனும் செயல்பட்டார். இவையனைத்தையும் நிறைவேற்றி வெற்றி பெற பல துன்பங்களையும் பொறுமையோடு ஏற்று, எளிமையாக வாழ்ந்தார். 1614 ஆம் ஆண்டு திருத்தந்தை 5 ஆம் பவுல் இச்சபைகள் முழுமையாக செயல்பட அதிகாரம் வழங்கினார்.


செபம்:
மூவொரு கடவுளே! மனிதனின் நோய்கலை குணமாக்கும் மருந்து தயாரிப்பவர்களை நீர் கண்ணோக்கியருளும். தங்களின் பணியில் கவனம் செலுத்தி, சிறப்பாக செயல்பட, உம் சக்தியை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, 7 October 2015

இன்றைய புனிதர் 2015-10-08 புனித பெலாகியா St. Pelagia



பிறப்பு14 ஆம் நூற்றாண்டு(?)

இறப்பு14 ஆம் நூற்றாண்டு,அந்தியோக்கியா

இவர் மார்கரேட் என்ற மற்றொரு பெயரால் அழைக்கப்பட்டார். இவர் மிகவும் அழகு வாய்ந்த பெண்ணாக திகழந்தார். இவர் அந்தியோக்கியாவில் சிறந்த நடிகையாக இருந்தார். அப்போது பெலாகியா தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்தார். அச்சமயத்தில் ஒருநாள் அந்தியோக்கியாவில் நடித்துகொண்டிருக்கும்போது குருவாக இருந்த புனித நானூஸ் (St. Nannus) அவரைக் கடந்து சென்றார். அவரைப் பார்த்த பெலாகியாவின் மனதில் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டது. உடனே நடிக்கும் பணியை விட்டு விட்டு , நானூஸ் போதித்து கொண்டிருந்த இடத்தை நோக்கி சென்று, அவரின் மறையுரையை கேட்டார்.

அம்மறையுரையானது இவரின் மனதை மிகவும் பாதித்தது. அவர் மனமுடைந்து, நானூஸ் அவர்களிடம் மனம் நொந்து அழுது, தனது வேதனைகளை பகிர்ந்தார். பின்னர் மனமாற்றம் பெற்று, திருமுழுக்குப் பெற்று, தனது நடிகைப் பணியை விட்டு விட்டு, கடவுளுக்காக வாழ முடிவெடுத்தார். தன்னிடமிருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று, ஏழைகளுக்கு கொடுத்தார். அந்தியோக்கியாவிலிருந்து வெளியேறி, ஆண்கள் உடுத்தும் துறவற உடையை அணிந்து வாழ்ந்தார்.

பின்னர் எருசலேமிலிருந்த ஒலிவியட் (Olivette) என்றழைக்கப்பட்ட மலையில் குகையில் வாழ்ந்த துறவிகளுடன் சேர்ந்து, தானும் ஓர் துறவியாக வாழ்ந்தார். மிகக் கடினமான ஏழ்மையை தன் வாழ்வின் மனமாற்றத்திற்குப்பின் வாழ்ந்தார். இவர் அங்கிருந்தவர்களால் " தாடியில்லா துறவி" (Beardless Monk)என்றழைக்கப்பட்டார். இவர் தன்னுடன், தன்னைப் போன்று வாழ்ந்த, சில இளம்பெண்களின் வாழ்வையும் மாற்றி, அவர்களையும் துறவற வாழ்வை வாழ அழைத்தார். இறுதியில் ஏறக்குறைய 15 இளம் பெண்களும் இவருடன் சேர்ந்து, துறவிகளாக வாழ்ந்து, தங்களின் வாழ்வின் இறுதிவரை, கடவுளுக்காக வாழ்ந்தார். தங்களின் பேச்சிலும், செயல்களிலும் இறைவனை மட்டுமே முன்வைத்து வாழ்ந்தனர்.


