Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 30 November 2015

இன்றைய புனிதர் 2015-11-30 திருத்தூதர் அந்திரேயா Apostel Andreas

                                         

பிறப்புகிறிஸ்து பிறந்த ஆண்டு,பெத்சயிதா, கலிலேயா

இறப்புநவம்பர் 60 அல்லது 62,பாட்ரஸ் Patras, கிரேக்கம்

பாதுகாவல்: ஸ்காட்லாந்து, ரஷ்யா, ஸ்பெயின், கிரேக்கம், சிசிலி, ஆஸ்திரியா, பெரு, நேயாப்பல், மீன்பிடிப்பவர்கள், திருமண தம்பதியர், தொண்டைவலியிலிருந்து, வலிப்பு நோயிலிருந்து

இவர் தன் சகோதரர் சீமோனுடன் வாழ்ந்து வந்தார். இவர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தார். பின்னர் திருமுழுக்கு யோவானின் சீடராயிருந்தார். அதன்பிறகு கிறிஸ்துவை பின்பற்றினார். இதனால் இவர் இயேசுவால் அழைக்கப்பட்ட முதல் சீடர் என்ற பெயரைப் பெற்றார். இவரே தன் சகோதரர் சீமோன் பேதுருவையும் இயேசுவிடம் அழைத்துவந்தார். என்னை பின் சென்று மனிதரை பிடிப்பவராகுங்கள் என்று இயேசு இவர்களிடம் கூறி தன் சீடராக்கினார். நற்செய்தி அறிவிக்கும் பணியை இயேசுவிடமிருந்து பெற்றிருந்தார்.

இவர் கருங்கடல் வழியாக சென்று கிரேக்க நாட்டில் நற்செய்தியை போதித்தார். சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து மறைப்பணியாற்றினார். பாட்ரசில் நற்செய்தியை உரைக்கும்போது எதிரிகளால் பிடிக்கப்பட்டார். ஏறக்குறைய 60 ஆம் ஆண்டு மன்னன் நீரோ ஆட்சிபுரிந்தான். அவன் அந்திரேயாவை நற்செய்தியை பறைசாற்றியதற்காக சிலுவையில் அறைந்து கொன்றான் என்று கூறப்படுகின்றது.


செபம்:
மாட்சிமிக்க ஆண்டவராகிய கடவுளே! உமது திருத்தூதரான புனித அந்திரேயாவை நற்செய்தியை போதிக்கவும் உமது திருச்சபையை வழிநடத்தவும் அழைத்தீர். அவர் எங்களுக்காக எப்பொழுதும் பரிந்து பேசுபவராக திகழ நாங்கள் உம்மை தாழ்மையாய் வேண்டுகின்றோம்

Sunday, 29 November 2015

இன்றைய புனிதர் 2015-11-29 தூலூஸ் ஆயர் சட்டுர்னினுஸ் Saturninus von Toulouse

                      

பிறப்பு2 ஆம் நூற்றாண்டு

இறப்பு250, தூலூஸ்,பிரான்சு

பாதுகாவல்: தூலூஸ் நகர், தலைவலியிருந்து, சாவு பயத்திலிருந்து
இவர் மிக பெரிய மரியாதைக்குரிய மனிதராக திகழ்ந்தார். இவர் 236-250 ஆம் ஆண்டுவரை திருத்தந்தை பபியான் Fabian அவர்களால் மறைப்பரப்பு பணியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர். இவர் ஓர் சிறந்த மறைபரப்பு பணியாளர். இவர் காலியன் Gallien என்ற நகருக்கு கைதியாக கொண்டு போகப்பட்டார். இவர் தனது மறைபரப்பு பணியின்போது பலரை மனந்திருப்பி, திருமுழுக்குக்கொடுத்து பணியாற்றியுள்ளார். நற்செய்தியை பரப்புவதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டுள்ளார். கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தவர். இதனால் திருத்தந்தை பபியான் இவரை தூலூஸ் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுத்தார். இவர் தூலூஸ் நகரின் "முதல் ஆயர்" என்ற பெருமைக்குரியவர். இவர் மறைப்பணிக்காக செல்லும்போது, காட்டுவிலங்கு ஒன்று இவரை கடித்துக்கொன்றது என்று கூறப்படுகின்றது.


செபம்:
இரக்கமே உருவான இறைவா! தூலூஸ் நகர் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உம் நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வாழ ஊக்கமூட்டியருளும். கிறிஸ்துவ மக்கள் ஒவ்வொருவரும் உமது நெறியில் வாழ்ந்து தொடர்ந்து உம் அன்பை சுவைக்க வரம் தாரும்.

Friday, 27 November 2015

இன்றைய புனிதர் 2015-11-28 துறவி யாக்கோபுஸ் டி மார்கியா Jacobus de marchia OFM

                                       

பிறப்பு1400,மோண்டேப்ராண்டோனே Monte Prandone, இத்தாலி

இறப்பு28 நவம்பர் 1476,நேயாப்பல், இத்தாலி

புனிதர்பட்டம்: 10 டிசம்பர் 1726, திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்
இவர் சியென்னா நகர் (Siena) பெர்ன்ஹார்டின் Bernhardin மாண bவர். இவர் திருச்சபையை பற்றி தவறாக போதித்த வர்களுக்கு எதிராக மிக அருமையாக சொற்பொழிவாற்றி மறைப்பணியா ற்றினார். இத்தாலி முழுவதிலுமிருந்த பிற இனப் பிரிவினை சபைகளின் போதனைகளை எதிர்த்து கிறிஸ்துவ மறையை வளர்த்தார். 1437 ஆம் ஆண்டு ஹங்கேரி மற்றும் போய்மன் (Böhmen) நாடுகளுக்கு சென்று மறைப்பணியாற்றினார். இவர் தான் போதித்தவைகளை பற்றி கடிதங்களை எழுதியுள்ளார். பிரான்சிஸ்கன் சபையில் சிறந்த மறைப்போதனையாளர்களில் இவரும் ஒருவராவார்.

செபம்:
படைப்புகளை பராமரித்தாளும் பரம்பொருளே எம் இறைவா! இன்றைய இப்புனிதரின் விழாவை சிறப்பிக்கும் ஒவ்வொரு உள்ளங்களையும் ஆசிர்வதியும். சிறப்பாக புனித பிரான்சிஸ்கன் சபைத் துறவிகளை ஆசீர்வதித்து, பாதுகாத்து பராமரித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2015-11-27 ஆல்ட்முயூன்ஸ்டர் நகர் துறவி பில்ஹில்டிஸ் Bilhildis von Altmünster


பிறப்பு7 ஆம் நூற்றாண்டு,பவேரியா


இறப்பு734,மைன்ஸ் Mainz, Germany

இவரைப்பற்றிய வரலாறு அதிகம் அறியப்படவில்லை. இவர் இளம் வயதிலேயே திருமணம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகின்றது. தூரின் நாட்டு அரசர் முதல் ஹெட்டான் (Hetan I) என்பவர் இவரின் கணவர். பில்ஹில்டிஸ் தன் கணவரையும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் மனந்திருப்பி, கிறிஸ்துவ மறையை பின்பற்றச் செய்தார். என்று சொல்லப்படுகின்றது. பில்ஹில்டிஸின் கணவர் இறந்தபிறகு விதவையான இவர் தன் மாமா பேராயராக இருந்ததால் பல விதங்களிலும் அவருக்கு உதவி செய்துள்ளார்.

பின்னர் ஆல்ட்முயூன்ஸ்டர் சென்று அங்கு ஒரு துறவற மடத்தில் சேர்ந்து பல நாட்கள் கழித்து துறவியானார் என்று கூறப்படுகின்றது. இவர் இறக்கும் வரை மிகப் பக்தியுள்ள சிறந்த துறவியாக வாழ்ந்துள்ளார். இவர் இறந்தபிறகு எங்கு புதைக்கப்பட்டார் என்று கண்டறிய இயலவில்லை.


செபம்:
உயிரளிக்கும் இறைவா! துறவியான பில்ஹில்டிஸின் வழியாக நீர் எம் திருச்சபைக்கு ஆற்றிய நன்மைக்களுக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். இன்றைய உலகில் வாழும் அரசர் குடும்பங்களை ஆசீர்வதித்து நீர் தொடர்ந்து வழிநடத்தியருள வேண்டுமென்று தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.

Thursday, 26 November 2015

இன்றைய புனிதர் 2015-11-26 மறைப்பணியாளர் லியோனார்டு, போர்டோ மவுரிஷியோ நகர் Leonhard von Porto Maurizio OFM

பிறப்பு20 டிசம்பர் 1676, போர்டோ மவுரிஷியோ, இத்தாலி

இறப்பு26 நவம்பர் 1751,உரோம்

முத்திபேறுபட்டம்: 26 நவம்பர் 1796புனிதர்பட்டம்: 29 ஜூன் 1867, திருத்தந்தை 9 ஆம் பயஸ் மறைப்பணியாளர்களின் பாதுகாவலராக: 1923, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
பாதுகாவல்: மறைப்பணியாளர்கள்

இவர் இத்தாலி நாட்டின் அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டார். இவர் தான் குருப்பட்டம் பெற்றபின் மறைப்பரப்பு பணியாளராக செயல்பட்டார். பயணங்கள் பல மேற்கொண்டு, ஊர் ஊராக சென்று மறையுரையாற்றினார். இவரின் மறையுரையால் பலர் கவர்ந்து, இவரை தொடர்ந்தனர். அனைத்து வித மக்களும் எளிமையாக புரிந்துகொள்ளும் விதத்தில் மறையுரை ஆற்றும் திறமையை பெற்றிருந்தார். இயேசுவின் நற்செய்தியை மிக எளிய முறையில் அறிவித்தார்.

இவர் 1697 ஆம் ஆண்டு புனித பிரான்சு அசிசியின் சபையில் சேர்ந்து பணியாற்றினார். அன்னை மரியாளுக்கு வணக்கத்தையும், சிலுவைப்பாதை வழிபாடுகளையும், எளிமையான முறையில் வழிநடத்தி அனைத்து மக்களையும் இறையுணர்வை கொண்டு வாழ செய்தார். இவர் இத்தாலியில் மட்டுமே 600 முறை சிலுவைப்பாதையை வழிநடத்தியுள்ளார். இவர் மருத்துவப்படிப்பையும் தத்துவயியலையும் கற்றிருந்தபோதும் கூட எளிமையாக வாழ்ந்து நற்செய்திக்கு சான்று பகிர்ந்தார்.


