Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 3 October 2015

இன்றைய புனிதர் 2015-10-04 அசிசி நகர் புனித பிரான்சிஸ், சபைத் தலைவர் St. Francis of Assisi



பிறப்பு1182,அசிசி, இத்தாலி

இறப்பு1226, அசிசி, இத்தாலி

புனிதர்பட்டம்: 16 ஜூலை 1228, திருத்தந்தை 9 ஆம் கிரகோரி
பாதுகாவல்: விலங்குகள், இயற்கை பாதுகாப்பு, பறவைகள், தலைவலியிலிருந்து, தொற்றுநோயிலிருந்து

இவர் ஒரு பெரிய பணக்காரரின் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதை பொறுப்பேற்ற முறையில் கழித்தார். தன் நண்பர்களுடன் சேர்ந்து, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார். தான் விரும்பியவாறெல்லாம் வாழ்க்கையை அனுபவித்தார். பின்னர் ஒருநாள் சான் தமியானோ என்ற ஆலயத்திற்கு சென்றார். அப்போது இடிந்துபோன ஆலயத்திலிருந்த, சிலுவையானது அசிசியாரின் வாழ்வை மாற்றியது. அச்சிலுவையின் குரல் கேட்டு, பிரான்சிஸ் மனம் உடைந்தார். தான் வாழ்ந்த ஆடம்பர வாழ்வை நினைத்துப்பார்த்தார். மிகவும் வேதனையடைந்து அழுதார். தன்னுடைய பழைய வாழ்விலிருந்து விடுபட்டு, புதிய வாழ்வை வாழ முடிவெடுத்தார். தன்னுடைய தந்தையின் செல்வங்களை வெறுத்து ஒதுக்கினார். தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, தொழுநோயாளிகளின் மத்தியில் வாழ்ந்தார்.

தான் செய்த பாவங்களின் பரிகாரமாய் தொழுநோயாளர்களை கட்டித் தழுவி அரவணைத்து முத்தமிட்டார். மிகவும் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். உடுத்துவதற்குக் கூட மாற்றுத் துணியின்றி வாழ்ந்தார். பிச்சை எடுத்து உண்டார். தான் பெற்ற உணவுப் பொருட்களை தன்னுடன் வாழ்ந்த தொழுநோயாளர்களுக்கும் கொடுத்து, அவர்களின் அன்பைப் பெற்றார். இவற்றைக் கண்ட பிரான்சிஸின் தந்தை மனமுடைந்து அழுது, பிரான்சிசை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் பிரான்சிசோ அதனை வெறுத்தார். இறைவனை விடாப்பிடியாக பற்றிக்கொண்டார். இறைவனைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். தான் கண்ட ஏழை மக்களிலும், கடவுளின் ஒவ்வொரு படைக்களிலும் இறைவனைக் கண்டார். படைப்புகள் அனைத்தையும் சகோதர, சகோதரியாகக் கொண்டார்.

தான் கண்ட அனைத்திலும் இறைவனை இறுகப் பற்றினார். கடினமான ஏழ்மையை தழுவி, நற்செய்தியின் மதிப்பீடுகளின்படி வாழ்ந்தார். அனைவருக்கும் இறைவனின் அன்பை போதித்தார். இவரின் வாழ்வால் ஏராளமான மக்கள் ஈர்க்கப்பட்டு, இவரை தொடர்ந்தார்கள். இவர்களை கொண்டு ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் துறவற சபையைத் தொடங்கினார். தன்னை பின்பற்றியவர்களுக்கு சிறந்த ஒழுங்கைக் கொடுத்து, இறைவனைப் பின்பற்ற செய்தார். பின்னர் திருத்தந்தையின் ஒப்புதல் பெற்று, அவ்வொழுக்கங்குகளை தன் சபையில் நிரந்தரமாக்கினார். இவர் இறைவன் மேல் கொண்ட அன்பாலும், பக்தியாலும் அல்வேர்னா என்றழைக்கப்பட்ட மலையில் இயேசுவின் 5 காய வரம் பெற்றார். கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்ற மூன்று வார்த்தைப்பாடுகளின் வழியாகத் தான் "மறு கிறிஸ்து" என்றே அழைக்கப்பட்டார்.

இவர் ஏற்படுத்திய துறவற சபையில் ஏராளமானோர் வந்து சேர்ந்தனர். இச்சபை உலகம் முழுவதிலும் பரவியது. துறவிகள் அல்லாத, பொதுமக்களுக்கென்றும், இவர் 3 ஆம் சபையை தோற்றுவித்தார். இவர் மனந்திரும்பிய நாளிலிருந்து, இறக்கும்வரை கடுந்துயருற்றார். ஆனால் சிறிதளவும் சோர்வடையாமல் இருந்தார். "என் உடலில் உள்ள தழும்புகள், நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்" என்று, இவர் தன்னுடன் வாழ்ந்த சகோதர, சகோதரிகளுக்கு அடிக்கடி கூறி, எப்போதும் இயேசுவின் ஊழியனாகவே வாழ்ந்து இறந்தார்.


செபம்:
ஆண்டவராகிய கடவுளே! அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஏழ்மையிலும், தாழ்ச்சியிலும், கிறிஸ்துவின் சாயலில் விளங்கச் செய்தீர். இப்புனிதரின் வழியில் நடந்து, மகிழ்விலும், அன்பிலும், உம் மகனைப் பின்பற்றி, உம்மோடு ஒன்றித்திருக்க வரம் தாரும்.

No comments:

Post a Comment