செபம்:
வாழ்வை மாற்றுபவரே எம் இறைவா! தன்னுடைய அழகு, பணம், பொருள் அனைத்தையும் குப்பையென கருதி உம்மை பற்றிக்கொண்டு, மனமாற்றம் பெற்று, வாழ்ந்த, புனித பெலாகியாவைப்போல, நாங்களும் எங்களின் தீயச் செயல்களிலிருந்து மனமாற்றம் பெற்று, எம்மால் இயன்றவரை, மற்றவர்களுக்காக நாங்கள் வாழ, எம்மை மாற்றியருளும்.

Tuesday, 6 October 2015

இன்றைய புனிதர் 2015-10-07 மறைசாட்சி எர்னஸ்ட் Ernst von Neresheim OSB




பிறப்பு11 ஆம் நூற்றாண்டு,ஜெர்மனி

இறப்பு7 அக்டோபர் 1148,மெக்கா, சவுதி அரேபியா

இவர் ஜெர்மனியிலுள்ள அவுக்ஸ்பூர்க்கில் (Augsburg) 1119 ஆம் ஆண்டு பெனடிக்டின் துறவற மடத்தில் சேர்ந்தார். இவர் நேரஸ்ஹைம் என்ற ஊரில் பெனடிக்டின் துறவற இல்லம் ஒன்றையும் துவங்கினார். நாளடைவில் இத்துறவற இல்லத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் புனித நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அவ்வேளையில் இவர் சிறைபிடித்து செல்லப்பட்டார். பின்னர் மெக்காவில் வைத்து சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார். அச்சமயத்தில் பல துன்பங்களின் மத்தியில் கொலை செய்யப்பட்டார்.

செபம்:
இரக்கமே உருவான இறைவா! புனித பெனடிக்டின் சபையில் உழைத்து மரித்த ஒவ்வொரு துறவிகளையும், உமது வான் வீட்டில் சேர்த்தருளும். இவர்களின் இறைவேண்டலால் அச்சபையை தொடர்ந்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Monday, 5 October 2015

இன்றைய புனிதர் 2015-10-06 புனித புரூனோ St. Bruno



பிறப்பு1030,கொலோன் Köln, ஜெர்மனி

இறப்பு 6 அக்டோபர்,செர்ரா சான் புரூனோ Serra San Bruno

புனிதர்பட்டம்: 17 பிப்ரவரி 1623, திருத்தந்தை 15 ஆம் கிரகோரி
பாதுகாவல்: கலாப்ரியா நகர்(Calabria)

இவர் தனது கல்வியை பிரான்சிலுள்ள ரைம்ஸ் (Rheims) நகரில் முடித்தார். 1056 ஆம் ஆண்டு ரைம்சில் இறையியல் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது அக்கல்லூரியின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பையும் ஏற்றார். பின்னர் 1075 ஆம் ஆண்டில் ரைம்சில் ஆலய நிர்வாகியாக(Chancellor)நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 1088 ல் திருத்தந்தை 2 ஆம் ஊர்பான் (Urban II) அவர்களுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இவர் மிக தைரியத்துடன் விசுவாசத்தை அறிவித்தார். திருச்சபையில் சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தார். பல புத்தகங்களை எழுதினார். இவரின் இளமைப் பருவ வாழ்வைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இவர் புனித பவுலைப் பற்றியும், திருப்பாடல்களைப் பற்றியும் Commentary on St. Paul and Psalms) எழுதிய புத்தகம் புகழ்பெற்றது.
திருச்சபையில் திருத்தந்தைக்கு எதிராக நடக்கும் அநீதிகளை அகற்ற, திருத்தந்தை 7 ஆம் கிரகோரிக்கு பெரிதளவில் உதவினார். இறைவனின் மேல் கொண்ட பற்றால், கர்த்தூசியன் (Carthusian) சபையை தொடங்கினார். இச்சபை தொடங்கிய காலத்தில், திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1514 ஆம் ஆண்டிலிருந்து திருத்தந்தை 10 ஆம் லியோ மீண்டும் அச்சபையை ஊக்கமூட்டி வளர்த்தெடுத்தார்.


செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! சிறந்த அறிவாளியான புனித புரூனோவை, எம் திருச்சபைக்கு, கொடையாகத் தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அற்புதமான முறைய்ல் பணியை ஆற்றிய புரூனோவைப்போல, நீர் எமக்குத் தந்த அறிவை பயன்படுத்தி, சிறப்பாக செயல்பட உம் ஆசீரைத் தாரும்.