செபம்:
இயேசுவே இதயத்தின் ஒளிவிளக்கே! உம் வார்த்தைகளை நாங்கள் நாளும் படிக்கவும் வாசிப்பதோடு மட்டும் விட்டுவிடாமல் அவை காட்டும் வழியில் சென்று, உம்மில் எம் வாழ்வை செம்மையாக்கி, சீர்படுத்தி வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று தூய ஆவியின் வழியாக புனித லியோனார்டின் பரிந்துரையை பெற உதவியருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, 25 November 2015

இன்றைய புனிதர் 2015-11-25 கர்தினால் சார்லஸ் மார்டியல் அல்லெமாண்ட் லவிகேரீ Charles-Martial-Allemand Lavigerie


பிறப்பு31 அக்டோபர் 1825,பயோன்னே Bayonne, பிரான்சு


இறப்பு25 நவம்பர் 1892,அல்ஜீரியா

இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பேராசிரியராக பணியாற்றினார். 1863 ஆம் ஆண்டு நான்சி (Nancy)என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1867 ல் அல்ஜீரியாவிற்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1882 ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பின்னர் ஆப்ரிக்காவில் மறைபரப்புப் பணியை ஆற்றச் சென்றார். பின்னர் 1886 ல் "வெள்ளை அருள்தந்தையர்" (Weißen Vater) என்ற பெயரிலும் "வெள்ளை அருள்சகோதரிகள்" (Weißen Schwestern) என்ற பெயரிலும் சபை ஒன்றை நிறுவினார்.

இவர் ஆப்ரிக்காவில் முஸ்லீம் இன மக்களிடையே தன் மறைபரப்பு பணியை ஆற்றினார். ஆப்ரிக்காவின் பல்வேறு நகரங்களில் மறைபரப்பு மையங்களை நிறுவினார். பின்னர் மால்டாவில் Malta மறைக்கல்வி நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். பின்னர் 12 நவம்பர் 1890 ல் மறைப்பணீயை பரப்புவதற்காக அல்ஜீரியாவிற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு இவர் கார்த்தாகோவில் Karthago இருந்த பேராலயத்தில் பணிபுரிந்துவந்தார். பல இளைய பெண்களுக்கு வழிகாட்டி துறவியாக்கினார்.


செபம்:
நிறைவாழ்வளிக்கும் இறைவா! கர்தினால் சார்லசை நீர் படிப்படியாக உயர்த்தினீர். திருச்சபையின் வளர்ச்சிக்காக பல வித்தியாசமான முறையில் மறைப்பணியாற்றிய இவரைப்போல, ஒவ்வொரு மறைப்பணியாளர்களும் சிறப்பாக உம் சேவையில் ஈடுபட வரம்தந்து காத்து ஆசீர்வதித்து, வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Tuesday, 24 November 2015

இன்றைய புனிதர் 2015-11-24 மறைசாட்சி கிறிசோகோனுஸ் Chrysogonus


பிறப்பு3 ஆம் நூற்றாண்டு,உரோம், இத்தாலி


இறப்பு303அக்குயிலேயா Aquileja, இத்தாலி

இவர் ஓர் சிறந்த கத்தோலிக்கர். ஏறக்குறைய 300 ஆம் ஆண்டு அரசி அனஸ்தாசியாவின் (Anastasia)ஆசிரியராக பணியாற்றினார். இவர் எப்போதும் கிறிஸ்துவை பின்பற்றி வாழ்ந்தார். இதனால் தியோக்ளேசியன்(Diokletion) என்ற அரசனால் வதைக்கப்பட்டார். பின்னர் அக்குயிலேயாவிற்கு பிடித்துகொண்டு போகப்பட்டார். அங்கு அவரின் நம்பிக்கையை அரசன் தியோக்ளேசியன் சோதித்தார். கிறிஸ்துவை பின்பற்ற தடைவிதித்தான். ஆனால் அனைத்து தடைகளையும் மீறி கிறிசோனோலுஸ் கிறிஸ்துவை பின்பற்றினார். இதனால் அரசன் சினங்கொண்டு அவரை கொன்றான்

செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான இறைவ! உம்மை பின்பற்றியதற்காக தன் உயிரை ஈந்த கிறிசோகோனுஸ்சின் பக்தியையும், விசுவாசத்தையும் நாங்களும் பின்பற்றி வாழ எமக்கு உதவி செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Monday, 23 November 2015

இன்றைய புனிதர் 2015-11-23 துறவி கொலும்பான் Kolumban


பிறப்பு542,லைன்ஸ்டர் Leinster, அயர்லாந்து


இறப்பு23 நவம்பர் 615,போபியோ Bobbio, இத்தாலி

பாதுகாவல்: அயர்லாந்து, போப்பியோ, தீய ஆவியிடமிருந்து
இவர் தன் வயதில் துறவற மடத்தில் சேர்ந்து துறவு வாழ்வை மேற்கொண்டார். 560 ஆம் ஆண்டில் பாங்கோர்(Bangor) என்ற நகரில் துறவற சபை ஒன்றை நிறுவினார். பின்னர் இச்சபையை கொலும்பான் சிறந்த முறையில் வளர்த்தெடுத்தார். ஏறக்குறைய 30 ஆண்டுகள் இவர் பல்வேறு துறையில் பணியாற்றினார். நீண்ட காலம் ஆசிரியராகவும் இருந்தார். இவர் 590 ஆம் ஆண்டு தன்னுடன் 30 ஆண் துறவிகளை அழைத்துக்கொண்டு பாங்கோர் விட்டு வெளியேறி இங்கிலாந்திற்கு சென்றார். அங்கு போர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று மீண்டும் துறவற சபை ஒன்றை நிறுவினார்.

இங்கிலாந்தில் புதிய சபைக்காக துன்பங்கள் பலவற்றை சுமந்தார். இருப்பினும் மனந்தளராமல் சிறந்த மறையுரையை ஆற்றி, பல இளைஞர்களை இறைவன்பால் ஈர்த்தார். அதன்பிறகு லுக்செயுல் (Luxeuil) என்ற இடத்தில் பல இளைஞர்களைக் கொண்டு மீண்டுமோர் துறவற சபையை தொடங்கினார். இவர் தான் சென்ற இடமெல்லாம் அந்நகரின் கலாச்சாரத்திற்கேற்றவாறு துறவற சபைகளின் ஒழுங்குகளை அமைத்துக்கொடுத்தார். மிக குறைந்த ஆண்டுகள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இவரின் சபையில் சேர்ந்து இறைப்பணியாற்றினர்.

இவர் தொடங்கிய சபைகள் நன்கு வளர்ச்சியடைந்தபின் புனித பெனடிக்ட் துறவற சபையின் ஒழுங்குகளை தான் தொடங்கிய அனைத்து சபைகளிலும் கடைபிடித்து வாழ வழிவகுத்துக் கொடுத்தார். தான் நிறுவிய துறவற சபைகளுக்காக கொலும்பான் அயராது உழைத்தார். அதன்பிறகு 613 ஆம் ஆண்டு நோயால் தாக்கப்பட்டார். இருப்பினும் தன் உடல் நோயைப்பற்றி கவலை கொள்ளாமல் ஜெர்மனியிலுள்ள போடன் சே(Boden See) வந்தடைந்தார். அங்கு சில காலம் மறைப்பணியாற்றியபின் தன்னுடன் அவரின் சபை சகோதரர் ஒருவரை அழைத்துக்கொண்டு இத்தாலி நாட்டிற்கு சென்று போபியோவில் மீண்டும் சபையை தொடங்கினார். இத்துறவற சபையே இவர் நிறுவிய கடைசி சபையானது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் அங்கு வாழ்ந்தபின் காலமானார். மறைநூல்களையும் பண்டைய இலக்கியங்களையும் கற்றுத்தேர்ந்த இவர் தான் நிறுவிய சபைகளை இறைவனின் மகிமைக்காக அயராது உழைத்து உயர்த்தினார். கிறிஸ்துவ வாழ்விக்கும், துறவற வாழ்வுக்கும் மிகவும் பாராட்டபெற்றவராய் திகழ்ந்தார்.


செபம்:
என்றும் வாழ்பவரே எம் தந்தையே! நற்செய்தி பணியின்மீதும் துறவற வாழ்வின்மீதும் புனித கொலும்பானின் இதயத்தில் பேரார்வத்தை வியத்தகு முறையில் வளர்த்தெடுத்தீர். அவருடைய இறைவேண்டுதலாலும், முன்மாதிரிகையாலும் நாங்கள் யாவற்றுக்கும் மேலாக உம்மையே தேடுவதிலும் நம்பிக்கையுள்ள சமூகத்தை வளர்ப்பதிலும் கருத்துள்ளவர்களாய் இருக்கசெய்தருளும்.

Sunday, 22 November 2015

இன்றைய புனிதர் 2015-11-22 மறைசாட்சி செசிலியா



பிறப்பு200,உரோம், இத்தாலி


இறப்பு22 நவம்பர் 230,உரோம்

பாதுகாவல்: இசைக்கருவி தயாரிப்பவர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள்
இவர் ஓர் ரோமன் கத்தோலிக்க உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவுக்காக வாழ வேண்டுமென்று விரும்பியவர். இவர் தனது மனதிற்குள் இறைவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டு, இயேசுவை தன் கணவராக நினைத்து வாழ்ந்தார். ஆனால் இவரின் பெற்றோர் செசிலியாவை வலேரியானூஸ் என்ற இளைஞர்க்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். ஆனால் அவைகளை செசிலியா பெரியதாக கருதாமல் தன்னுடைய ஆன்மீக காரியங்களில் மட்டுமே கருத்தாக இருந்தார். வலேரியானூஸ்சுடன் திருமணம் செய்ய இருப்பதை வெறுத்தார். இருப்பினும் பெற்றோரை எதிர்த்து அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்தார்.

இவர்தான் திருமணம் செய்யும் நாள் வந்தது. இவரின் பெற்றோர் இவருக்கு திருமண உடையை அணிந்தபோது இதயம் வலித்தவராய், தன்னை முழுவதும் தன் மணவாளன் இயேசுவிடம் ஒப்படைத்து செபித்தார். கணவரிடம் பெற்றோர் இவரை ஒப்படைத்தபோது, தான் கடவுளிடம் கொடுத்த கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை உன்னிடம் இழக்கமாட்டேன் என்று உறுதியாக தெளிவாக கூறினார். தான் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவள் என்பதை தைரியமாக எடுத்துக்கூறினார்.

