Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 3 November 2015

இன்றைய புனிதர் 2015-11-04 கர்தினால் கார்ல் பொரோமேயோ Kardinal Karl Borromäus


பிறப்பு2 அக்டோபர் 1538,அரோனா Arona, இத்தாலி


இறப்பு நவம்பர் 1584மிலான் Milan, இத்தாலி

முத்திபேறுபட்டம்: 1602, திருத்தந்தை 5 ஆம் பவுல்
புனிதர்பட்டம்: 1610, திருத்தந்தை 5 ஆம் பவுல்
பாதுகாவல்: லூகானே மறைமாவட்டம், சால்ஸ்பூர்க் கல்லூரிகள், கொள்ளை நோயிலிருந்து

கில்பர்ட் பொரோமேயோ (Gilbert Borromeo) என்பவர் இவரின் தந்தை. இவர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது 12 வயது வரை அடிக்கடி தன் ஊரிலிருந்த துறவற இல்லத்திற்கு சென்று வந்தார். இவர் தனது 14 ஆம் வயதில் 1552 ல் கல்லூரிப் படிப்பிற்காக பாவியா(Pavia) என்ற நகருக்கு சென்றார். கல்லூரியில் படிக்கும்போது மிக மகிழ்ச்சியானவராக திகழ்ந்து, தன்னுடன் படித்த மற்ற ஏழை மாணவர்களுக்கும் உதவினார். இவர் படிக்கும்போதே, அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவ்வப்போது தன் கல்வியை கற்க முடியாமல் போனது.

இவர் 1559 ஆம் ஆண்டு தனது படிப்பை முடித்து முனைவர் பட்டம் பெறவிருக்கும்போது, இவரின் மாமா கர்தினால் ஜியோவானி ஆன்ஜலோ மெடீசி (Kardinal Giovanni Angelo Medici) 4ஆம் பயஸ் என்ற பெயர் கொண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கார்ல் தன் குழந்தைப் பருவத்திலிருந்தே அவரிடம்தான் வளர்ந்தார். கார்ல் தனது டாக்டர் பட்டத்தைப் பெற்றபின், உரோம் சென்று சிலகாலம் அங்கே திறமையுடன் பணியாற்றினார்.

1562 ஆம் ஆண்டு இவரின் 24 ஆம் வயதில் அவரின் அன்பு சகோதரர் ஃபெடரிகோ (Federigo) இறந்துவிடவே, தான் ஓர் குருவாக வேண்டுமென்று முடிவுசெய்து, 1563 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். குருவாகிய சில மாதங்களிலேயே மிலான் கர்தினால் கார்லை பேராயராக அறிவித்தார். பின்னர் தன் பணியை ஆற்றுவதற்கு கார்ல் பல இன்னல்களை அடைய வேண்டியதாக இருந்தது. இவர் பல நோன்புகளை மேற்கொண்டு, இரவும் பகலும் இடைவிடாமல் செபித்து, தன் கடமைகளை சிறப்பாக ஆற்றினார். இவர் தன் மறைமாவட்டத்தில் விசுவாசத்தைப் பரப்ப பெரிதும் உழைத்தார். குருத்துவம் வளர, மறைமாவட்டம் முழுவதும் சென்று, இறையழைத்தலை ஊக்குவித்தார். கைவிடப்பட்ட பெண்களை ஒன்று திரட்டி, அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டினார். பல கருத்தரங்குகளை வைத்து மக்களை இறைவன்பால் ஈர்த்தார். பேராயர் கார்ல் பொரோமேயோ 27 வயது கொண்ட இளைஞராய் இருந்ததால், பல பணிகளை திறம்பட ஆற்றி மக்களின் மனதில் இடம்பிடித்தார். ஏழைமக்கள் அனைவரும் கார்லை இதயத்தில் ஏற்றனர். 1576 ஆம் ஆண்டிலிருந்து, இவர் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட மக்களையும் கவனித்து, அவர்களுக்கு பணிவிடை புரிந்தார். கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான உணவு, உடை, மருந்துகள் அனைத்தையும் கொடுத்து, அவர்களை அன்போடு பராமரித்தார். பல பணிகளையும் ஒரே நேரத்தில் செய்த இவர் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் தண்ணீரும், ஒரு துண்டு ரொட்டி மட்டுமே உணவாக உட்கொண்டு, தனக்கு தேவையான சக்தியை கடவுளிடமிருந்து பெற்றார்.

பல பணிகளை செய்ய ஆண்டவரிடமிருந்து பலம் பெற்ற இவர், திடீரென்று காய்ச்சலால் தாக்கப்பட்டார். உடல் மிகவும் நலிவுற்றது. தன் பலம் அனைத்தையும் இழந்தவராய் காணப்பட்டார். இருப்பினும் இவரின் உதடுகள் மட்டும், கடவுளைப் புகழ்ந்த வண்ணமாகவே இருந்தது. இறுதியாக "கடவுளே இதே நான் வருகிறேன்" என்ற வார்த்தையைக் கூறி தனது 46 ஆம் வயதில் உயிர்நீத்தார்.


செபம்:
பலமளிப்பவரே எம் கடவுளே! மிக திறமையான கர்தினால் கார்ல் பொரோமேயோவை எம் திருச்சபைக்கு நீர் கொடையாகத் தந்ததை நினைத்து உம்மை போற்றி புகழ்கின்றோம். மிக சிறிய வயதில் உமது ஊழியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல பணிகளை ஆர்வமுடன் ஆற்ற அவருக்கு நீர் சக்தியை தந்தீர். அவரின் பரிந்துரையால் நாங்களும் உம்மிடமிருந்து பலம் பெற்று, எங்களுக்கென்று குறிக்கப்பட்டுள்ள பணிகளை திறம்பட ஆற்றி, அவற்றின் வழியாக உம்மை புகழ்ந்திட வரம் தாரும். 

No comments:

Post a Comment