Sunday, 4 October 2015

இன்றைய புனிதர் 2015-10-05 05 புனித புளோரா St.Flora, Virgin



பிறப்பு1309,பிரான்ஸ்

 இறப்பு1347

பாதுகாவல்: தனிமையில் வாழும் பெண்கள், கைவிடப்பட்டவர்கள்

இவர் பெற்றோர் இவரை, சிறு வயதிலிருந்தே பக்தியில் வளர்த்தனர். இவர் வளர்ந்த பின்னர், இவரின் பெற்றோர், இவரை திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த புளோரா பெற்றோரை எதிர்த்தார். தான் பிறந்த வீட்டைவிட்டு வெளியேறி, தாதியர் படிப்பைப் படிக்க சென்றார். 1324 ஆம் ஆண்டில் ஜெருசலேம் புனித ஜான் மருத்துவ பள்ளியில் தனது படிப்பை முடித்தார். பிறகு அவர் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டார். மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார். பிறகு துறவறத்தைச் சார்ந்த அருட்சகோதரிகளால் கவனிக்கப்பட்டு, கடவுளின் அருளால் குணம் பெற்றார்.


புளோரா பலமுறை இறைவனிடமிருந்து காட்சிகளைப் பெற்றார். ஒருமுறை அனைத்துப் புனிதர்களின் விழாவன்று, சுவையான உணவுகளை உண்ணமாட்டேனென்றும், கடவுளின் அருளை மேலும் பெற, உண்ணா நோன்பு இருப்பேனென்றும், தனக்குள் உறுதி எடுத்துக்கொண்டார். பின்னர் ஒருமுறை செபித்துக்கொண்டிருக்கும்போது, தூய ஆவியால் தூண்டப்பட்டு, தரையிலிருந்து நான்கு அடி உயரத்திற்கு பறந்தார். என்று, அங்கு கூடியிருந்தோர் தெரிவித்தனர்.

இயேசுவின் திருக்காயங்களிலிருந்து வழிந்தோடிய, திரு இரத்தத்தைப்போலவே, இவரின் கைகளிலிருந்தும், வழிந்தோடியது என்று கூறப்படுகின்றது. இறைவனிடமிருந்து பெற்ற தீர்க்கதரிசனத்தால் எதிர் காலத்தில், என்ன நடக்க உள்ளது என்பதை, முன்னதாகவே அறிவித்தார். இவர் மிகவும் எளிமையான வாழ்வை வாழ்ந்தார். இயேசுவின் திருவுடலைப் பெற்றபின், தாழ்ச்சியோடு, தன்னை அவரிடம் அர்ப்பணித்தார். இறைவனிடம் இவர் கொண்டிருந்த பக்தியையும், விசுவாசத்தையும் கண்டு, இவரை பலர், தங்களது ஆன்மீக வழிகாட்டியாகத் தேர்த்தெடுத்தனர். இவர் வாழ்ந்தபோதும், இறந்தபின்பும் பல அற்புதங்களை செய்தார்.


செபம்:
வழிநடத்தும் தெய்வமே! எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றை, முங்கூட்டியே அறிவிக்கும் பேற்றை புனித புளோராவிற்கு அருளினீர். பலரின் வாழ்வில், ஆன்மாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்த இப்புனிதரைப்போல இன்றும் ஆன்மீக வழிகாட்டிகளாக திகழும். உம் சீடர்களை, உம் பாதுகாப்பில் வைத்து வழிநடத்தும் தூய ஆவியின் அருளையும், வரங்களையும், கொடையையும் பொழிந்து, வழிநடத்தியருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Saturday, 3 October 2015

இன்றைய புனிதர் 2015-10-04 அசிசி நகர் புனித பிரான்சிஸ், சபைத் தலைவர் St. Francis of Assisi



பிறப்பு1182,அசிசி, இத்தாலி

இறப்பு1226, அசிசி, இத்தாலி

புனிதர்பட்டம்: 16 ஜூலை 1228, திருத்தந்தை 9 ஆம் கிரகோரி
பாதுகாவல்: விலங்குகள், இயற்கை பாதுகாப்பு, பறவைகள், தலைவலியிலிருந்து, தொற்றுநோயிலிருந்து