வலேரியானூஸ், செசிலியா சொல்வது உண்மையா என்பதை சோதிக்கும் நோக்குடன் கடவுளின் தூதர் ஒருவரை தன்னிடம் பேசுமாறு கூறினார். செசிலியா அதை நிரூபிக்க வலேரியானூஸ் முதலில் திருத்தந்தையிடம் திருமுழுக்குப் பெறுமாறு கூறினார். செசிலியாவின் வார்த்தைகளுக்கு படிந்து அவரும் திருமுழுக்கு பெற்றார். அவர் திருமுழுக்கு பெற்ற நாளன்றே வானதூதர் ஒருவர் அவர் முன்னின்று ரோஜா மலர் ஒன்றை கொடுத்து அவரை வாழ்த்தினார். அதன்பின்னர் வலேரியானூஸ் செசிலியாவை அவரின் விருப்பப்படி வாழ விட்டுவிட்டார். செசிலியாவை நம்பினார். வலேரியானூஸ் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கத்தோலிக்க திருச்சபைக்கு மனமாற்றினார். அவர்கள் அனைவரும் மனமாற்றம் பெற்ற நாளிலிருந்து செசிலியாவிற்கு பணிந்து இரவும் பகலும் அவருக்கு பணிவிடைபுரிந்தனர்.

செசிலியா தான் மணந்த வலேரியானூசின் உதவியுடன் கடவுளின் அன்பை சுவைத்து வாழ்ந்தார். ஏழைகளின் மீது இரக்கம் காட்டி, அனைவரையும் சமமாக அன்புச் செய்தார். இறைவனை இரவும் பகலும் பாடல்களால் போற்றி புகழ்ந்தார். இவரின் பக்தியை கண்ட எதிரிகள் கொதிக்கும் சூடான நீரில் அவரை மூழ்கடித்து அக்கொடியவர்களின் ஆசைத் தீர அணுஅணுவாக கொன்றனர். கொதிக்கும் சூடான நீரில் இவர் மூன்று நாள் எத்தீக்காயமும் இல்லாமல் உயிருடனே இருந்தார். இவர் கிறிஸ்துவ பெண்கள் அனைவருக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். கிறிஸ்துவின் மீது கொண்ட அன்புக்காக கன்னிமை காத்து வாழ்ந்தார். அவருக்காக மறைசாட்சியாகவும் மரித்தார்.


செபம்:
ஆண்டவராகிய கடவுளே! புனித செசிலியாவின் திருநாளை சிறப்பிக்கும் இவ்வினிய வேளையில் உம்மை நோக்கி எழும் எங்கள் மன்றாட்டுகளுக்கு தயவாய் செவிசாய்த்தருளும். இப்புனிதரின் வேண்டுதலால் எங்கள்மீது இரங்கி நாங்கள் கேட்கும் வரங்களை தந்தருளும்.

Saturday, 21 November 2015

இன்றைய புனிதர் 2015-11-21 திருத்தந்தை முதலாம் கெலாசியுஸ் Pope Gelasius I


பிறப்பு5 ஆம் நூற்றாண்டு,ஆப்ரிக்கா(?)


இறப்பு 21 நவம்பர் 496, உரோம் இத்தாலி

இவர் ஆப்ரிக்கா நாட்டு கறுப்பினத்தைச் சார்ந்தவர். இவர் மிக சிறு வயதில் குருவானார் என்று கூறப்படுகின்றது. 483 ஆம் ஆண்டிலிருந்து திருத்தந்தை 2 ஆம் பெலிக்ஸ்சுக்கு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இவர் மிக சிறந்த விதத்தில் திருத்தந்தைக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வழிகாட்டியுள்ளார். திறமையான, அர்த்தமுள்ள முடிவுகள் எடுப்பதில் இவர் வல்லவராக திகழ்ந்தார். இறையியலாளர்கள் பலர் இவரின் ஆலோசனையை நாடி வந்தனர். திருத்தந்தை 2 ஆம் பெலிக்ஸ் 1 மார்ச் 492 ஆம் ஆண்டு இறந்துவிடவே கெலாசியுஸ் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் தழைத்தோங்கி இருந்த அரசர்களின் ஆட்சியை முறியடித்து திருச்சபையில் கடவுளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார். கிறிஸ்துவின் நற்செய்திக்கு முதலிடம் கொடுத்தார். ஏழை மக்களின் வாழ்வுக்கென்று பல மையங்களை ஏற்படுத்தினார். திருச்சபை சொத்துகளில் நான்கில் ஒரு பகுதியை ஏழைகளுக்குப் பகிர்ந்துக் கொடுத்தார். இவர்தான் வாழ்ந்து வளர்ந்த ஏழ்மையை என்றும் மறவாமல் இறுதிவரை வாழ்ந்தார். ஏழைகளுக்கென்று தன் ஆட்சியில் தனி இடம் ஒதுக்கினார். அம்மக்களின் ஈடேற்றத்திற்காக இரவும் பகலும் அயராது செபித்தார். இயேசு வாழக்கூறிய அன்பான வாழ்வை வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். இவர் திருச்சபையில் பல சீர்த்திருத்தங்கலை கொண்டுவந்தார். இவர் திருப்பலி பூசை புத்தகத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். இவர் இறந்தபிறகு உடல் எங்கு புதைக்கப்பட்டது என்பதை கண்டறிய இயலவில்லை.


செபம்:
அனைவருக்கும் இரக்கம் காட்டும் அன்புத் தந்தையே! திருச்சபையின் தலைசிறந்த மனிதராக திருத்தந்தை முதலாம் கெலாசியுஸை மாற்றினீர். இவரின் வேண்டுதலால் நாங்கள் எங்களுடைய திறமைகளை பயன்படுத்தி என்றும் எம் தாயாம் திருச்சபையின் வளர்ச்சிக்காக உழைத்திட வரமருள வேண்டுமென்று தந்தையே இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

Friday, 20 November 2015

இன்றைய புனிதர் 2015-11-20 வாலோய்ஸ் நகர் பெலிக்ஸ் Felix von Valois


பிறப்பு1127,வாலோய்ஸ், பிரான்சு


இறப்பு1212,பாரிஸ், பிரான்சு

இவர் மிக மதிப்புமிக்க அரசரின் குடும்பத்தில் மகனாக பிறந்தவர். தனது கல்வியை முடித்தபிறகு குருப்பட்டம் பெற்றார். குருவான பிறகு தனிமையாக வாழ்ந்து கடுமையான ஏழ்மையை கடைபிடித்தார். இவர் காட்டில் வாழும் துறவிகளை போல, அனைத்தையும் துறந்து வாழ வேண்டுமென்பதை விரும்பினார். சில ஆண்டுகள் கழித்து இளமையான மருத்துவர் ஒருவர் பாரிசிலிருந்து சென்று பெலிக்சை சந்தித்தார். அவர் பெலிக்ஸ் வாழும் வாழ்வை தானும் வாழ விரும்பி குருப்பட்டம்பெற்றார்.

இவர்கள் இருவரும் தனிமையாக சென்று கடுந்தவம்புரிந்து இறைவேண்டலில் ஈடுபட்டனர். இவர்களிடையே நல்ல புரிதல் இருந்தது. இருவரும் ஒரே மனநிலை கொண்டவராக திகழ்ந்தனர். ஒன்று சேர்ந்து பல பெரிய பெரிய காரியங்களை செய்தனர். அச்சமயத்தில் விதவைகளும், கைவிடப்பட்டவர் களும் ஏராளமானோர் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களுக்கெல்லாம், இவர்கள் இருவரும் உதவி செய்தனர். தங்களின் முழு அன்பையும் அம்மக்களுடன் பகிர் ந்தனர். அம்மக்களுக்காக சபை ஒன்றையும் நிறுவினார். பல துன்பங்களை அனுபவித்தார். இருப்பினும் இறையருளால் தங் களின் பணியிலிருந்து சிறிதும் பின் வாங்காமல் தைரிய முடன் அச்சபையை வழிநடத்தினர். அச்சபையானது தொடங்க ப்பட்ட மிக குறுகிய காலத்தில் பிரான்சு நாடு முழுவதும் பரவி யது.  இவர் சிறந்ததோர் வரலாற்று மனிதராகப் புகழப் பட்டார். சிறிய மனிதராக இருந்தபோதும் ஆண்டவரின் பணியை பெரு மள வில் சிறப்பாக ஆற்றினர்.
செபம்:
நிறைவாழ்வளிக்கும் அன்புத் தந்தையே! தான் ஓர் அரசர் குடும் பத்தில் பிறந்தும் ஏழ்மையை தேர்ந்து உலகுக்கு சாட்சியாக வாழ்ந்த பெலிக்சை போல, நாங்கள் பெயருக்காகவும், புகழுக் காகவும் வாழாமல் உமது அன்பு பிள்ளைகளாக மட்டுமே வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.

Wednesday, 18 November 2015

இன்றைய புனிதர் 2015-11-19 தூரிங்கன் நகர் துறவி எலிசபெத் Elisabeth von Thüringen

பிறப்பு1207,பிரேஸ்பூர்க்Preßburg, ஹங்கேரி(?)

இறப்பு17 நவம்பர் 1231,மார்பூர்க் Marburg, ஜெர்மனி

புனிதர்பட்டம்: 27 மே 1235, திருத்தந்தை 9 ஆம் கிரகோரி
பாதுகாவல்: ஹெஸ்ஸன் Hessen, தூரிங்கன் நகர், காரிதாஸ் நிறுவனங்கள், விதவைகள், கைவிடப்பட்டவர்கள், நோயாளிகள், தேவையிலிருப்போர்

இவர் ஹங்கேரி நாட்டு அரசர் 2 ஆம் அந்திரேயாஸ் என்பவரின் மகளாக பிறந்தார். அரசர் 4 ஆம் லூட்விக்(Ludwig IV) என்பவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார். இவருக்கு 3 குழந்தைகள் பிறந்தது. பிறகு தன் கணவர் 1227 ல் இறந்துவிட்டார். அச்சமயத்தில் அரசர் 2 ஆம் பிரடரிக் Friedrich II சிலுவைப்போரை தொடர்ந்தான். அப்போது ஏழைகள் பலர் கைவிடப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டனர். எலிசபெத் ஏழைகளின் மேல் இரக்கம் காட்டி உணவு மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறைக் காட்டினார். இதனால் தன் கணவருடன் பிறந்த சகோதரர் ஹென்றி என்பவரால் காயப்படுத்தப்பட்டார். அச்சகோதரர் எப்போதும் எலிசபெத்தை வஞ்சித்து கொண்டே இருந்தார்.

இருப்பினும் எலிசபெத் ஏழைகளுக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருந்தார். விண்ணக காரியங்களைப் பற்றி சிந்திப்பதில் வேரூன்றிருந்தார். ஏழ்மையான வாழ்வை தேர்ந்துக்கொண்டார். ஹென்றியின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தது. இதனால் மனமுடைந்த எலிசபெத் தன் ஆன்மீக வழிகாட்டியாக இருந்த கான்ராட்Konrad குருவிடம் ஆலோசனை பெற்று, வீட்டைவிட்டு வெளியேறினார். 20 வயதான எலிசபெத் ஹெஸ்ஸனில் உள்ள மார்பூர்கில் மருத்துவமனை ஒன்றை கட்டினார்.

அவர் அம்மருத்துவமனையிலே நோயாளிகளை கவனித்து வந்தார். புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வை தன் வாழ்வாக வாழ்ந்தார். பின்னர் பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்து 1228 ஆம் ஆண்டு துறவற வார்த்தைப்பாடுகளை பெற்றார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்காகவே வாழ்ந்தார். தான் இறக்கும் வேளையில் கூட ஏழை ஒருவருக்கு உதவி செய்தார். இவரின் உடல் மார்பூக்கிலுள்ள பிரான்சிஸ் மருத்துவமனையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் கல்லறைமேல் இன்று பேராலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.


செபம்:
என்றென்றும் பேரன்பை நிலையாக கொண்டுள்ள தந்தையே! ஏழைகளில் கிறிஸ்துவை கண்டு பணிவிடை செய்ய ஹங்கேரி நாட்டை சேர்ந்த புனித எலிசபெத்துக்கு கற்றுக் கொடுத்தீர். இப்புனிதரின் வேண்டுதலால், நாங்கள் ஏழைகளுக்கும் துன்புறுவோர்க்கும் எந்நாளும் அன்பு தொண்டாற்ற அருள்புரியும்

இன்றைய புனிதர் 2015-11-18 குளுனி துறவி ஓடோ Odo von Cluny OSB


பிறப்பு 878, அக்குயிடானியன் Aquitanien, பிரான்சு


இறப்பு18 நவம்பர் 942,தூர்ஸ் Tours, பிரான்சு

பாதுகாவல்: மழைக்காக, பாடகர்கள்

இவர் ஓர் படைவீரரின் குடும்பத்தில் பிறந்தார். குளுனி சபையில் சேர்ந்து குருவானார். அச்சபையைத் தொடங்கிய பெர்னோ(Berno) என்பவரின் இறப்பிற்குப்பிறகு ஓடோ அச்சபையை பொறுப்பேற்று வழிநடத்தினார். இவர் சபைத்தலைவராக பொறுப்பேற்றபின்னர், ஏராளமானோர் அச்சபையில் சேர்ந்தனர். இவர் தன் பதவிகாலத்தில் 17 துறவற மடங்களைக் கட்டினார். தன் சபை குருக்கள் அனைவரும் இவரை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டனர். அந்தளவிற்கு இவர் மிக எளிமையான வாழ்வை செயல்பட்டனர்.

இவர் ஆலய இசைகளில் அன்புக்கொண்டிருந்தார். திருப்பலிப் பாடல்கள் பலவற்றை இவரே உருவாக்கினார். இவரால் உருவாக்கப்பட்ட பாடல்கள் இன்றுவரை திருச்சபையில் பாடப்பட்டு வருகின்றது. இவர் பிரான்சு நாட்டு மக்களால் "புகழ்பெற்ற இசைக்கலைஞர்" என்ற பட்டம் பெற்றார். இவர் இறந்தபிறகு இவரின் உடல் புனித ஜூலியன் கல்லறை அருகில் புதைக்கப்பட்டார்.


செபம்:
கலைகளின் கலைஞரே! பாடும் திறமையை ஓடோ அவர்களுக்குக் கொடுத்து தன் அழகிய குரலால் உம்மை போற்றி புகழ்ந்து வாழ்த்த வாய்ப்பளித்தீர். இன்றும் தான் பெற்ற அழகிய குரலைக்கொண்டு, உம்மை போற்றத் துடிக்கும் நண்பர்களை ஆசீர்வதியும். அவர்களின் திறமையை மேன்மேலும் வளர்த்து உம்மை மகிமைப்படுத்த செய்தருளும்.

Tuesday, 17 November 2015

இன்றைய புனிதர் 2015-11-17 ஹெல்ஃப்டா நகர் துறவி கெட்ரூட் Getrud von Helfta OC

பிறப்பு6 ஜனவரி 1256,ஐஸ்லேபன் Eisleben, தூரிங்கன் Thüringen

இறப்பு13 நவம்பர் 1302,ஹெல்ஃப்டா Helfta, சாக்சன்

பாதுகாவல்: பெரு நாடு

இவருக்கு 5 வயது நடக்கும்போதே, இவரின் பெற்றோர் கெட்ரூட்டை சிஸ்டர் சியன்சரின் (Zisterzienserin)துறவற மடத்தில் சேர்த்தனர். அங்கு அவர் ஜெர்மனி மொழியைக் கற்றுக்கொண்டு, தன் கல்வியை தொடர்ந்தார். ஆன்மீகக் காரியங்களில் அக்கறைக்கொண்டு வளர்ந்தார். இவர் ஜனவரி 27 ஆம் தேதி 1281 ஆம் ஆண்டு தனது 25 ஆம் வயதில் முதல் திருக்காட்சியை பெற்றார். அதன்பிறகும், பலமுறை திருக்காட்சியில் அளவில்லா கடவுளின் அன்பை சுவைத்தார். இவை அனைத்தையும் அவர் கடிதமாக எழுதியுள்ளார்.


இவர் இறைவன் ஒருவரையே தந்தையாகவும், தாயாகவும் எண்ணினார். தன் பெற்றோரிடம் பெறாத அன்பை, இறைவனிடம் பெற்றார். இயேசுவின் திரு இதயத்தைப்பற்றி இடைவிடாமல் எடுத்துரைத்தார். இவர் தான் இறக்கும் வரை இயேசுவின் திரு இருதய பிரார்த்தனையை தொடர்ந்து செபித்தார். இவர் இவ்வார்த்தைகளை தான் சாகும் தருவாயில் கூறிக்கொண்டே இருந்தார். "அன்பான கடவுளே உம் விருப்பம் போல் என்னை நடத்தும். உம் திட்டத்தின்படி வாழ எனக்கு வழிகாட்டும்" இறுதியாக இவ்வார்த்தைகளை உச்சரித்த வண்ணம் உயிர் நீத்தார்.


செபம்:
இயேசுவின் திருஇதயமே! எம் இதயத்தையும் உம் இதயத்திற்கு ஒத்ததாக செய்தருளும். துறவி கெட்ரூட்டை முன்மாதிரியாக கொண்டு, இதய இயேசுவின் அன்பு பிள்ளைகளாக வாழ, எம் வாழ்வை மாற்றியருளும். இயேசுவின் அன்பை சுவைத்து வாழ வழிகாட்டும்.

Monday, 16 November 2015

இன்றைய புனிதர் 2015-11-16 ஸ்காட்லாந்து அரசி மர்கரீட்டா Margareta von Scotland

இன்றைய புனிதர்

2015-11-16

ஸ்காட்லாந்து அரசி மர்கரீட்டா Margareta von Scotland


பிறப்பு1046,ரேஸ்கா Reska, ஹங்கேரி

இறப்பு16 நவம்பர் 1093,எடின்பூர்க் Edinburgh, ஸ்காட்லாந்து

பாதுகாவல்: ஸ்காட்லாந்த

இவர் இங்கிலாந்து நாட்டு அரசர் எட்வர்ட் அவர்களின் மகள். இவரின் தாய் ஆகத்தா (Agatha), ஹங்கேரி நாட்டு அரசி மர்கரீட்டா 1057 ஆம் ஆண்டிலிருந்து தன் மாமாவின் கண்காணிப்பில் இங்கிலாந்தில் வளர்ந்தார். 1066 ஆம் ஆண்டு இவரின் 20 ஆம் வயதில் ஸ்காட்லாந்திற்கு சென்றார். அங்குதான் அரசர் 3 ஆம் மால்கோம்(Malcolm)என்பவரிடம் பழகி, பின்னர் அவரையே திருமணம் செய்தார். தன் கணவர் அவரை கிறிஸ்துவ மறையை தழுவக்கூடாது என்று கட்டளையிட்டார். ஆனால் அவர் தன் கணவரின் பேச்சை மறுத்து மேலும் தன் கிறிஸ்துவ விசுவாசத்தில் வேரூன்றி இருந்தார்.

அரசி ஏழை மக்களின் வாழ்வில் அதிக அக்கறைக் கொண்டு வாழ்ந்தார். அவர்களுக்கு பலவிதங்களில் உதவினார். ஏழைகளை தன் இதயத்தில் சுமந்து உதவினார். ஏழை மக்களின் நலனிற்கென்று, நிறுவனம் ஒன்றையும் நிறுவி வேலை வாய்ப்புகளை வழங்கினார். தான் ஓர் அரசியாக இருந்தபோதும், துறவிகளைப் போலவே, ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். தவறாமல் நோன்பிலிருந்து செபித்து பல நலன்களை பெற்றார். பலவிதங்களிலும் ஒறுத்தல் செய்து வாழ்ந்தார்.


செபம்:
எல்லாம் வல்ல இறைவா! நீரே ஒளி. இருள் என்பது உம்மிடம் இல்லை. உமது பேரொளியினால் எங்கள் உள்ளங்களை நிரப்பியருளும். ஏழைமக்களின் மீது அன்பு கொண்டு, அரசி மர்கரீட்டா வாழ்ந்த வழியில் சென்று, நாங்கள் மகிழ்வுடன் உமது முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை உணர்ந்து வாழ செய்தருளும்.

Sunday, 15 November 2015

இன்றைய புனிதர் 2015-11-15 ஆயர் பெரிய ஆல்பர்ட் மறைவல்லுநர் Albert der Große


பிறப்பு1193(?),பவேரியா, ஜெர்மனி


இறப்பு15 நவம்பர் 1280,கொலோன் Köln

பாதுகாவல்: இறையியல் ஆசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள்,மலைவாழ் மக்கள்
இவர் குதிரைச்சவாரி கற்றுக்கொடுக்கும் பெற்றோரின் மகனாகப் பிறந்தார். பதுவையில் புனித தொமினிக்கன் சபைக்குச் சொந்தமான கல்லூரியில் படித்தார். படித்து முடித்தபின் 1223 ஆம் ஆண்டு அச்சபையில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றார். அதன்பிறகு எண்ணிலடங்கா கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் பாரிசிலும், கொலோன் கல்லூரிகளிலும் பணியாற்றினார். இவர் 1248 ஆம் ஆண்டு கொலோன் நகரில் துறவற மடத்திற்கு சொந்தமாக கல்லூரி ஒன்றை கட்டினார். அக்கல்லூரியில் ஆன்மீகத்திற்கு வழிகாட்டும் விதமாக பலமுறை கருத்தரங்குகளை நடத்தினார்.