இவர் ஒரு பெரிய பணக்காரரின் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதை பொறுப்பேற்ற முறையில் கழித்தார். தன் நண்பர்களுடன் சேர்ந்து, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார். தான் விரும்பியவாறெல்லாம் வாழ்க்கையை அனுபவித்தார். பின்னர் ஒருநாள் சான் தமியானோ என்ற ஆலயத்திற்கு சென்றார். அப்போது இடிந்துபோன ஆலயத்திலிருந்த, சிலுவையானது அசிசியாரின் வாழ்வை மாற்றியது. அச்சிலுவையின் குரல் கேட்டு, பிரான்சிஸ் மனம் உடைந்தார். தான் வாழ்ந்த ஆடம்பர வாழ்வை நினைத்துப்பார்த்தார். மிகவும் வேதனையடைந்து அழுதார். தன்னுடைய பழைய வாழ்விலிருந்து விடுபட்டு, புதிய வாழ்வை வாழ முடிவெடுத்தார். தன்னுடைய தந்தையின் செல்வங்களை வெறுத்து ஒதுக்கினார். தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, தொழுநோயாளிகளின் மத்தியில் வாழ்ந்தார்.

தான் செய்த பாவங்களின் பரிகாரமாய் தொழுநோயாளர்களை கட்டித் தழுவி அரவணைத்து முத்தமிட்டார். மிகவும் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். உடுத்துவதற்குக் கூட மாற்றுத் துணியின்றி வாழ்ந்தார். பிச்சை எடுத்து உண்டார். தான் பெற்ற உணவுப் பொருட்களை தன்னுடன் வாழ்ந்த தொழுநோயாளர்களுக்கும் கொடுத்து, அவர்களின் அன்பைப் பெற்றார். இவற்றைக் கண்ட பிரான்சிஸின் தந்தை மனமுடைந்து அழுது, பிரான்சிசை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் பிரான்சிசோ அதனை வெறுத்தார். இறைவனை விடாப்பிடியாக பற்றிக்கொண்டார். இறைவனைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். தான் கண்ட ஏழை மக்களிலும், கடவுளின் ஒவ்வொரு படைக்களிலும் இறைவனைக் கண்டார். படைப்புகள் அனைத்தையும் சகோதர, சகோதரியாகக் கொண்டார்.

தான் கண்ட அனைத்திலும் இறைவனை இறுகப் பற்றினார். கடினமான ஏழ்மையை தழுவி, நற்செய்தியின் மதிப்பீடுகளின்படி வாழ்ந்தார். அனைவருக்கும் இறைவனின் அன்பை போதித்தார். இவரின் வாழ்வால் ஏராளமான மக்கள் ஈர்க்கப்பட்டு, இவரை தொடர்ந்தார்கள். இவர்களை கொண்டு ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் துறவற சபையைத் தொடங்கினார். தன்னை பின்பற்றியவர்களுக்கு சிறந்த ஒழுங்கைக் கொடுத்து, இறைவனைப் பின்பற்ற செய்தார். பின்னர் திருத்தந்தையின் ஒப்புதல் பெற்று, அவ்வொழுக்கங்குகளை தன் சபையில் நிரந்தரமாக்கினார். இவர் இறைவன் மேல் கொண்ட அன்பாலும், பக்தியாலும் அல்வேர்னா என்றழைக்கப்பட்ட மலையில் இயேசுவின் 5 காய வரம் பெற்றார். கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்ற மூன்று வார்த்தைப்பாடுகளின் வழியாகத் தான் "மறு கிறிஸ்து" என்றே அழைக்கப்பட்டார்.