இவர் தன் சபையிலிருந்த மாநிலங்களில் ஒன்றிற்கு தலைமை பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் 1260 ஆம் ஆண்டு ரேகன்ஸ்பூர்க்கிற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை 11 ஆம் பயஸ் ஆல்பர்ட்டிற்கு திருச்சபையின் மறைவல்லுநர் என்ற பட்டத்தை 1931 ஆம் ஆண்டு வழங்கினார். ஆல்பர்ட் பல இடங்களில் மக்கள் இனங்களுக்கும் நகரங்களுக்கிடையிலும் அமைதியை நிலைநாட்டுவதற்கென்று அயராது பல முயற்சிகளை மேற்கொண்டார். இவர் இயற்கை அறிவு, மறை அறிவு வளர்ச்சிக்கான பல அரிய நூல்களையும் எழுதியுள்ளார்.


செபம்:
ஆண்டவராகிய கடவுளே! ஆயராம் புனித பெரிய ஆல்பர்ட் இவ்வுலக ஞானத்தையும், இறை நம்பிக்கையையும் இணைப்பதில் சிறந்து விளங்க செய்தீர். நாங்கள் நல்லாசிரியராகிய அவரது போதனைகளை ஏற்றுக்கொள்ளவும், ஒவ்வொரு அறிவியல் முன்னேற்றத்தின் வழியாக உம்மை அறிந்து, ஆழ்ந்து அன்பு செய்வதிலும் எங்களை இட்டுச் செல்லவும் அருள்புரியும்.

Friday, 13 November 2015

இன்றைய புனிதர் 2015-11-14 மறைசாட்சி நிக்கோலாஸ் டாவெலிக் மற்றும் அவரின் தோழர்கள் Nikolaus Tavelic und Gefährten OFM


பிறப்பு14 ஆம் நூற்றாண்டு,டால்மியா Dalmatien


இறப்பு14 நவம்பர் 1391,எருசலேம்

இவர் நவம்பர் 11 ஆம் நாள் 1970 ஆம் ஆண்டு தன் தோழர்களுடன், முகமதியர்களின் திருவிழாவின்போது அவர்களிடையே மறையுரையை ஆற்றினர். அச்சமயத்தில் சில யூதர்களால் இவர்கள் தாக்கப்பட்டார்கள். இவர்களுக்கு எவரும் பாதுகாப்பு கொடுப்பதற்கு முன் வராததால் எதிரிகளால் வதைக்கப்பட்டனர். இதையறிந்த அவர்களின் துறவற சபை சகோதரர்கள், அவர்களை காப்பாற்ற சென்றனர். இருப்பினும் அவர்களால் மறைசாட்சியர்களை காப்பாற்ற இயலவில்லை. எதிரிகள் நிக்கோலசையும் அவரின் தோழர்களையும் கைது செய்தனர். அவர்களின் கைகளில் விலங்குகளை மாட்டி தெருத்தெருவாக இழுத்து சென்று அடித்தனர்.

இவர்கள் 4 பேரையும் எதிரிகள் உணவின்றி பட்டினி போட்டனர். இருப்பினும் நான்கு பேரும், எதற்கும் அஞ்சாமல் கடவுளை போற்றி புகழ்ந்தனர். இடைவிடாமல் இறைவேண்டல் செய்தனர். இதனைக் கண்ட எதிரிகள் 4 பேரையும் கொல்லத் திட்டமிட்டனர். பின்னர் இவர்கள் நால்வரும் ஆழ்ந்த இறைவேண்டலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் பிடித்துக்கொண்டு போகப்பட்டு, உயிருடன் எதிர்த்துக் கொன்றனர். பின்னர் சுட்டெரித்த உடலின் சாம்பலை எருசலேம் முழுவதிலும் தூவினர்.


செபம்:
கருணைக் கடலாம் எம் தந்தையே! உம் பணியை ஆர்வமுடன் ஆற்றி, உமக்காக இறக்கும் பேற்றை இன்றைய புனிதர்களுக்கு கொடுத்தீர். தங்களின் இறுதிமூச்சுவரை உமக்காக வாழ்ந்த அவர்களின் வாழ்வை கண்டு, உமக்கு நன்றி கூறுகின்றோம். அப்புனிதர்களின் விசுவாசத்தை நாங்களும் எமதாக்கி வாழ, எம்மை தயாரித்திட வேண்டுமாய் தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2015-11-13 ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா, சேசு சபை Stanislaus Kostka SJ


பிறப்பு28 அக்டோபர் 1550,மசோவீன் Masovien, போலந்து



இறப்பு15 ஆகஸ்ட் 1568,உரோம், இத்தாலி

இவர் தனது பெற்றோரால் சரியான முறையில் கவனிக்கப்படாமல் இருந்தார். இவர் தன்னுடைய உடன் பிறந்த சகோதரருடன் 1564 ஆம் ஆண்டு, ஆஸ்திரியாவில் கல்லூரியில் படிப்பதற்காக அனுப்பப்பட்டார். அப்போது அவரின் வயது 14. தனது இளம்வயதிலேயே இயேசு தன்னுடன் உரையாடுவதை உணர்ந்தார். இயேசு தன்னை துறவற வாழ்வை வாழ அழைப்பதாக உணர்ந்ததால் துறவற இல்லம் ஒன்றை நாடி சென்றார். இதனால் அவரின் தந்தை கடுங்கோபம் கொண்டு, அவரை கண்டித்தார். இருப்பினும் இயேசுவின் குரலுக்கு மட்டுமே ஸ்தனிஸ்லாஸ் செவிமடுத்தார்.



இவர் 14 ஆம் வயதில் முதன்முறையாக பெற்ற திருக்காட்சியில் பிச்சைக்காரனைப்போல் உடை உடுத்தி, வியன்னாவைவிட்டு, ஆக்ஸ்பூர்க் வருமாறு கூறிய குரலைக்கேட்டார். அக்குரல் கூறியதை செய்ததின் பேரில் டில்லிங்கன் (Dillingen) வந்து சேர்ந்தார் ஸ்தனிஸ்லாஸ். அப்போது அவர் அங்கிருந்து உரோமில் உள்ள இயேசு சபை மடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு போர்ஜிய நகர் பிரான்சு (Franz von Borjia) அச்சபையின் தலைவராக இருந்தார். அவர் ஸ்தனிஸ்லாசை அவரின் 17 ஆம் பிறந்தநாளன்று தன் சபையில் நவத்துறவகத்தில் சேர்த்தார்.

ஸ்தனிஸ்லாஸ் மிகக் குறைந்த நாட்களிலேயே நவத்துறவக மாணவர்களாலும், குருக்களாலும் கவரப்பட்டு அன்புச் செய்யப்பட்டார். இவர் எப்போதும் மகிழ்ச்சியானவராகவும், உடனடியாக எதையும் எதிர்பாராமல் தேவையில் இருப்போருக்கு குறிப்பறிந்து உதவி செய்பவராகவும் இருந்தார். இவருக்கு மிக அருமையான எதிர்காலம் இருக்கும் என்று உடன் இருந்தவர்கள் அனைவரும் அவ்வப்போது கூறி வந்தனர். ஆனால் அனைத்தும் அதற்கு எதிர்மாறாக நடைப்பெற்றது. இவர் இயேசு சபையில் சேர்ந்த பத்தே மாதங்களில், கடுமையான காய்ச்சலால் தாக்கப்பட்டார். அக்காய்ச்சலை குணப்படுத்தமுடியாமல் இறந்து போனார். இவர் இறப்பதற்கு முந்தின நாள், நாளை நான் இறந்துவிடுவேன் என்பதை தன்னுடன் இருந்தவர்களை நோக்கி கூறினார். அவர் சொன்னவாறே ஆண்டவரிடத்தில் சேர்ந்தார்.


செபம்:
அருள் ஒவ்வொன்றின் ஊற்றாகிய இறைவா! புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்காவை, வியத்தகு முறையில் வளர்த்தெடுத்தீர். அவரின் நற்குணங்களை ஒவ்வொரு நவத்துறவு மாணவ மாணவிகளும் முன்மாதிரியாக கொண்டு வாழ உதவி செய்யும். நாங்கள் அவரின் தூய வாழ்வை பின்பற்ற தவறினாலும், அவரின் குணநலன்களையேனும் கண்டுபாவிக்க அவருடைய பரிந்துரை வழியாக எங்களுக்கு வரம் அருள்வீராக!

Wednesday, 11 November 2015

இன்றைய புனிதர் 2015-11-12 ஆயர் யோசபாத் குன்ஸ்விட்ஷ் Josaphat Kunzewitsch


பிறப்பு 1580, வுலோட்சிமீர்ச் Wlodzimierz, ரஷ்யா


இறப்பு12 நவம்பர்1623, விட்டேப்ஸ்க்Witebsk, வைஸ்ரூஸ்லாண்ட்Weißrussland (இன்றைய போலந்து)

முத்திபேறுபட்டம்: 1643 புனிதர்பட்டம்: 1867, திருத்தந்தை 9 ஆம் பயஸ்

இவர் பிரிவினையை சபையை சார்ந்த பெற்றோரின் மகனாகப் பிறந்தார். சில ஆண்டுகள் கழித்து, திருமுழுக்கு பெற்று, கிறிஸ்துவமறையை தழுவினார். 1604 ஆம் ஆண்டு "பசிலியின் துறவற சபையில்" (Basilianer) சேர்ந்து குருவானார். தனது 38 ஆம் வயதில் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வியப்புக்குரிய முறையில் திருச்சபையின் ஒற்றுமைக்காக பாடுபட்டார். இவர் விட்டேப்ஸ்க் (Witebsk) என்ற நகருக்கு பார்வையிட சென்றபோது, பகைவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


செபம்:
ஆற்றலின் ஊற்றே எம் இறைவா! புனித யோசபாத் தூய ஆவியாரால் நிறைந்தவராய், தன் மந்தைக்காக தம் உயிரைக்கொடுத்தார். அத்தூய ஆவியை எம் திருச்சபையின் மீது பொழிந்தருளும். இப்புனிதரின் வேண்டுதலால், நாங்களும் உமதருளால் திடமடைந்து, எங்கள் சகோதர சகோதரிகளுக்காக உயிர் துறக்க தயங்கா மனம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

Tuesday, 10 November 2015

இன்றைய புனிதர் 2015-11-11 தூர்ஸ் நகர் ஆயர் மார்ட்டின் Martin von Tours



பிறப்பு316,ஸ்டைனமாங்கர் Steinamanger, ஹங்கேரி


இறப்பு8 நவம்பர் 397,தூர்ஸ்,பிரான்ஸ்

பாதுகாவல்: ரோட்டன்பூர்க், மைன்ஸ் நகர், படைவீரர்கள், குதிரைகள், துப்பாக்கி தயாரிப்பவர்கள், தையல்காரர்கள், கையுறை மற்றும் தொப்பி தயாரிப்பவர்கள், கைதிகள், வீட்டுவிலங்குகள், ஆடு, விவசாய நிலங்கள்

மார்ட்டின் தந்தை இத்தாலி நாட்டை சார்ந்தவர். எனவே தன் தந்தை பிறந்த நாட்டில் கிறிஸ்தவ பக்தியோடு வளர்க்கப்பட்டார். மார்ட்டின் தனது 10 ஆம் வயதில் திருமுழுக்கு பெற்றார். அன்றிலிருந்து தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். ஆனால் இவரின் ஆசை நிறைவேற தாமதம் ஆனது. இவரின் தந்தை மார்ட்டின் படைவீரர்களின் தலைவனாக்க விரும்பினார். இதனால் இவரின் 15 ஆம் வயதிலேயே காலிஷன்(Gallischen) என்ற பெயர் கொண்ட படையில் சேர்க்கப்பட்டார். இதனை விரும்பாமல் மார்ட்டின் வேதனை அடைந்தாலும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற முயன்றார். போரில் பங்கெடுப்பதற்கான தைரியத்தை வளர்த்துக்கொண்டார். ஒருமுறை மார்ட்டின் மிக குளிரில் போரிட நேரிட்டது. குளிரை தாங்க முடியாமல் தவித்தார். அவ்வேளையில் இறைவனிடம் உருக்கமாக மன்றாடினார். இவரின் மன்றாட்டை கேட்டு பதிலளிக்கும் விதத்தில் இவருக்கு குளிர்தாங்கும் ஆடைகளை பரிசாக தந்தார். இவ்வற்புதத்தை பெற்ற மார்ட்டின் படைவீரர்களின் மத்தியில் மறைப்பணியை ஆற்றினார். பிறகு தான் பிறந்த ஊருக்கு திரும்பி சென்று மறைப்பரப்பு பணியில் ஈடுபட்டார். குருப்பட்டம் பெற்றபின் ஆலயங்கலையும் துறவற மடங்களையும் கட்டி எழுப்பினார். 371 அல்லது 372 ஆம் ஆண்டு தூர்ஸ் நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆயர் பொறுப்பை ஏற்றபின், பல துறவற சபைகளை தன் மறைமாவட்டத்திற்கு வரவழைத்தான். துறவிகள் தங்குவதற்கென துறவற மடங்கலை கட்டி எழுப்பினார். ஆனால் ஆயர் மார்ட்டின் மிக ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்தார். தனது 30 வருட ஆயர் பதவியில் பல இன்னல்கள் அடைந்து நற்செய்தியை பறைசாற்றினார். அதன்பிறகு மறைப்பணியாளராகப் பணியாற்ற பல நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டார். சென்ற இடங்களிலெல்லாம் மக்களிடத்தில் அன்பு காட்டி சிறந்ததோர் நண்பராக செயல்பட்டார். குருக்களுக்கும், துறவிகளுக்கும் ஆன்ம வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.


இவர் துறவறமடம் ஒன்றையும் நிறுவியுள்ளார். இவர் எல்லா மக்களுக்கும் நல்ல ஆயனாக விளங்கினார். பல மறைப்பணியாளர்களைப் பேணி பயிற்றுவித்தார்.


செபம்:
எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுளே, ஆயரான புனித மார்ட்டினுடைய வாழ்வினாலும், இறப்பினாலும் மாட்சி அடைந்தீரே. எங்கள் உள்ளங்களிலும் உமது அருளின் வியத்தகு செயல்களை புதுப்பித்து நாங்கள் வாழ்விலும் இறப்பினும் உமது இறை அன்பிலிருந்து பிரிந்திருக்க விடாதேயும்.

இன்றைய புனிதர் 2015-11-10 மறைப்பணியாளர் அந்திரேயாஸ் அவேலினோ Andreas Avellino


பிறப்பு1521, சிசிலி Sizilien, இத்தாலி


இறப்பு 10 நவம்பர் 1608,நேயாப்பல் Neapel, இத்தாலி

புனிதர்பட்டம்: 1712, திருத்தந்தை 11 ஆம் கிளமெண்ட்

இவர் தனது குருத்துவப்பட்டம் பெற்றபின், சிசிலி சென்று சட்டக்கலையை பயின்றார். பின்னர் திருச்சபை சட்ட வல்லுநராக பணியாற்றினார். ஆனால் அப்பணியில் அவரின் மனம் நிறைவடையவில்லை. ஆன்ம குருவாக பணியாற்ற வேண்டுமென்பதையே பெரிதும் விரும்பினார். அதனால் 1556 ஆம் ஆண்டு, சிசிலியிலிருந்த துறவற சபை ஒன்றில் சேர்ந்து மறைப்பணியாளராக பணியாற்றினார். பலருக்கு ஆன்ம வழிகாட்டியாக திகழ்ந்தார். அழகிய எளிமையான மறையுரையால் பல ஆன்மாக்களை பாவ வாழ்விலிருந்து மீட்டார். பின்னர் இவர் அத்துறவற சபையினை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றார். தன் பணியில் மகிழ்ச்சியடைந்த அந்திரேயாஸ் தனது 87 ஆம் வயதில் இறந்தார்.

செபம்:
"வாழும் கடவுளின் கோவில் நாமே" என்றுரைத்த இறைவா! சிறந்த ஆன்ம குருவாய் திகழ்ந்த அந்திரேயாசைப் போல, சிறப்பான முறையில் உம் அருளைப்பெற்று பணியாற்ற குருக்கள் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும். தங்களின் எளிமையான வாழ்வாலும் மறைப்பணியாலும் மக்களை உம்பால் ஈர்க்க வரம் அருளும்.

Monday, 9 November 2015

இன்றைய புனிதர் 2015-11-09 ஹைஸைட்டா நகர் மறைசாட்சி தெயோடர் Theodor von Euchiata


பிறப்பு 3 ஆம் நூற்றாண்டு, அர்மேனியன் அல்லது சிரியா


இறப்பு 306, சிறிய ஆசியா

பாதுகாவல்: படைவீரர்கள், போரிலிருந்து

இவர் தன்னுடைய இளமைப்பருவத்திலேயே உரோமைத்திருச்சபையோடு இணைந்தார். கிறிஸ்துவ மதத்தை பின்பற்றக்கூடாது என்பதற்காக இவருக்கு தடைவிதிக்கப்பட்டது. அத்தடையை அவர் மீறியதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். பின்னர் இவர் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தீர்ப்பிடப்பட்டார். தீர்ப்பின் இறுதியில் இவர் இறக்கவேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. இவர் சாகும்முன் ஒருநாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த ஒரு நாளிற்குள் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும்படி நீதிபதி உத்தரவிட்டார்.


இவர் அந்த ஒருநாளில் ஊருக்குள் சென்று அவ்வூரிலிருந்த ஆலயத்திற்குள் சென்று செபித்தார். பின்னர் மரியன்னை கெபியின் முன் முழந்தாள்படியிட்டு மன்றாடினார். அதன்பிறகு மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! எங்கள் வேண்டுதல்களுக்கு தயவுடன் செவிசாய்த்தருளும். உம் மகன் இறந்தோரிடமிருந்து உயிர்பெற்றதைப்போல, இறந்த உம் அடியார்களும் உயிர்பெறுவார்கள் என்ற நம்பிக்கையை உம் மக்கல் கொண்டு வாழ செய்தருளும்படியாக, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

Saturday, 7 November 2015

இன்றைய புனிதர் 2015-11-08 இறையியலாளர் & துறவி யோஹான்னஸ் துன்ஸ் ஸ்கோட்டஸ் Johannes Duns Scotus


பிறப்பு 1265 அல்லது 1266, துன்ஸ் Duns, ஸ்காட்லாந்து


இறப்பு8 நவம்பர் 1308, கொலோன் Köln, ஜெர்மனி

இவர் ஓர் புகழ்வாய்ந்த இறையியலாளர். இவர் தான் பிறந்த ஊரிலேயே கல்லூரிவரைப் படித்தார். தன்னுடைய இளமைப்பருவத்திலிருந்தே பிரான்சிஸ்கன் சபை குருக்களிடம் உறவு கொண்டிருந்தார். அவர்களின்மேல் கொண்ட அன்பால், தான் குருவாக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். இதனால் இறையியல் படிப்பை பாரிஸில் உள்ள ஆக்ஸ்போர்டு கல்லூரியில் கற்றார். பின்னர் அங்கிருந்து கொலோன் வந்தடைந்தார். அங்கு துறவற சபைத்தலைவர் ஒருவருக்கு உதவி செய்து அச்சபையை வளர்த்தெடுத்தார். பின்னர் அங்கிருந்து ரைன்(Rhein) என்ற நகருக்கு சென்று அங்கு பணியாற்றினார். இவர் தனது 43 ஆம் வயதில் இறந்தார்.

செபம்:
கலைகளை கற்றுத் தருபவரே எம் தலைவா! இன்றைய உலகில் வாழும் இறையியல் அறிஞர்கலை ஆசீர்வதியும். அறிவையும் ஞானத்தையும் தந்து, சிறந்த இறையியலாளர்களை உருவாக்கிட வரம் தர வேண்டுமாய் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Friday, 6 November 2015

இன்றைய புனிதர் 2015-11-07 குரு வின்செண்ட் குரோசி Vinzenz Grossi


பிறப்பு 9 மார்ச் 1845,
இறப்பு 7 நவம்பர் 1917,விகோபெல்லிக்னானோ Vicobellignano, இத்தாலி


முத்திபேறுபட்டம்: 1 நவம்பர் 1975, திருத்தந்தை 6 ஆம் பவுல்

வின்செண்ட் குரோசி தன்னுடைய இளம் வயதிலேயே, பள்ளியில் கற்கும்போது, தன்னுடன் படித்த சக மாணவர்கள் வியக்கும் வகையில் அனைவரையும் சிரிக்கவைப்பார். தினமும் தவறாமல் ஆலயத்திற்கு சென்று, பங்குத்தந்தைக்கு உதவி செய்து வந்தார். தன் கல்வியை முடித்தப்பிறகு, 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். பின்னர் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் நிறைந்த பங்கிற்கு அனுப்பப்பட்டார். அப்பங்கில் பல துன்பங்களை அனுபவித்தார். தகாத சொற்களால் அவமானப்படுத்தப்பட்டார். இருப்பினும் இவர் தன்னம்பிக்கையை இழக்காமல் அம்மக்களின் ஒற்றுமைக்காகவும், நலமான வாழ்வை சுமூகமான உறவை கொண்டு வருவதற்காகவும் அயராது உழைத்தார். இவரின் செயல்களை கண்டு அப்பங்கு மக்கள் அருட்தந்தைக்கு உதவினர். தங்களிடையே இருந்த எல்லாப் பிரச்சனைகளையும் அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக்கொண்டனர். பின்னர் வின்செண்ட் அம்மக்களின் ஒற்றுமையை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்காக காரிதாஸ் அமைப்பு ஒன்று ஏற்படுத்தினார். அவ்வமைப்பின் வழியாக சமூகப்பணிகளிலும் ஈடுபடவைத்தார். அதன்பிறகு இளைஞர்களுக்காக பல மன்றங்களையும் நிறுவி சிறப்பாக தன் மறைப்பணியை ஆற்றினார்.