இவர் ஏற்படுத்திய துறவற சபையில் ஏராளமானோர் வந்து சேர்ந்தனர். இச்சபை உலகம் முழுவதிலும் பரவியது. துறவிகள் அல்லாத, பொதுமக்களுக்கென்றும், இவர் 3 ஆம் சபையை தோற்றுவித்தார். இவர் மனந்திரும்பிய நாளிலிருந்து, இறக்கும்வரை கடுந்துயருற்றார். ஆனால் சிறிதளவும் சோர்வடையாமல் இருந்தார். "என் உடலில் உள்ள தழும்புகள், நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்" என்று, இவர் தன்னுடன் வாழ்ந்த சகோதர, சகோதரிகளுக்கு அடிக்கடி கூறி, எப்போதும் இயேசுவின் ஊழியனாகவே வாழ்ந்து இறந்தார்.


செபம்:
ஆண்டவராகிய கடவுளே! அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஏழ்மையிலும், தாழ்ச்சியிலும், கிறிஸ்துவின் சாயலில் விளங்கச் செய்தீர். இப்புனிதரின் வழியில் நடந்து, மகிழ்விலும், அன்பிலும், உம் மகனைப் பின்பற்றி, உம்மோடு ஒன்றித்திருக்க வரம் தாரும்.

இன்றைய புனிதர் 2015-10-03 புனித மதர் தியோடர் குரீன், சபைத் தலைவர் St. Mother Theodore Guerin



பிறப்பு1798,பிரான்ஸ்

இறப்பு14 மே 1856,அமெரிக்கா

முத்திபேறுபட்டம்: திருத்தந்தை 2 ஆம் அருள் சின்னப்பர்
புனிதர்பட்டம்: 15 அக்டோபர் 2006, திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்

இவர் புனித மேரி ஆஃப் வூட்ஸ் Saint Mary of Woods என்ற சபையை நிறுவினார். இவர் நல்லொழுக்கத்தால், மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தார். நம்பிக்கையின் மறு உருவமாக திகழ்ந்தார். இவர் தனது செப வாழ்வினால் மிகவும் வலிமைப் பெற்று வாழ்ந்தார். தனது எளிமையான வாழ்வால், இவ்வுலக துன்பங்களை எதிர்த்தார். ஏராளமான துன்பங்களை பொறுமையுடன் ஏற்றார். அமைதியின் சிகரமாய் இருந்தார்.


இவர் 1825 ஆம் ஆண்டு, செப்டம்பர் 8 ஆம் நாள் துறவியானார். 1840-1856 ஆம் ஆண்டு வரை புனித வூட்ஸ் மேரி Sisters of Providence of Saint Mary of the Woods என்ற சபையை நிறுவி, அச்சபையின் தலைவியாக பொறுப்பேற்றார். சபையை நிறுவி, பொறுப்பேற்ற நாளிலிருந்து, தன்னை இறைவனிடம் கையளித்து, இறைவன் மட்டுமே சபையை வழிநடத்த வேண்டுமென்று இடைவிடாமல் செபித்தார். இறைவனின் வழிநடத்துதலாலும், பராமரிப்பினாலும் பல வழிகளில், பலமுறை வெற்றியும் கண்டார்.


செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! உம் மந்தையின் ஆடுகளை வழிநடத்த புனித மதர் தியோடர் குரீன் வழியாக நல்ல ஆயர்களை தந்தீர். புதிய சபை உருவாக்கியதன் வழியாக, மேலும் உம் பணியை வளர்ச்சியடைய செய்தார். இன்றும் இவ்வுலகில் புதிதாக தொடங்குகின்ற துறவற சபைகளை நீர் ஆசீர்வதித்து தொடர்ந்து பராமரித்து வழிநடத்தியருளும்படியாக ஆயனே உம்மை மன்றாடுகின்றோம்.