செபம்:
கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கூறிய இயேசுவே! இன்றைய உலகில் வாழும் இளைஞர்களை ஆசீர்வதியும். வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியும் சாதித்து வாழ நினைக்கும் மனதைத் தாரும். தான் பிறந்த வீட்டிற்கும், நாட்டிற்கும் தாயாம் திருச்சபைக்கும், நல்ல பிள்ளைகளாக வாழ வாழ்ந்திட ஆசீர்வதியும், சமுதாயத்தை அழிப்பவர்களாக வளராமல், வாழ வைப்பவர்களாக மாறி வாழ வரம் தந்திட வேண்டுமென்று அருட்தந்தை வின்செண்ட் குரோசி வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2015-11-06 லிமோகெஸ் நகர் துறவி லியோனார்ட் Leonhard von Limoges


பிறப்பு5 ஆம் நூற்றாண்டு,பிரான்சு


இறப்பு559 (?)லிமோகெஸ் Limoges, பிரான்சு

பாதுகாவல்: விவசாயிகள், வீட்டு விலங்குகள், குதிரைகள், சிறைக்காப்பாளர்கள், பழ வியாபாரிகள், மலைவாழ் மக்கள்

இவரின் வரலாற்றைப் படிக்கும்போது, இவர் ஓர் உயர்தர குடும்பத்தைச் சார்ந்தவர் என்று அறியப்படுகின்றது. இவர் ஆயர் ரெமிஜியுஸ் என்றும் அழைக்கப்பட்டார். இவர் தான் குழந்தையாக இருக்கும் போதும், இளமைப்பருவத்திலிருக்கும்போதும், தன்னை துறவி என்று கூறி வந்துள்ளார். இவர் தனிமையாக காட்டில் வாழ்ந்துள்ளார். காட்டை சுற்றி வாழ்ந்த மக்களால் இவர் புனிதர் என்று போற்றப்பட்டுள்ளார்.

இவர் அரசாங்கத்தால் சிறைபிடித்து செல்லப்பட்ட மக்களிடத்தில் தனி அன்பு கொண்டு வாழ்ந்துள்ளார். சிறைவாழ் மக்கள் இவரை "தங்களின் அரசர்" என்று கூறியுள்ளனர். இவர் காட்டில் தன்னுடைய சிறிய குகையில் வாழ்ந்துக்கொண்டே துறவற மடம் ஒன்றையும் கட்டியுள்ளார். இவரின் புனிதமான வாழ்வைக் கண்ட சிலரும், இவரை பின்பற்றியுள்ளனர். இவர் தன்னை பின்பற்றிய மக்களுக்கென்று சபை ஒன்றை நிறுவி, அச்சபையின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இவர் இறந்தபிறகு, இவரின் கல்லறையானது, இன்று திருயாத்திரை தலமாக காட்சியளிக்கின்றது.


செபம்:
படைப்பின் பரம்பொருளே! இன்று காட்டில் வாழும் மக்கள் அனைவரையும் உம் கரத்தில் அர்ப்பணிக்கின்றோம். உமது இயற்கையை நேசித்து, அன்பு செய்து இயற்கையின் வழியாக உம்மைக் காணும் அம்மக்களை எல்லாவித ஆபத்துக்கள் இயற்கையின் சீற்றங்கள் அனைத்திலிருந்தும் காத்து, நல்வாழ்வை வாழ வரம் தந்து காத்திட வேண்டுமென்று மூவொரு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, 4 November 2015

இன்றைய புனிதர் 2015-11-05 குரு பெர்னார்டு லிஸ்டன்பெர்க் Bernhard Lichtenberg


பிறப்பு3 டிசம்பர் 1875,ஓலாவ் Ohlau, போலந்த்


இறப்பு5 நவம்பர் 1943,ஹோஃப் Hof, ஜெர்மனி                         

                               முத்திபேறுபட்டம்: 1964

இவர் மிக தைரியத்துடன் யூதர்களிடையே கிறிஸ்துவ விசுவாசத்தைப் பற்றி போதித்தார். 1899 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1928 ஆம் ஆண்டு பெர்லினில் யூதர் கூட்டம் ஒன்றில் கிறிஸ்துவ மறையைப் பற்றி பேசினார். இவர் மற்ற குருக்களுக்கு முன்மாதிரிகையாக திகழ்ந்தார். இவர் ஓர் சிறந்த ஆன்ம குரு என்ற பெயர் பெற்றார். இவர் 1941-1942 ஆம் ஆண்டுவரை கிறிஸ்துவ மறையைப் பற்றி பொது இடத்தில் பேசினார் என்பதற்காக சிறைபிடித்து செல்லப்பட்டார். அப்போது இவர் மீது சாட்டப்பட்ட அனைத்து பழிகளையும் மிகப் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டார். சாகும் வரை இவர் சிறையில் பல விதங்களில் கொடுமைப்படுத்தப்பட்டார். கசப்பான மற்றும் புளிப்பற்ற காடியை குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டார். கெட்டுப்போன அழுகிய உணவுப்பொருட்களை உண்ண வற்புறுத்தப்பட்டார். இதனால் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்டார்.

அப்போது இவர் ஏறக்குறைய 70 ஆம் வயதை அடைந்தார். முதியவரான இவரை அச்சிறையிலிருந்து, டாஹவ்(Dachau) வதை முகாமிற்கு மாற்றினர். அங்கு அவர் மிக மோசமாக நோய்வாய்ப்படவே, மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு சென்ற சில நாட்களில் மருத்துவப் பலனின்றி உயிர் இழந்தார்.


செபம்:
அன்பின் இறைவா! உமது இறை விசுவாசத்தைப்பரப்பி, இறுதிவரை உம்மில் வாழ்ந்து இறந்த பெர்னார்டைப்போல, ஒவ்வொரு குருக்களும் தங்களின் குருத்துவ மேன்மையை உணர்ந்து, உண்மையுள்ள ஊழியர்களாக வாழ்ந்து, சாட்சியம் புரிந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

Tuesday, 3 November 2015

இன்றைய புனிதர் 2015-11-04 கர்தினால் கார்ல் பொரோமேயோ Kardinal Karl Borromäus


பிறப்பு2 அக்டோபர் 1538,அரோனா Arona, இத்தாலி


இறப்பு நவம்பர் 1584மிலான் Milan, இத்தாலி

முத்திபேறுபட்டம்: 1602, திருத்தந்தை 5 ஆம் பவுல்
புனிதர்பட்டம்: 1610, திருத்தந்தை 5 ஆம் பவுல்
பாதுகாவல்: லூகானே மறைமாவட்டம், சால்ஸ்பூர்க் கல்லூரிகள், கொள்ளை நோயிலிருந்து

கில்பர்ட் பொரோமேயோ (Gilbert Borromeo) என்பவர் இவரின் தந்தை. இவர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது 12 வயது வரை அடிக்கடி தன் ஊரிலிருந்த துறவற இல்லத்திற்கு சென்று வந்தார். இவர் தனது 14 ஆம் வயதில் 1552 ல் கல்லூரிப் படிப்பிற்காக பாவியா(Pavia) என்ற நகருக்கு சென்றார். கல்லூரியில் படிக்கும்போது மிக மகிழ்ச்சியானவராக திகழ்ந்து, தன்னுடன் படித்த மற்ற ஏழை மாணவர்களுக்கும் உதவினார். இவர் படிக்கும்போதே, அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவ்வப்போது தன் கல்வியை கற்க முடியாமல் போனது.

இவர் 1559 ஆம் ஆண்டு தனது படிப்பை முடித்து முனைவர் பட்டம் பெறவிருக்கும்போது, இவரின் மாமா கர்தினால் ஜியோவானி ஆன்ஜலோ மெடீசி (Kardinal Giovanni Angelo Medici) 4ஆம் பயஸ் என்ற பெயர் கொண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கார்ல் தன் குழந்தைப் பருவத்திலிருந்தே அவரிடம்தான் வளர்ந்தார். கார்ல் தனது டாக்டர் பட்டத்தைப் பெற்றபின், உரோம் சென்று சிலகாலம் அங்கே திறமையுடன் பணியாற்றினார்.

1562 ஆம் ஆண்டு இவரின் 24 ஆம் வயதில் அவரின் அன்பு சகோதரர் ஃபெடரிகோ (Federigo) இறந்துவிடவே, தான் ஓர் குருவாக வேண்டுமென்று முடிவுசெய்து, 1563 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். குருவாகிய சில மாதங்களிலேயே மிலான் கர்தினால் கார்லை பேராயராக அறிவித்தார். பின்னர் தன் பணியை ஆற்றுவதற்கு கார்ல் பல இன்னல்களை அடைய வேண்டியதாக இருந்தது. இவர் பல நோன்புகளை மேற்கொண்டு, இரவும் பகலும் இடைவிடாமல் செபித்து, தன் கடமைகளை சிறப்பாக ஆற்றினார். இவர் தன் மறைமாவட்டத்தில் விசுவாசத்தைப் பரப்ப பெரிதும் உழைத்தார். குருத்துவம் வளர, மறைமாவட்டம் முழுவதும் சென்று, இறையழைத்தலை ஊக்குவித்தார். கைவிடப்பட்ட பெண்களை ஒன்று திரட்டி, அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டினார். பல கருத்தரங்குகளை வைத்து மக்களை இறைவன்பால் ஈர்த்தார். பேராயர் கார்ல் பொரோமேயோ 27 வயது கொண்ட இளைஞராய் இருந்ததால், பல பணிகளை திறம்பட ஆற்றி மக்களின் மனதில் இடம்பிடித்தார். ஏழைமக்கள் அனைவரும் கார்லை இதயத்தில் ஏற்றனர். 1576 ஆம் ஆண்டிலிருந்து, இவர் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட மக்களையும் கவனித்து, அவர்களுக்கு பணிவிடை புரிந்தார். கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான உணவு, உடை, மருந்துகள் அனைத்தையும் கொடுத்து, அவர்களை அன்போடு பராமரித்தார். பல பணிகளையும் ஒரே நேரத்தில் செய்த இவர் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் தண்ணீரும், ஒரு துண்டு ரொட்டி மட்டுமே உணவாக உட்கொண்டு, தனக்கு தேவையான சக்தியை கடவுளிடமிருந்து பெற்றார்.