Thursday, 1 October 2015

இன்றைய புனிதர் 2015-10-02 புனித லெகார் St. Legar



பிறப்பு615 / 616

இறப்பு679,சார்சிங் Sarcing, பிரான்ஸ்

பாதுகாவல்: அவுடூன் நகர், கண் நோயிலிருந்து

இவர் 651 ஆம் ஆண்டு புனித ஆசீர்வாதப்பர் சபையில் குருவானார். அப்போது அரசியாக இருந்த புனித பாடில்டிஸ் ( St. Bathildis) என்பவருக்கு, அரசியலில் மாற்றங்கள் கொண்டுவர உதவினார். 656 ஆம் ஆண்டு அரசி பாடில்டிஸ் இறந்துவிட்டார். இதனால் லெகார் அவரின் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பெருமளவில் உதவினார். பிறகு 663 ஆம் ஆண்டில் அவுடூன் (Autun) என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன் மாவட்டத்தில் இருந்த, ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகள் செய்து, அன்பு காட்டி வந்தார். அரசி பாடில்டிஸ்சிற்குப் பிறகு, அரசர் 3 ஆம் குளோடேயர் (Clodarire III) என்பவர் ஆட்சி செய்தார். இவரின் ஆட்சியில் சில குழப்பங்கள் ஏற்படவே, அவருக்கு எதிராக அரசின் உடன் பிறந்த சகோதரரே பிரச்சினைகள் செய்தார். இதனால் அரசர் 3 ஆம் குளோடேயரும் இறந்தார்.

இதனால் அரண்மனை ஆட்சியை தொடர்ந்தாற்ற அவரின் சகோதரர் தியரி (Thierry) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 2 ஆம் சில்டேரிக் (Childreic II) என்பவரும் லெகாரும் உடனிருந்து உதவினார். இதனை அறிந்த சில்டேரிக்கின் நண்பர் ஆத்திரமடைந்தார். இந்த சில்டேரிக்கின் நண்பர் எப்ரோயின் (Ebroin) லெகாரை எதிரியாகக் கருதினார். லெகார் அரச குடும்பத்திற்கு ஆலோசகராக இருந்ததை எப்ரோயின் விரும்பவில்லை. இதனால் 675 ல் அவர் லெகாரை அவுடூன் மறைமாவட்டத்திலிருந்து நாடு கடத்தினார். அங்கு அவரை மிகக் கொடுமையாக துன்புறுத்தினான். அவரின் உதடுகளை துண்டித்தான். அவர் மறைப்பணியாற்றாமல் இருக்க வேண்டுமென்பதற்காக, அவரின் நாக்கை அறுத்தான்.

அவனின் ஆத்திரம் அடங்காததால், லெகாரின் சகோதரர் கெரினஸ்(Gerinus) என்பவரையும் எப்ரோயின் கொன்றான். பின்பு லெகாரை சிறையிலடைத்தான். இரண்டாண்டுகளுக்குப் பிறகு லெகாரை, எப்ரோயின் மேர்லி(Marly) என்ற நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தான். இறுதியில் லெகாரின் மேல் எத்தவறும் இல்லை என்று கூறி, நீதிமன்றம் விடுதலை செய்தது. தொடர்ந்து இவர் இறைவேண்டல் செய்து, இறுதியில் உடல் நலம் குன்றி இறந்தார்.

இன்றைய புனிதர் 2015-10-01 01 புனித சிறுமலர் தெரசா St. Therese of Lisieux



பிறப்பு2 ஜனவரி 1873,அலேங்கன் Alencon, பிரான்சு

இறப்பு30 செப்டம்பர் 1897,லிசியு Lisieux, பிரான்சு
முத்திபேறுபட்டம்: 29 ஏப்ரல் 1923, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

புனிதர்பட்டம்: 17 மே 1925, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
பாதுகாவல்: பிரான்சு, ரஷ்யா, எய்ட்ஸ் நோயாளர்கள், பூ வியாபாரிகள், தோட்டக்காரர்கள், காச நோயிலிருந்து

இவர் குழந் இயேசுவின் தெரேசா என்றழைக்கப்பட்டார். இவர் ஓர் மிகவும் பக்தியான கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலிருந்தே இவரின் பெற்றோர் இவரை, நல்ல ஓர் பக்தியுள்ள கிறித்தவப் பெண்ணாக வளர்த்தனர். தனது இளம் வயதிலிருந்தே தன்னை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்ற உணர்வில் வளர்ந்தார். தன் குடும்பத்தில் ஒன்பதாவதாக பிறந்த இவர், அவர்களைப் போலவே, துறவற இல்லத்திற்கு சென்று பணியாற்ற வேண்டுமென்று ஆசைக்கொண்டார். தன் ஆசையை நிறைவேற்ற, தனது மூத்த சகோதரிகள் வாழ்ந்த கார்மேல் சபையில் தன்னையும் அர்ப்பணித்தார்.