பல பணிகளை செய்ய ஆண்டவரிடமிருந்து பலம் பெற்ற இவர், திடீரென்று காய்ச்சலால் தாக்கப்பட்டார். உடல் மிகவும் நலிவுற்றது. தன் பலம் அனைத்தையும் இழந்தவராய் காணப்பட்டார். இருப்பினும் இவரின் உதடுகள் மட்டும், கடவுளைப் புகழ்ந்த வண்ணமாகவே இருந்தது. இறுதியாக "கடவுளே இதே நான் வருகிறேன்" என்ற வார்த்தையைக் கூறி தனது 46 ஆம் வயதில் உயிர்நீத்தார்.


செபம்:
பலமளிப்பவரே எம் கடவுளே! மிக திறமையான கர்தினால் கார்ல் பொரோமேயோவை எம் திருச்சபைக்கு நீர் கொடையாகத் தந்ததை நினைத்து உம்மை போற்றி புகழ்கின்றோம். மிக சிறிய வயதில் உமது ஊழியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல பணிகளை ஆர்வமுடன் ஆற்ற அவருக்கு நீர் சக்தியை தந்தீர். அவரின் பரிந்துரையால் நாங்களும் உம்மிடமிருந்து பலம் பெற்று, எங்களுக்கென்று குறிக்கப்பட்டுள்ள பணிகளை திறம்பட ஆற்றி, அவற்றின் வழியாக உம்மை புகழ்ந்திட வரம் தாரும். 

Monday, 2 November 2015

இன்றைய புனிதர் 2015-11-03 அர்மாக் நகர் பேராயர் மலாக்கியஸ் Malachias von Armagh


பிறப்பு1095,அர்மாக் Armagh, அயர்லாந்து


இறப்பு1 அல்லது 2 நவம்பர் 1148,கிளேர்வாக்ஸ் Clairvaux, பிரான்சு

புனிதர்பட்டம்: 6 ஜூலை 1190, திருத்தந்தை 3 ஆம் கிளமெண்ட்

இவர் பேராசிரியர் ஒருவரின் மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை துறவற மடத்திற்கு சொந்தமான கல்லூரியில் பணிபுரிந்ததால், மலாக்கியுசும் அங்கே படித்தார். பின்னர் தனது கல்வியை முடித்தபின் 1119 ஆம் ஆண்டு, குருத்துவப்பட்டம் பெற்றார். பிறகு 1123 ஆம் ஆண்டு கொனோர்(Conor) நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு மீண்டும் 1129 ஆம் ஆண்டு அர்மாக் நகருக்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பேராயர் பதவியில் பல எதிர்ப்புகளை சந்தித்தார். இதனால் பல இன்னல்களை சந்தித்தார். தனது பணியை சரியாக செய்ய இயலாததால் 1136 ஆம் ஆண்டு மீண்டும் டவுன் (Down) என்ற நகருக்கு ஆயராக அனுப்பப்பட்டார். பல ஆண்டுகள் தன் ஆயர் பதவியில் சிறப்பாக பணியாற்றியப்பின் சிஸ்டர்சீயன் துறவற சபையை சார்ந்த பெர்னார்டு என்பவருடன் இணைந்து சில துறவற மடங்களைக் கட்டினார்.

பின்னர் மலாக்கியஸ் துறவற கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் உரோம் நகர் சென்று திருத்தந்தையை சந்திக்க எண்ணினார். அப்போதுதான் கடினமான நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.


செபம்:
நல்ல ஆயனாம் எம் இறைவா! ஆயர் மலாக்கியஸ் அடைந்த துயரைப்போலவே, இன்றும் பல ஆயர்கள் இன்னல்களை சந்திக்கின்றனர். எம் திருச்சபையில் உமக்காகத் துன்பப்படும் ஒவ்வொரு ஆயர்களுக்கும் எதையும் தாங்கும் இதயத்தைத் தாரும். நீரே அவர்களின் துன்பநேரங்களில் உடனிருந்து வழிநடத்தி, திடப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

இன்றைய புனிதர் 2015-11-02 லோட்ரிங்கன் நகர் துறவி மர்கரீத்தா Margareta von Lothringen


பிறப்பு 1463, லோட்ரிங்கன், பிரான்சு


இறப்பு2 நவம்பர் 1521,அர்கெண்டான் Argentan, பிரான்சு

இவர் லோட்ரிங்கன் அரசன் பிரட்ரிக் என்பவரின் மகள். இவர் தனது குழந்தை பருவத்திலிருந்தே தூரிங்கன் நாட்டு(Thüringen) புனித எலிசபெத்தைப்போல வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டார். எலிசபெத் மர்கரீத்தாவின் தூரத்து உறவினர் ஆவர். மர்கரீத்தா ஏழைகளின் வாழ்வில் அக்கறைக் கொண்டு வாழ்ந்தார். துறவியாக வேண்டுமென்றும் அதன் வழியாக பல ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்றும் விரும்பினார். ஆனால் அவரின் தந்தை, அவரின் 25 ஆம் வயதில் ரெனே டி அலேங்கோன் (Rene d’ Alencon) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். 4 ஆண்டுகள் மட்டுமே அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். பின்னர் தன் கணவர் இறந்துவிடவே, தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கிறிஸ்துவ விசுவாசத்தில் வளர்த்தார். பின்னர் தன் கணவரின் சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தார். பல கிறிஸ்துவ ஆலயங்கள் கட்டவும், கிறிஸ்துவ நிறுவனங்களுக்கும் உதவிகளை செய்தார். பின்னர் தன்னுடைய 3 பிள்ளைகளும் வளர்ந்து இவரைவிட்டுப் பிரிந்து செல்லவே, கார்மேல் கிளரீசியன் மடத்திற்கு சென்றார். அங்கு மற்ற துறவிகளுடன் சேர்ந்து, அர்கெண்டானில் துறவற இல்லம் ஒன்றைக் கட்டினார். அங்குதான் இவர் துறவற பயிற்சிகளைப் பெற்று, வார்த்தைப்பாடுகளைப் பெற்றார். ஆன்மீக வாழ்வில் சிறந்து வாழ்ந்த இவர் துறவியான சில ஆண்டுகளிலேயே இறந்தார். இன்று இவரின் கல்லறைமேல் பங்கு ஆலயம் ஒன்று கட்டுப்பட்டுள்ளது.


செபம்:
எளியோரின் நண்பனே எம் தலைவா! ஏழைகள்பால் அக்கறைக்கொண்டு வாழ புனித மர்கரீத்துக்கு உதவி செய்தீர். தன்னிடம் உள்ளதையெல்லாம் மற்றவர்க்கு கொடுத்து வாழ, நல் மனதை அருளினீர். அவரின் பரிந்துரையால், எங்களின் அயலாரை நேசித்து, பகிர்ந்து வாழ நல்மனம் தர தந்தையே இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Sunday, 1 November 2015

இன்றைய புனிதர் 2015-11-01 யேசு சபை குரு ரூபர்ட் மாயர் Rubert Mayer SJ


பிறப்பு 23, ஜனவரி 1876, ஸ்டுட்கார்டு Stuttgart, ஜெர்மனி


இறப்பு 1 நவம்பர் 1945, மியூனிக் München, ஜெர்மனி

முத்திபேறுபட்டம்: 3 மே 1987, திருத்தந்தை 2 ஆம் ஜான்பவுல்

இவர் தனது இளம் வயது கல்வியை ஸ்டுட்கார்டில் கற்றார். பின்னர் தனது தத்துவயியல் ஃப்ரைபூர்கிலும்(Freiburg), இறையியலை மியூனிக்கிலும், 5 ஆம் செமஸ்டர் இறையியலை தூபிங்கனிலும்(Tübingen) கற்றார். தன் குருத்துவப்பயிற்சியை ரோட்டன்பூர்க்கில்(Rottenburg) மேற்கொண்டார். மே மாதம் 2 ஆம் நாள் 1899 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1900 ஆம் ஆண்டில் தனது மறைப்பணியைத் தொடங்கினார். தனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்வதில் இவர் வல்லவராய் திகழ்ந்தார்.


இவர் 1906 ஆம் ஆண்டில் தனது மறைபரப்புப் பணியை சுவிட்சர்லாந்து, ஹாலந்து, ஜெர்மனி முழுவதிலும் ஆற்றினார். பிறகு 1912 ஆம் ஆண்டு பெட்டிங்கர் நகர் கர்தினால் (Kardinal von Bettinger) இவரை மியூனிக் திரும்பி வரும்படி அழைத்தார். 1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் மூண்டது. அப்போது ரூபர்ட் மாயர், அனைவருக்கும் ஆறுதலாகவும், நம்பிக்கை அளிப்பவராகவும் திகழ்ந்தார். இவர் பல முறை போரில் ஈடுபட்ட படைவீரர்களை காப்பாற்றினார். இதனால் இவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். இருப்பினும் தனது மறையுரையால் மக்களை காத்தார். இவர் தன்னுயிரை ஈந்து மற்றவர்களுக்கு பலமுறை வாழ்வளித்தார். 1921ஆம் ஆண்டு முதல் உலகப்போர் முடிவுற்றபோது, ஏறக்குறைய ஒரு மாதத்தில் 70 முறை மறையுரை ஆற்றி, மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டி நம்பிக்கை வழங்கினார். இவர் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட பல அநீதிகளை எதிர்த்தார். இதனால் 1937 ஆம் ஆண்டு சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார். இவருக்கு மறையுரை ஆற்ற தடைவிதிக்கப்பட்டது. ஏறக்குறைய ஆறு மாதங்கள் தண்டனையை அனுபவித்தார். அதன்பிறகு மீண்டும் மறைபணியை ஆற்ற அனுமதிக்கப்பட்டார். மறைப்பணியை ஆற்றத் தொடங்கிய சில நாட்களில் மீண்டும் சாக்ஸஹவுசன் (Sachsenhausen) என்ற இடத்திலிருந்து வதை முகாமிற்கு(Concentration Camp) பிடித்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பின்னர் நோயால் தாக்கப்பட்டார். அதன்பிறகு 5 ஆண்டு காலம் பவேரியாவில் இருந்த எட்டல் துறவறமடத்தில் வாழ்ந்தார். அங்கு 5 மாதங்கள் மட்டுமே அவரால் திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஆற்றமுடிந்தது. மியூனிக்கில் உள்ள ஆலயத்தில் திருப்பீடத்தின் முன் சிலுவையை நோக்கி செபிக்கும்போது இறைவனடி சேர்ந்தார். இன்று மியூனிக்கில் இவரின் கல்லறை மேல் ஆலயம் கட்டப்பெற்று புகழ்வாய்ந்த ஆலயமாக திகழ்கின்றது.


செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! முதல் உலகப்போரில் இறந்த அனைத்து ஆன்மாக்களையும் உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். இவர்கள் இவ்வுலகில் செய்த சிறுசிறு பாவங்களையும் மன்னித்து, உம் வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.