தனது 15 ஆம் வயதிலேயே இறையழைத்தலை உணர்ந்து, கார்மேல் இல்லம் சென்றார். ஆனால் இளம் வயதின் காரணமாக கார்மேல் மடத் துறவிகள், இவரை ஏற்க மறுத்தனர். இதனால் ஆயரிடம் சென்று, தன் விருப்பத்தை தெரிவித்து மீண்டும் கார்மேல் சபைக்குள் நுழைந்தார். இருப்பினும் வார்த்தைப்பாடுகளைப் பெற இவருக்கு வயது இல்லாததால், வார்த்தைப்பாடுகளை பெறாமல் போனார். இதனால் ஆயருடன் உரோம் நகர் சென்று, திருத்தந்தை 13 ஆம் லியோவை சந்தித்து, அவருடன் உரையாடி, கார்மேல் சபையில் தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்க அனுமதிப் பெற்றார்.

இவர் கார்மேல் மடத்தில் வாழ்ந்தபோது பல மணிநேரங்கள் இறைவனோடு ஒன்றிருந்து செபித்தார். வார்த்தைப்பாடுகளை பெற்றபின் ஏறக்குறைய 9 ஆண்டுகள், நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்தார். அப்போது ஏராளமான பணிகவேதனைகளை அடைந்தார். எந்த ஒரு பணியும் செய்ய முடியாமல் துன்பப்பட்டார். இருப்பினும் இறைவன் தன்னை முழுவதும் அன்பு செய்கிறார் என்று கூறி, அவருக்காக அனைத்து வேதனைகளையும் தாங்கிக்கொண்டார். தன்னை முழுவதும் சிறுசிறு பணிகளின் வழியாக இயேசுவிடம் ஒப்படைத்தார். அவர் தங்கியிருந்த இல்லத்தை ஒரு சிறிய அழுக்கும் இல்லாமல் சுத்தம் செய்தார். சிறு சிறு இலைகளையும் கூட அகற்றினார். இதன் வழியாக பல ஆன்மாக்களை மனந்திருப்புகிறேன் என்றார். தன்னால் இயன்ற சிறு சிறு பணிகளை செய்து, இறைவனை அன்பு செய்து, அவரை மகிமைப்படுத்தி, பல பாவிகளை மனந்திருப்பினார். தான் இருந்த இருப்பிடத்திலிருந்தே உலக மக்களின் ஆன்மாக்களுக்காக செபித்து, பலரை மனமாற்றினார். தாழ்ச்சியின் வழியாக புனிதத்தை அடையமுடியும் என்பதை மற்றவர்களுக்கு தன் வாழ்வின் வழியாக கற்றுக்கொடுத்தார். இயேசுவை தனது சொல்லாலும், செயலாலும், சிந்தனையாலும் எப்படி அன்பு செய்வது என்பதை மிக எளிதாக மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். கிறிஸ்துவை அறியாதவர்களையும் அவரை தெரிந்துகொள்ளச் செய்தார். கிறிஸ்துவை மறுதலித்தவர்களையும், தங்கள் வாழ்நாள் முழுவதும் அவரை ஏற்று பின் தொடரச் செய்தார். தான் செய்யும் சிறு செயல்களையும் ஆண்டவரே, உமக்கே செய்கிறேன் என்று கூறி ஆண்டவரைப் பற்றி வாழ்ந்தார்.

ளை செய்தார். தனது பணியின் வழியாகவும், செபத்தின் வழியாகவும் திருச்சபைக்கு ஏராளமான உதவிகளை செய்தார்.

அதன்பிறகு சிறுமலர் தெரசா எலும்புறுக்கி (காசநோய்) TB என்ற நோயால் தாக்கப்பட்டார். இந்நோயால் தான் இறக்கும்வரை பல

செபம்:
அன்புத் தந்தையே! இளம் வயதிலிருந்தே தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து, அன்பு செய்து வாழ்ந்த சிறுமலரைப் போல, உம்மை அன்பு செய்யும் பேற்றை எமக்கும் அருளும். நாங்கள் என்றும் உமக்குரியவர்களாக வாழ, உமது வரம் தாரும்.தை